செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய என்ஜினியர் கைது

115

சென்னை சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவரில் நேற்று பகல் 12 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஏறி திடீர் போராட்டம் நடத்தினார்.

கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் கூச்சல் போட்டபடி இருந்தார். அந்த பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து, அவரை கீழே இறங்க சொன்னார்கள். பின்னர் அந்த இளைஞர்கள் செல்போன் டவரிலும் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கீழே இறக்க முற்பட்டனர். ஆனால் வாலிபர் கீழே இறங்க மறுத்தார். காப்பாற்ற முயன்ற இளைஞர்களை காலால் எட்டி உதைத்தார். இதனால் போலீசுக்கும், தீயணைக்கும் படைக்கும் தகவல் பறந்தது.

சைதாப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் தங்கராஜ் தலைமையில் போலீஸ் படையினரும், தீயணைக்கும் வீரர்களும் விரைந்து வந்தனர். செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கீழே இறக்கினார்கள். மாலை 4 மணி அளவில் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

கீழே இறக்கப்பட்ட வாலிபர், போலீசார் மீதும், பொதுமக்கள் மீதும் கல்வீசி தாக்கினார். இதனால் பொதுமக்கள் அவரை திருப்பி தாக்கினார்கள். போலீசார் அவரை பத்திரமாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.

201602020558385034_The-fight-got-into-the-cell-phone-tower-in-Chennai-engineer_SECVPF

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலமானது

எனது பெயர் ஜெயபாலன் (வயது 24). திருச்சி எனது சொந்த ஊர். எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.10,500 சம்பளத்தில் வேலை பார்த்தேன். சென்னையில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, என்னால் வேலைக்கு போக முடியவில்லை. இதனால் எங்கள் கம்பெனி நிர்வாகம், என்னை வேலை நீக்கம் செய்து விட்டது.

எனது தோழிக்கும் வேலை போய் விட்டது. என்னுடன் வேலை செய்த 300 பேரின் வேலை பறிபோய் விட்டது. எங்களுக்கு 1 மாத சம்பளமும் கொடுக்கவில்லை. வேலை இழந்த எங்களுக்கு மீண்டும் வேலை கேட்டும், 1 மாத சம்பள பாக்கி தொகையை கேட்டும், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியதால், ஜெயபாலன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயபாலன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்றும் போலீசார் கூறினார்கள்.

ஜெயபாலன், மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும், இதனால் கோர்ட்டு அனுமதித்தால், அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கவும், ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தார்கள்.