சுஷ்மா சூறாவளி

137

ஒரு பத்து வருடங்களின் முன்னர் சுஷ்மா சுவராஜ் என்றால் நம்மாட்கள் பலரிற்கு யாரென்றே தெரியாது. ஏதாவது இந்திப்பட நாயகியா என்றும் கேட்பார்கள். அதிகமேன் ஒரு பதினைந்து வருடங்களின் முன்னர் இந்தியாவிலேயே அவரை அதிகமாக தெரியாது. ஆனால் இன்று.
இந்தியாவின் செய்திகளுடன் உலகமெல்லாம் சுற்றிவரும் ஒருவர். மத்திய பா.ஜ.க அரசில் தீர்மானமெடுக்கும் வல்லமைமிக்க இந்திய இரும்புப் பெண்மணி என்கிறார்கள். அரசியலில் அறிமுகமான சில காலத்திலேயே இந்தியாவின் முன்வரிசை பெண் தலைவராகிவிட்டார் சுஷ்மா.
சுஷ்மா என்றாலே பரபரப்பு, சர்ச்சையென்றிருக்கும் போதுதான் அண்மையில் இலங்கை வந்து சென்றிருக்கிறார். இரண்டுநாள் குறுகிய பயணத்தில் இப்பொழுது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான எல்லா விடயங்களையும் பற்றியும் பேசி
விட்டு சென்றுள்ளார் சுஷ்மா. இந்த வருடத்தில் இனப்பிரச்சனை தீர்வை அல்லது தீர்விற்கான முன்னோடி ஆயத்தங்களை கண்டுவிடலாமென்ற தமிழர்களின் நம்பிக்கக்கு மேலும் உற்சாக ரொனிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு சென்ற காலம். முதன்முதலில் ஊடகங்களுடன் பேசிய போது இந்தியாவைத்தான் கடுமையாக தாக்கிப் பேசினார். தன்னை கவிழ்த்து விழுத்தியதில் இந்தியாவின் பங்கு முக்கியமாக இருந்ததாக புலம்பினார். தனது வல்லமையால் எதிராளிகளை கூறுபோட்டு வைத்திருந்தபோது, இந்திய உளவுத்துறை
அதிகாரியொருவர்தான் எல்லோரையும் ஓரணியில் திரட்ட பிள்ளையார் சுழி போட்டதென கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
யுத்தத்தின் பின்னரும் இலங்கை இனப்பிரச்சனை இழுபட்டுக் கொண்டே செல்வதை விரும்பாத இந்தியா உள்ளிட்ட
சர்வதேச நாடுகள், சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் பேசித்தீர்த்து வைக்க முயன்றபோது மகிந்த ராஜபக்ச குறுக்கே நின்றதன் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது. சர்வதேச சக்திகளின் காய்நகர்த்தலில் மகிந்த ராஜபக்சவின் போர்வெற்றிவாத சாம்ராஜ்யம் சரிந்து விழுந்து விட்டது.
கிட்டத்தட்ட இலங்கையின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லத்தக்க இந்தக்காலத்தில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வொன்றை எட்டிவிட வெளிச்சக்திகள் எல்லோரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால்த்தான் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வெளிவிகார அமைச்சின் அதிகாரிகள் கூமாரமடித்தே தங்கவிட்டார்கள் இலங்கைக்கு வரும் சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்க.இந்திய வெளிவிவகார அமைச்சர் வந்து செல்ல, மறுபக்கத்தால் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வந்திறங்கினார். அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு விஜயங்
களும் அரசியலரங்கில் அதிகம் கவனிக்கப்பட்டாலும், சுஷ்மாவின் விஜயம்தான் அதிகம் அதிர்வை ஏற்படுத்தியது.

இரும்பு பெண்மணி அடைமொழிக்கேற்ப சொல்ல வேண்டியவற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். தமிழ்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பில் சுஷ்மா சொன்ன ஒரு விடயம்தான் ஹைலைட். இந்தியா எப்பொழுதும் நீதியின் பக்கமே நிற்கும். தமிழர் விவகாரத்தில் நியாயமான தீர்வு கிடைக்க அனைத்து முயற்சிகளும் இந்தியா செய்யும் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.சுஷ்மாவின் விஜயத்தின் போது சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகின. ஜனாதிபதி, பிரதமர், தமிழ்தேசிய கூட்டமைப்பு, மலையக தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்தார். இதைவிட, இருநாட்டுக் கிடையிலும் சிக்கலுக்குரியதாக மாறிவரும் மீனவர் விவகாரம் தொடர்பாகவும் பேசினார்.
மீனவர் விவகாரத்தில் முதன்முறையாக இந்தியத்தலைவர் ஒருவர் மிக வெளிப்படையாக பேசிய நிகழ்வு சுஷ்மாவின் வருகையில் நிகழ்ந்தது. உணர்வுபூர்வமான இந்த பிரச்சனையை தீர்க்க மூன்று வருடங்களாவது ஆகும் என்ற சுஷ்மா, இலங்கை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினரை இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்களின் அரசியல் விடிவு காலத்திற்கு எல்லாம் கூடிவந்த காலமாக இது இருக்கலாம் போல்த்தான் தெரிகிறது. சர்வதேச அபிப்பிராயங்களும், பிராந்திய அபிப்பிராயங்களும் வேறுவேறு திசையில் இருந்தது ஒரு காலம். அதுவே, இலங்கையில் குழப்பம் நீடிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது. இப்பொழுது எல்லாம் கூடி வந்துள்ளதைப் போலத்தான் தெரிகிறது.