‘பெண்’ பற்றிய புனைவு.

129

கலை இலக்கியங்களில்  ‘பெண்’ பற்றிய புனைவு.: சில குறிப்புகள்

-அப்துல் ஹக் லறீனா
(சென்ற இதழ் தொடர்ச்சி)

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்வோமே. அதில், ஆடலரசியான மாதவி கணிகையர் குலத் தோன்றலாய் இருந்தும் கோவலன் ஒருவனை மட்டுமே தன் காதலனாய் வரித்து அவனை அல்லும் பகலும் மகிழ்விப்பதிலேயே தன் வாழ்வைக் கழிக்கின்றாள். அவளோடு, ‘அணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கி விடுதல் அறியா விருப்பின’னாகி (சிலப்பதிகாரம்: 3:172-174) தன் மனைவி கண்ணகியை முற்றாக மறந்து வாழ்கிறான், கோவலன். இந்நிலையில், புகார் நகரில் இந்திரவிழா களைகட்டுகிறது. அதில் மாதவி பதினொரு வகையான ஆடல்களை நிகழ்த்துகின்றாள். கோவலனால் அதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை| ஊடல்கொள்கின்றான். அந்த ஊடலைத் தீர்க்க அவனோடு கடலாடச் செல்கிறாள், மாதவி. அவள் நீட்டிய யாழை வாங்கி கோவலன் கானல்வரி இசைக்கிறான். அதையடுத்து மாதவியும் பாடுகின்றாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலன் மனதில் சந்தேகம் துளிர்விடுகிறது.

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ் இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்தது ஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,

பொருள்: இவ்வாறு மாதவி பாடக் கோவலனும் கேட்டான். ‘யான் கானல்வரி பாடினேன். வஞ்சனையுடன் கூடிய பொய்ம்மைகள் பலவற்றையும் கூட்டும் மாயத்திலே வல்லவளாகிய இவளோ, தான் வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்’ என்று எண்ணினான். யாழிசையின் காரணமாக வைத்து, அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன்பாற் சேரத் தொடங்கியது. அதனால், உவா நாளில் விளங்கும் முழுநிலவு போன்ற தூய முகத்தினளாகிய மாதவியை, அவளோடு கைகோத்து வாழ்ந்திருந்த கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டான். ‘பொழுது இங்கே மிகவும் கழிந்தது. நாம் எழுவோமா?’ என மாதவி கேட்டதும், உடனே எழுந்து அவளுடன் கூடிச் செல்லாது தன் ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர, அவன் அவளைவிட்டுப் பிரிந்து தனியாகவே சென்றுவிட்டான். (சிலப்பதிகாரம்: 7: 52-1-7)
அத்தனை நாளும் கட்டிய மனைவியையும் மறந்து இன்பம் துய்க்கும் வரையில் உயிருக்குயிராக இருந்தவள், ஒரு சில நொடிகளில் வஞ்சனையும் பொய்ம்மையும் நிறைந்த மாயக்காரியாகிவிட்டாள். கோவலன் பாடியது போலவே காதல்குறிப்புடன் மாதவி பாடியதும் அவள் அவனுடைய சந்தேகத்துக்கு உரியவளாகிவிட்டாள். சம்புலாதேவி இருட்டிய பின் வந்ததைக் கண்டு அழகியான அவளுக்கு வேறோர் ஆடவனோடு ரகசியத் தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும். பெண்களின் மனம் கணந்தோறும் சலனமுறுவது. அதிலே உண்மைக்கு இடமில்லை என்று சொத்திசேனன் ஐயுற்றதற்கும் இங்கே கோவலன் ஐயுற்றதற்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை, தலைவனின் காமக்கிழத்தியான கணிகையர்குலப் பெண்- அரசகுலப் பெண்ணான மனைவி என்ற வேறுபாட்டைத் தவிர. மறுதலையாக, மாதவியிடம் போய்விட்டு வந்தான் என்று தெரிந்த நிலையிலும் ‘சிலம்புள கொண்ம்’ என்று சொல்லத்தக்கவளாகக் கண்ணகியைப் படைக்கிறார், இளங்கோ. அந்தப்புர அழகியரோடு சல்லாபத்தில் ஆழ்ந்துவிட்டு தந்தையின் அறிவுரையால் திருந்திவந்த சொத்திசேனனை மன்னித்து ஏற்கும் மனைவியாய் சம்புலாதேவி படைக்கப்பட்டுள்ளாள்.

ஆனால், ‘நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை’ என்று சொல்பவனாக இராமனின் பாத்திரப்படைப்பு இருக்கிறது. அதேவேளை, கற்பை நிரூபிக்க சீதையைத் தீக்குளிக்க வைக்கும் இராமனின் முன்னால், ‘நீயும் காடுகரையெல்லாம் அலைந்து திரிந்தாய் அல்லவா, உன்னுடைய கற்பு மட்டும் தூய்மையாய் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? எனவே, வா! இருவருமே அக்னிப் பரீட்சையில் ஒருவரை ஒருவர் நிரூபித்துக் கொள்வோம்’ என்று கோரும் தைரியமற்றவளாய் சீதை படைக்கப்பட்டிருக்கிறாள். எனவே, மிகத் தெளிவாகத் தவறுசெய்துவிட்டு வந்த நிலையிலும் ஆணின் தவறுகள் மன்னிப்புக்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. ஆனால், தவறே செய்யாத நிலையிலும் வெறுமனே ஊகத்தின், சந்தேகத்தின் அடிப்படையில்கூட ஒழுக்கத்தவறு, கீழ்படியாமை முதலான காரணங்களைக்காட்டி ஓர் ஆண் ஒரு பெண்ணை வெகு இலகுவாகத் தூக்கியெறிந்துவிட முடியும் என்ற சமுதாயத்தின் பாரபட்சநிலை இங்கே பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு, பாளி, சமஸ்கிருதம், சிங்களம், தமிழ் என மொழிகள் வேறுபட்டாலும் அவற்றில் தோன்றிய இதிகாசங்களிலாகட்டும் புராணங்களிலாகட்டும் பிற இலக்கியங்களிலாகட்டும். ‘பெண்’ பற்றிய புனைவு பல்வேறு பொதுமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. அவளுக்கு எதிரான பாரபட்சமும் அநீதிகளும், பண்பாட்டின் பெயரால் அவள்மீது வலிந்து திணிக்கப்பட்ட நியாயமற்ற சட்டதிட்டங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. ஒழுக்கமீறல் என்பது ஆண்-பெண் இருபாலாரும் சம்பந்தப்படும்போதுதான் நிகழ்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு பெண் மட்டுமே குற்றவாளியாய்ப் பார்க்கப்படுகின்றாள். பெண் என்பவள் மட்டும் கற்புக்கரசியாய் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள், அவளின் கற்பொழுக்கம் ஆணுடைய சந்தேகத்துக்கு இலக்காகும்பட்சத்தில் தன்னுடைய கற்பை அவள் அவனிடம், சமூகத்திடம் நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுகின்றாள். ஆணின் ஒழுக்கத்தவறு அவனின் சாதாரண இயல்பு என்று சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்மகன் சேற்றைக்கண்டால் மிதிப்பான்- ஆற்றைக்கண்டால் கழுவுவான்@, ஆண் கெட்டால் சம்பவம்- பெண் கெட்டால் சரித்திரம், பெண் சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு முதலான எண்ணற்ற சொலவாடைகளும் வழக்குமொழிகளும் ஆணுடைய ஒழுக்கமீறலை நியாயப்படுத்தி காலங்காலமாக சப்பைக்கட்டு கட்டவே பயன்பட்டுவருகின்றன.

புத்தரின் முற்பிறவிக் கதைகள் விகாரைகளில் பாராயணம் செய்யப்படுகின்றன. இராமாயணம் கோவில்களில் கதா காலேட்சபமாய் உரைக்கப்படுகின்றது. அவற்றுக்கென ஒரு புனிதத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. புதுப்புது இலக்கிய வடிவங்களில் அவற்றின் கதைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் சொல்லப்பட்டும் சித்திரிக்கப்பட்டும் வரும் அன்றைய பெண்ணின் விம்பமே சமுதாயத்தில் இன்று வாழும் பெண்ணின் விம்பமாகவும் மிக இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டு, காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
பெண்ணை பாதாதிகேசமாகவும், கேசாதிபாதமாகவும் வர்ணித்த பண்டைய காவியங்களாகட்டும் சிற்றிலக்கியங்களாகட்டும், பிற்காலத்தில் பக்திநெறியைப் போற்றிப் பெண்வெறுப்பை வலியுறுத்தி பெண்ணை ‘மாயப்பிசாசாகவும்’, அவளது அவயவங்கள் அருவருப்பானவையாகவும் சித்திரிக்கப்படும் சித்தர்பாடல்களாகட்டும், அவற்றில் ‘பெண்’ என்பவள் வெறுமனே ‘உடலாக, ஒருசில உடல் உறுப்புக்க’ளாகப் பார்க்கப்பட்டுள்ளாளே தவிர, ஆன்மாவும் உயிரும் உணர்வும் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு ‘மனித உயிரி’ என்ற நிலையில்வைத்துப் பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.

‘உடலை’க் கடந்து பெண்ணைப் பார்க்கும் பக்குவம் மிகப் பெரும்பாலான கலை இலக்கிய கர்த்தாக்களுக்கோ சமுதாயத்துக்கோ கைகூடவில்லை. (பாரதியை இங்கு ஒரு விதிவிலக்காகச் சொல்லலாம்.) மன்னனோடு சரிசமமாக இருந்து கள்ளருந்தி, அரசியல் விவகாரங்களில் ஆலோசனைகள் சொன்ன ஒளவையார், ‘ஒளவைப்பாட்டி’யாக நோக்கப்பட்டமையும், புனிதவதியார் ‘காரைக்கால் அம்மையாரா’கி மனிதக் கண்களுக்கு வெறுப்பூட்டும் பேய்வடிவினராக மாறியதற்கும் பின்புலத்தில் பெண்ணை உடல்கடந்து நோக்காத சமுதாய மனநிலையே அடிநாதமாக அமைந்துள்ளது என்று கொள்வது தகும். ஜீவாத்மா- பரமாத்மாவில் ஐக்கியமாகும் பேரின்பத்தைப் பாடும் பக்திப் பரவசப்பாடல்களில், மாணிக்கவாசகருக்கோ பிற சைவ, வைணவ ஆண் அடியார்களுக்கோ கொடுக்கப்பட்ட அதேயளவு முக்கியத்துவம், பெண்ணான ஆண்டாளுக்குக் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது.

அவரது திருப்பாவைக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், கிருஷ்ணன் மீதான விரகதாபத்தை மிகத் துல்லியமாய் வெளிப்படுத்தும் நாச்சியார் (கனவுப்பாடலைத் தவிர) திருமொழிக்கு வழங்கப்படவில்லை. இங்கும் அவர் ஒரு ‘பெண்’ என்ற பால்மையே அவரது இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படக்கூடிய அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாகின்றது. இதற்கு, எந்த இடத்தில் மொழி சரளமாக அமையுமோ அந்த இடமான காதலில் பெண், மொழியாடக்கூடாது என்பதை விளக்கி,”தன் நூறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங்காலைக் கிழத்திக்கு இல்லை” என்று, ‘எதைப் பாடவேண்டும், எதைப்பாடக்கூடாது’ என்று பெண்ணுடைய ‘பொருள் வெளியை’ வரையறுத்த தொல்காப்பியமும் அடிப்படையாகின்றது. இந்நிலையில், ‘பெண்’ பற்றிய விம்பம் அதே பழைய – குரூர வடிவத்துடன் ஸ்திரப்படுத்தப்படுவது அறிவியல் யுகத்திலும் தொடரவே செய்கின்றது. சினிமா, சின்னத்திரை, இணையம் என எதை எடுத்தாலும், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், விளம்பரம் என எந்தவொரு படைப்பாக்கத்திலும் ‘பெண்’ வெறுமனே ‘உடல்’ ஆகவே பார்க்கப்படுகின்றாள், சித்திரிக்கப்படுகிறாள் அல்லது, ‘ஆவதும் பெண்ணாலே- அழிவதும் பெண்ணாலே’ முதலான பண்டைய பழமொழிகளை வாழவைக்கும் வகையில் ‘அவள்’ சூழ்ச்சிசெய்பவளாக, ஏமாற்றுக்காரியாக, துன்பத்தின், பிரச்சினைகளின் அடிப்படையானவளாகவே பெரும்பாலும் வார்க்கப்படுகின்றாள். நூற்றாண்டு காலமாய்த் தொடரும் இந்தப் பிற்போக்குநிலை மாறி, அகன்றதும் பண்பட்டதுமான பார்வைகள் உருவாகவேண்டியது காலத்தின் தேவைதான். ஆனால், அது ஒரு நெடுந்தூரப் பயணம் என்பதே கசப்பான நிதர்சனம்.

துணைநின்றவை:

செல்வி திருச்சந்திரன் (1997) ‘தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு’, கொழும்பு – சென்னை : குமரன் பதிப்பகம்.
லறீனா ஏ. ஹக், (2005) ‘செ. கணேசலிங்கின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு’, சென்னை : குமரன் புத்தக இல்லம்.
புலோலியூர்கேசிகன்(பதிப்பு) (1958) ‘சிலப்பதிகாரம்’, சென்னை: பாரி நிலையம்

http://www.jathakakatha.org/newhome/index.php?option=com_content&view=article&id=602:504—&catid=60:501-550-&Itemid=103
http://issues.lines-magazine.org/Art_Aug05/Bindunuwewa_II.htm
http://puthu.thinnai.com/?p=317
http://nilapenn.com/index.php/20101101213/essay
http://ta.wikisource.org/wiki/7.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF
http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.html