இந்திய அதிகாரத் திமிருக்குப் பலியான ஈழ அகதி்!

242

வருமுன் காப்பது என்ற மரபு நம்மிடமில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் சிறு குறைகளையும் நாம் அலட்சியம் செய்து விடுகிறோம் தொடர்ச்சியான அலட்சியம் பெரும் வெடிப்பாக நிகமும் போதுமட்டும் அதுபற்றி கதைக்க ஆரம்பிப்போம். அது முடிவதற்குள் அடுத்த நிகழ்வு வந்து நமது கவனத்தை திசை திருப்பி விடும் இவ்வாறான போக்கு நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.

கால் நூற்றாண்டை கடந்து கேட்பாரற்று தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் தமிழகத்திலிருந்து தொப்புள் கொடி என்ற சொல்லாடல் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது பலமாக் உதைக்கிறது.. யார் தொப்புள் கொடி என்ற விவாதம் தனி.

தொடர்ந்து அடக்கிவைக்கும் போது ஏற்படும் அழுத்தத்தின் வெளிப்பாடு தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமில் நிகழ்ந்திருக்கிறது. இங்கு நிகழ்ந்த உயிர்ளூப்பலி தான் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது கடற்கரையில் ஒதுங்கிய சிரியச் சிறுவனின் உடல் உலகத்தின் கவனத்தை திருப்பியது போல் இங்கு அப்பாவி கூலித் தொழிலாளியான ஈழ அகதியின் மரணம் தமிழகத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் இது காலத்தோடு காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிகாரிகளின் அலட்சியமும் அடக்குமுறையும் திமிர்த்தனமும் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் மட்டும் நடப்பதல்ல 60 ஆயிரத்து சொச்சம் அகதிகள் வாழும் 107 முகாம்களிலும் கால் நூற்றாண்டாக இதே நிலை தான்.

உச்சப்பட்டி அகதிகள்முகாம் 1990ம் ஆண்டு முதல் இருக்கும் பெரிய அகதிகள் முகாம். கிட்டத்தட்ட நானூறு குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள் ஓலைக் கொட்டிலில் குடியமர்த்தப்பட்டிருக்கும் அகதிகளில் 2006க்குபின்பு அகதியாக வந்தவர்கள்தான் ரவீந்திரன் குடும்பம். இவர் மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியை சேர்ந்தவர் 45 வயது மதிக்க தக்க ரவீந்திரனுக்கு 6 குழந்தைகள் இரண்டு பையன்கள் 4 பெண்கள் மூத்த பெண்னுக்கு சமீபத்தில் தான் திருமணம் நிகழ்ந்தது. ஒரு பெண் படிக்கிறாள்.
மற்றவர்கள் கூலி வேலை செய்கிறார்கள். கடைசிப் பையனுக்கு பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும்.

எல்லா முகாம்களிலும் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் ‘செக்கிங்’ நடப்பது வழக்கம். உதவித் தொகை கொடுக்கும் போதும் அனைவரும் இருக்க வேண்டும். முக்கிய அமைச்சர்கள் அந்த மாவட்டத்திற்கோ மாநிலத்திற்கோ வந்தால் கூடுதலாக மூன்று நாட்களுக்கு முகாமை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என்ற தடையும் உள்ளது. இது பொதுவான நடைமுறை. மாதத்தில் முதல் ஞாயிறு என்பதால் மார்ச் மாதம் ஆறாம் திகதி செக்கிங் நடைபெற்றது. ஞாயிறு என்பதால் முகாமில் பெரும்பாலும் எல்லாரும் இருந்துள்ளனர்.

ரவீந்திரனின் கடைசிப் பையனுக்கு இரத்தம் உறையாமை நோய் இருக்கிறது. அவனை மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தொடர் மருத்துவம் அவருக்கு தேவைப்பட்டதால் கடந்த செக்கிங்கிலும் அவரை வருவாய்த்துறை அதிகாரியிடம் காட்டவில்லை அதனால் இந்த முறை கட்டாயம் காட்ட வேண்டும், இல்லை என்றால் நீக்கி விடுவேன் என்றிருக்கிறார் வருவாய்த்துறை அதிகாரி. இந்த வருவாயத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற அதிகாரி. அதன் பின்பு அவரை பணியில் அமர்த்தியிருக்கிறார்கள் இவர் கடுமையாக நடந்து கொள்வதாக அவ்வப்போது சலசலப்புகள் நிகழ்ந்திருக்கிறது. இந்த வருவாயத்ளூதுறை அதிகாரியிடம் மருத்துவம் பார்ப்பதற்காக மருந்து சீட்டுகள் ஆதாரம் காட்டப்படிருக்கிறது. அதனை அவர் ஏற்றுக் கொள்ளூள மறுத்துவிட்டார். தொடர்ந்து அதிகாரிக்கும் ரவீந்திரனுக்கும் வாக்கு வாதம் நடந்திருக்கிறது. இயலாமையில் தான் கடைசியாக ரவீந்திரன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

தென் தமிழகத்திலிருந்து மதுரை பிரதான மின்பகிர்மான நிலையத்துக்கு வரக்கூடிய மிகப்பெரிய மின்கம்பத்தில் ரவீந்திரன் ஏறியிருக்கிறார் செக்கிங்கிற்காக காத்திருந்த மக்கள் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள் எதனையும் பொருட்படுத்தாத ரவீந்திரன் மன அழுத்தத்தின் உச்சத்தில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பியை பிடித்து தூக்கி வீசப்பட்டு தார் ரோட்டில் விழுந்து தலைசிதறி அந்த இடத்திலேய இறந்துபோனார்.
ஏற்கனவே கோபத்திலும் அழுத்தத்திலும் இருந்த மக்கள் இரக்கமற்ற அந்த அதிகாரியை கண்மூடித்தனமாக தாக்கி அங்கிருந்தபொருட்களையும் சேதப்படுத்திவிட்டார்கள் ஆனாலும் இறந்த ரவீந்திரன் சடலத்தை அவ்விடத்தை விட்டு அகற்ற அகதிகள் அனுமதிக்கவில்லை ஆயிரக்கணக்கான அகதிகள் கூடிநின்று கொண்டார்கள். மதியம் 2 மணிக்கு இன்நிகழ்வு நடந்தது தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். மக்கள் சடலத்தை அகற்ற அனுமதிக்கவில்லை. ஆம்புலன்ஸ் வந்தது அதற்கு கல்லெறிந்து விரட்டிவிட்டார்கள். மாலை நான்கு மணிக்கு மேலாகிக் கொண்டிருந்தது அதிகாரிகள் பேச்சில் உடன்படாத அகதிகள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சியர் சென்னையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அகதிகள் பிடிவாதமாக மறுக்கவும் போலீஸ் லத்திசார்ஜ் பண்னி பாடியை எடுக்க முயன்றிருக்கிறது. மீடியாக்கள் முழுவதும் முகாமில் கூடியிருந்தது. ஒரு செய்தி தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு செய்ததாக தகவல் இந்த சூழ்நிலையில் பழ. நெடுமாறன் அங்கு வந்திருக்கிறார் சில கட்சியின் தொண்டர்கள் கூடியிருக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. சடலத்தை மாவட்ட ஆட்சியர் வராமல் எடுக்க முடியாது என்று பழ. நெடுமாறன் மீடியாவில் பேசியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் விமானத்தில் சென்னையிலிருந்து மதுரைவந்ததாக தகவல். ஆனால் அவர் இரவு பத்துமணியளவில் முகாமிற்கு வந்து சேர்ந்தார் அதன் பின்பு அகதிகள் கோரிக்கையை சரி செய்வதாகவும் இறந்தவர் குடும்பத்திற்கு உதவி செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்த பின்பு சடலத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றிருந்தார்கள்.

7.3.16 காலை போஸ்மாட்டம் செய்த பின்பு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிலகட்சிகளின் தொண்டர்கள் வந்து மாலை அணிவித்திருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் முகாமிற்கு வந்து உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு பேசியிருக்கிறார் முகாமை சுத்திப் பார்த்து விட்டு சென்றிருக்கிறார் மாலை உடல் அடக்கம் செய்ய இருக்கிறது.

ரவீந்திரனுடைய மரணம் அகதிகள் மேல் எல்லோருடைய பார்வையும் திருப்பியிருக்கிறது. இந்நிகழ்வு நடக்காவிட்டல் ஊடகங்களும் சரி மற்றவர்களும் சரி அரசியல் தலைவராக இருந்தாலும் முகாமிற்கு செல்ல முடியாது
அறுபதாயிரத்து சொச்சம் அகதிகளின் இன்றைய அவலம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுகத்திற்கும் அவமானம் என்பதை நாகரீகமாக பதிவு செய்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு மேல் இதே உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்த அனுபவத்தில் முகாமில் கௌரவமாக வாழமுடியாது என்பதால் தான் நான் முகாமைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது என்பதையும் குறிப்பிடுகிறேன்.

இன்றைய நிலையில் அகதிகளின் எதிர்பார்ப்பு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி படிப்படியாக இலங்கையில் குடியேற அரசுகள் ( இந்தியா இலங்கை தமிழக ) உதவ வேண்டும் இருக்கும்வரை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்பதாகதான் இருக்கும்
நாளை மானங்கெட்ட தமிழக அரசியல் வாதிகள் இதையும் அரசியலாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-பத்தி நாதன்