இரக்கமற்ற ஒரு காதல் கதை!

857

-அ.யேசுராசா

எல்டர் றியஸனோவின் நெறியாள்கையில், ஏ குரூயல் ரொமான்ஸ் (இரக்கமற்ற ஒரு காதல் கதை – 142 நிமிடம்) என்னும் ரஷ்ய மொழித் திரைப்படம், 1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது@ 1985 இல், ரஷ்ய தேசியத் திரைப்பட விழாவில் இது, விருதினையும் வென்றது! அலெக்சாந்தர் ஒஸ்ரோவ்ஸ்கியால் 1878 இல் எழுதப்பட்ட, சீதனமில்லாத மணப்பெண் என்னும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டதே இத்திரைப்படம். திரைப்படமென்ற வகையில், உணர்ச்சிகரமான ஒரு காவியம் எனச் சொல்லத்தக்க வகையில் இதனை உருவாக்கியிருக்கிறார் நெறியாளர்.2006 ஆம் ஆண்டின் முன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புறநிலைப் படிப்புகள் அலகின் அனுசரணையில் இயங்கிய திரைப்பட வட்டத்தில், இத்திரைப்படம் இரண்டு தடவைகள் காட்டப்பட்டமை குறிக்கத்தக்கது.

லரீஷா என்னும் அழகிய பெண், அவளின் தாய் ஒகுடலோவா, காதலன் சேர்கயேவிச் பரட்டோவ், லரீஷாவை மணக்க விரும்பும் தபாலதிகாரி யூலி கபிட்டோ னோவிச், பர்மியோனோ விச்க்னுரோவ் என்னும் செல்வந்தன், லரீஷாவின் சிறுவயது நண்பனும் வியாபாரியுமான வாஸ்யா ஆகிய ஆறு பாத்திரங்கள் முக்கியமானவையாகவுள்ளன கதை இவர்களைச் சுற்றியே நகர்கின்றது. கௌரவமான – ஆனால் தற்போது செல்வ வளம் குன்றிய – குடும்பத்தைச் சேர்ந்த, அழகும் உணர்வு வெளிப்பாடும் கொண்ட இளம் பெண் லரீஷா. வொல்கா நதியில் பயணம் மேற்கொள்ளும் – ஸ்வளோ என்னும் பெயர்கொண்ட – சிறிய ஆடம்பரக் கப்பலின் சொந்தக்காரனான பரட்டோவ், அவளை விரும்பி நெருக்கமாகப் பழகுகிறான்.லரீஷாவும் அவனைக் காதலிக்கிறாள் தாயும் அத்தொடர்பை விருப்புடன் அங்கீகரிக் கிறாள். தபாலதிகாரி யூலி கபிட்டோனோவிச்சும் லரீஷாவை மணக்க விரும்பி, தனது எண்ணத்தை வெளிப்படுத்திப் பழகுகிறான். ஆனால் அவன் அந்தஸ்தில் குறைந்தவனாகக் கருதப்படுகிறான். ஏனைய க்னுரோவ், வாஸ்யா ஆகிய இருவருங்கூட லரீஷாமீது கண்வைத்திருக்கின்றனர். ஒருநாள் திடீரென பரட்டோவ் காணாமற்போகிறான்.

ஒரு வருடம் கழிகிறது. இச்சூழ்நிலையில், தன்னை வங்கிப் பணிப்பாளரெனச் சொல்லிக் கொண்டு குல்யேவ் என்பவன் லரீஷாவை மணக்க முனைகிறான் பெறுமதியான பரிசுப்பொருளையும் வழங்கு கிறான். தாயின் அறிவுறுத்தலில், வேறுவழியின்றி லரீஷாவும் சம்மதிக்கிறாள். ஆனால், அவன் பணிப்பாளர் அல்ல வங்கியின் காசாளர்- பெரும் தொகையை மோசடி செய்தவன் – என, பொலிஸ் அவனைக் கைதுசெய்கிறது. விரக்தியடையும் லரீஷா இனி, தன்னை விரும்பி முதலில் கேட்கும் ஒருவனையே மணப்பதென முடிவெடுக்கிறாள். அந்த வாய்ப்பு யூலி கபிட்டோ னோவிச்சுக்குக் கிட்டுகிறது தாயும் அரைகுறையாகச் சம்மதம் தெரிவிக்கிறாள். தனது விதி இதுவென லரீஷா நினைத்துக் கொள்கிறாள். தனது வீட்டில் விருந்தொன்றை ஒழுங்குசெய்து, க்னுரோவையும் வாஸ்யாவையும் கலந்துகொள்ள கபிட்டோ னோவிச் அழைக்கிறான். அவ்வேளை திடீரெனத் திரும்பிவந்த பரட்டோவையும் விருப்பமின்றியே (லரீஷாவினதும் தாயினதும் வற்புறுத்தலினால்) அழைக்கநேர்கிறது.

தனது பெருமை யைக் காட்டவேண்டு மென்பதே கபிட்டோனோவிச்சின் நோக்கம். ஏனெனில், அந்தஸ்து குறைந்தவனென மற்றவர்கள் அவனை எப்போதும் அலட்சியப்படுத்தியே வந்தனர். பரட்டோவ் தனது ஸ்வளோ என்னும் கப்பலை வாஸ்யாவுக்கு விற்றுவிடு கிறான். ஏற்கெனவே ஒரு பணக்காரப் பெண்ணுடன் அவனுக்குத் திருமணப்பதிவும்நடந்துள்ளது அவளது செல்வத்துக்காகவே அவன் அவ்வாறு செய்தான். ஆனால் லரீஷா திருமணம் செய்யப்போவது அவனுக்கு ஏமாற்றமளிக்கிறது கபிட்டோனோவிச் தன்மீது காட்டும் வெறுப்பினால், அவனுக்குப் பாடம் கற்பிக்கவும் எண்ணுகிறான். எனவே, விருந்தின்போது றொபின்சன் என்ற தனது நண்பன்மூலம் காரமான மதுக்கலவையைச் செய்தும், கபிட்டோனோவிச்சைத் திரும்பத் திரும்பக் குடிக்கப்பண்ணியும் மயங்கச் செய்தபின், தன்னுடன் வரும்படி லரீஷாவை அழைக்கிறான். அவன்மீது ஆழ்ந்த காதல் கொண்டிருந்த லரீஷா, அவனது பேச்சுக்கு எடுபடுகிறாள். தாய் தடுப்பதையும்மீறி வீட்டைவிட்டுச் செல்கிறாள். க்னுரோவ், வாஸ்யா, பரட்டோவைச் சுற்றிக் காணப்படும் ஜிப்சிக் குழுவினர் எல்லோரும் ஸ்வளோ கப்பலில் உல்லாசப் பயணம் செல்கின்றனர்.

ஆட்டமும் பாட்டுமாக ஒரே குதூகலம்! பலரின் வேண்டுகோள்படி லரீஷா இனிமையாகப்பாடுகிறாள், பின்னர் ஆடுகிறாள். தனது அறைக்கு அவளை அழைத்துச் செல்லும் பரட்டோவ், அவளுடன் உடலுறவு கொள்கிறான். விடிந்ததும், அவளை வீடு செல்லும்படியும், அதுதான் அவளுக்கு நல்லதென வும் சொல்கிறான் அவள், தன்னை மனைவியாக ஏற்கும்படி அவனிடம் கேட்கிறாள். அவன் அது இயலாது எனச் சொல்ல, அவள் காரணம் கேட்டதில் – தான் சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளதாக மோதிரத்தைக் காட்டித் தனது திருமணப் பதிவை வெளிப்படுத்துகிறான். இதை ஏன் முதலில் சொல்லவில்லையெனக் கேட்கும் லரீஷா, கடவுள் இல்லை எனச் சொல்லி, ஏமாற்றத்தில் நொருங்கி அழுகிறாள். அவனை அங்கிருந்து போய்விடுமாறும் கத்துகிறாள்.தனது பரிதாப நிலையையும் உணர்கிறாள்.
அவளின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்த, க்னுரோவும் வாஸ்யாவும் முனைகின்றனர். பரீசில் நடைபெறும் உலகக்கண்காட்சிக்கு அவளை யார் தன்னுடன் அழைத்துச் செல்வ தெனத் தீர்மானிக்க, கப்பலின் இன்னொரு பகுதியில், நாணயத் தைச் சுண்டிப் பூவா தலையா எனப் பார்க்கின்றனர். சிறிய வள்ளத்தில் வந்து, கப்பலின் அடிப்புறத்தால் ஏறிவரும் கபிட்டோனோவிச் இதனைக் காண்கிறான். நாணயச் சுண்டுதலில் வென்றுவிட்ட க்னுரோவ் லரீஷாவை அடைய உதவுவதாக, வாஸ்யா வாக்களிக்கிறான். பின்னர் வாஸ்யா வைக் காணும் லரீஷா, தான்  எல்லாவற்றையும் இழந்துவிட்ட தாகக் கூறி, தனக்கு உதவும்படி கேட்கிறாள். அவன் மௌனம் காக்கிறான்.

நீயும் நானும் சிறுவயதுமுதல் சகோதரராகப் பழகினோமே என நினைவூட்டுகிறாள். அவனோ தான் வாக்களித்துவிட்டதைக் கூறி விலகிச் செல்கிறான். க்னுரோவ் தனிமையில், நிலைமையை விளக்கி – தன்னுடன் பரீஸ் வரும் படியும், தேவையான பாதுகாப்பையும் செல்வத்தையும் வழங்குவதாகவும், தான் ஏற்கெனவே மணமானவனானாலும் அவளுக்குப் பழி ஏதும் ஏற்படாதவாறு பாதுகாப்பதாகவும், இதமாக அவளிடம் கூறுகிறான். லரீஷா துயருடன் மௌனங் காக்கிறாள்.மேல் தளத்துக்கு வரும் கபிட்டோனோவிச், அவளை அவமதித்ததற்காக மற்றவர்களைத் தான் பழிவாங்கப் போவதாகவும், அவளைப்பாதுகாப்பதாகவும் – தன்னுடன் வந்துவிடும்படியும், லரீஷாவிடம் சொல்கிறான். அவளை மன்னிப்பதாகவும் தான் அவளை இப்போதும் நேசிப்பதாகவும் கூறுகிறான். அவளோ, தன்னை அவன் பாதுகாப்ப தாகச் சொல்வதே தனக்கு அவமரியாதை என்றும், தானே தன்னைத் தண்டிக்கப்போவதாகவும் சொல்வதோடு, அவனைக் காதலிக்க முடியாதெனவும் மறுக்கிறாள்.

விலகிச் செல்லும் அவளின் கால்களைப் பிடித்து, அவன் கெஞ்சு கிறான். தான் காதலைத் தேடியதாகவும் எல்லோரும் தன்னை ஒரு பொருளாக – விளையாட்டுப் பொம்மையாக – கருதியதாகவும், தன்னை ஒரு மனுஷ ஜீவியாகக் கருதவில்லையெனவும், அதனை இப்போது உணர்வதாகவும். ஒரு பொருளுக்கு உடைமையாளர் இருக்கவேண்டுமென்பதால் க்னுரோவுடன் தான் செல்லப்போவ தாகவும் கூறி, விரக்தியுடன் நடக்கிறாள். “நீ எனக்கு இல்லை என்றால் ஒருவருக்கும் இல்லை” எனக் கூறிய படியே, தான் கொண்டுவந்த சிறிய கைத்துப்பாக்கியை எடுத்து அவளைச் சுடுகிறான். அவள் காயம்பட்டுத் தடுமாறிய படி நடக்கிறாள். தனது செயலை நினைந்து துப்பாக்கியை வீசிவிட்டு அவன் கதறுகிறான்.

கண்ணாடிச் சுவருக்கு உட்புறமாக நிற்கும் க்னுரோவ், பரட்டோவ், வாஸ்யா ஆகியோரின் உருவங்களின் முன், கைகளைக் கண்ணாடியில் உரசியபடியே தடுமாறியபடி சென்று – மல்லாந்தபடி தரையில் லரீஷா விழுகிறாள். “உங்களுக்கு நன்றி” எனச் சொல்கிறாள். அவளது கண்கள் செருகுகின்றன. இறந்துவிடுகிறாள்! வானில் பறவைக்கூட்டம் கத்தியபடி பறக்கிறது. கப்பலின் வேறொரு தளத்தில், இதனை அறியாமலே ஜிப்சிக் கூட்டம் ஆடிப் பாடிக் குதூகலமாக இருக்கிறது! கொண்டாட்ட வாழ்வும் மரணமும்தான் இயற்கை என்பதைப்போன்ற உணர்வு துயருடன் மேலெழுகையில், படம் முடிகிறது.

திரைச் சுவடி இறுக்கமானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. லரீஷாவினதும் தாயினதும் வசதிகுன்றிய வாழ்நிலைமை – மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய விரும்பும் தாயின் முனைப்பு, களிப்பு நாட்டமும் மற்றவரைக் கவரும் திறனுங் கொண்ட பரட்டோவின் ஆளுமை – ஜிப்சிகளுடனான கொண்டாட்ட நெருக்கம், தன்னலனும்  பெருமையுங்கொண்ட க்னுரோவ் மற்றும் வாஸ்யாவின் நடத்தை, லரீஷாவின் மீதான காதலினால் கேலிக்குரியவனாகவும்  – (லரீஷா வினதும்) அலட்சியத்துக்கு ஆளாகுபவனுமான கபிட்டோனோவிச்சின் ( “…. அழகிய பெண்கள் எல்லாம் ஏன் எமாற்றுக்காரரை எப்போதும் விரும்புகின்றனர்?” என, ஒருமுறை லரீஷாவிடம் கேட்கிறான்!) பரிதாப நிலை, பரட்டோவின் ஆளுமை யால் ஈர்க்கப்பட்டு பித்துநிலை கொண்டவளாகவும் – மாறும் நிலைமைகளினால் துயரில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுபவளுமான லரீஷாவின் குணச்சித்திரம் என்பன, நன்கு வெளிப்படுமாறு திரைச்சுவடி அமைந்துள்ளது.

“பல வருடங்களுக்கு வைத்திருந்து மீண்டும் பார்க்கக்கூடிய திரைப்படங்களில் இதுவுமொன்று புத்தம் புதிதானதாயும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதுமான பெரிய ஆற்றினைப் போன்றது இது!.”

பரட்டோவின் துணிச்சலும் உடல் வலிமையும், தண்ணீரில் உள்ள கோச்வண்டியைத் தூக்கிக் கரையில் அவன் நிறுத்துவதன்மூலமும், தனது தலையில் தொப்பியின்மீது கண்ணாடிக் குவளையை வைத்துவிட்டு – இராணுவ அதிகாரி யான இவான் பெட்ரோவிச் செமியோ னோவ்ஸ்கியிடம் அதனைச் சுடச் சொல்வதன்மூலமும், லரீஷாவின் கையில் தனது கடிகாரத்தைப் பிடிக்கச் சொல்லிவிட்டு, அதனைக் குறிதவறாது சுடுவதன்மூலமும் வெளிப்படுத்தப்படுகின்றன. மறுவளமாக – லரீஷா கடிகாரத்தைப் பிடிக்கும்போது சுட வேண்டாமெனப் பதற்றத்துடன் தடுப்பதன்மூலமும், கோச் வண்டியைத் தூக்கிக் கரையில் விடமுயன்று முடியாமல் போனதன்மூலமும், கபிட்டோனோவிச்சின் பலவீனம் வெளிப்படுத்தப்படுகிறது. இறுதிப் பகுதியில் க்னுரோவ் தனது எண்ணத்தைச் சொன்னபின், கையறுநிலையில் துயருடனுள்ள லரீஷாவைக் காட்டியபின், வானத்தில் கத்தியபடி தனித்து அலையும் ஒரு பறவையைக் காட்டும் காட்சி நல்ல குறியீடு. அதுபோலவே, துறைமுகத்துக்கு அருகில் லரீஷாவும் கபிட்டோனோவிச்சும் தனிமையில் நிற்கும்போது, கப்பல் துறையில் ~ஸ்வளோ தரிக்கும் ஒலி கேட்கிறது. அடுத்து ஒரு வெடிச்சத்தம் கேட்க, லரீஷா பயத்தில் கபிட்டோனோவிச்மீது சாய்கிறாள் (அக்கப்பலில்தான் – ஒரு வருடத்தின் பின் – பரட்டோவ் திரும்புகிறான் ஆனால் லரீஷாவுக்கு அது தெரியாது). பின்னர் லரீஷாவுக்கு நிகழப்போகும் அவலத்தின் குறியீடுபோலவும் அது அமைகிறது!
லரீஷா, பரட்டோவ், கபிட்டோனோவிச் மிக ஆழமாக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். அவற்றைச் சித்திரிக்கும் நடிகர்கள் – லரீஷா குசேயேவா, நிகிற்றா மிக்ஹல்கோவ், அன்ட்ரேய் மியககோவ் ஆகியோரின் நடிப்பு அற்புதம்! துணைப் பாத்திரங்களான க்னுரோவ், வாஸ்யா, தாய் ஆகியவற்றைச் சித்திரிக்கும் – அலெக்ஸி பெட்ரெங்கோ, விக்ரர் புரொஸ்குரின், அலிசா ஃவ்ரியன்ட்லிக்ஹ் ஆகியோரும் அவ்வாறே பாத்திரங்களுக்கு உயிரூட்டுகின்றனர்.
புகழ்பெற்ற ரஷ்யப் பெண் கவிஞர்களான பெல்லா அக்மதுலினா, மரினா ஸ்வெத்தயேவா ஆகியோரின் கவிதைகள் சில பாடல்களாக இசையமைக்கப்பட்டு, திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன@ மனதைக் கவரும் இனிய பாடல்கள் அவை. இவற்றுடன், காட்சிப் பிம்பங்களுக்கு வலுவூட்டும் பொருத்தமான இசை படமெங்கும் விரவியிருக்கிறது. அன்ட்ரேய் பெட்றோவ் இதன் இசையமைப்பாளர் ஆவார். வாடிம் அலிசோவ் – வொல்கா நதியின் பல்வேறு தோற்றங்களையும், கப்பல் காட்சிகளையும், உறைபனித் தோற்றங்களையும், மற்றும் நிலக்காட்சிகளை யும், பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடு களையும் இயல்பும் அழகும் பொருந்த ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிப் பிம்ப அழகு திரைப்படத்துக்கு வலிமை சேர்க்கிறது.
இத்திரைக் காவியத்தை நெறியாள்கை செய்திருக்கும் எல்டர் றியஸனோவ், சுமார் 35 திரைப்படங்கள் வரை நெறியாள்கை செய்துள்ளார். 1977 இல் சோவியத் யூனியனின் அரச விருதும், 1984 இல், சோவியத் யூனியனின் மக்கள் கலைஞர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. வாக்களிக்கப் பட்ட சொர்க்கம் என்ற திரைப்படத்துக்காக, சிறந்த நெறியாளருக்கான நிகா விருதை 1991 இல் பெற்றார். 2015 கார்த்திகையில், தனது 88 ஆவது வயதில் காலமானார்.
ஓர் அமெரிக்க இரசிகர் எழுதிய பின்வரும் குறிப்புடன், இக்கட்டுரையை முடிக்கலாம்:
“பல வருடங்களுக்கு வைத்திருந்து மீண்டும் பார்க்கக்கூடிய திரைப்படங்களில் இதுவுமொன்று புத்தம் புதிதானதாயும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதுமான பெரிய ஆற்றினைப் போன்றது இது!.”

– 21.01.2016
நன்றி: ஜீவநதி (இதழ் 89)
மாசி 2016