சுருங்கிய முகம், ஹிட்லர் மீசையுடன் சீன அதிபரை தவறாக சித்தரித்த ஓவியர் கைது

124

சீனாவில் கலை மற்றும் கலாசார துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கலாசாரத்துறையில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், நையாண்டி ஓவியங்கள் விவகாரத்தில் அதிபர் ஜின்பிங் சில நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஷாங்காய் நகரை சேர்ந்த டெய் ஜியான்யாங் என்ற ஓவியர், அதிபர் ஜின்பிங்கின் படத்தை நையாண்டித்தனமாக வரைந்துள்ளார். அந்த படத்தில் அதிபரின் முகம் சுருங்கியிருந்ததுடன், ஹிட்லரைப்போன்ற மீசையும் வரையப்பட்டிருந்தது. அதிபரின் இந்த ஓவியம் இணையதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் சிறந்த புகைப்பட கலைஞரான டெய் ஜியான்யாங், ஜின்பிங்கின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து டெய் ஜியான்யாங்கை ஷாங்காய் நகர பொலிசார் பிடித்து, சாங்கிங் மாவட்டத்தில் சிறை வைத்துள்ளனர். அவர் முறைப்படி கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தகவலை சீன மனித உரிமை ஆணையமும் உறுதிப்படுத்தி உள்ளது.