இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனத்தினை சீரளிக்கும் அதன் தலைவர்.

112

இலங்கைக்கு ஒரு நீண்ட கால தொழிற்சங்க வரலாறு உண்டு. 1922 இல் ஏ .ஈ. குணசிங்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கைத் தொழிலாளர் சங்கம்’ என்ற முதலாவது தொழிற் சங்கம் முதல் இன்றுவரையான எல்லாத் தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்துள்ளன. இலங்கையின் இடது சாரி இயக்கமும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் வழியாகவே வளர்ந்து வந்தது. பின்னாளில் பல்வேறு குழுக்களாக, பல்வேறு பட்ட அரசியல் காரணக்களுக்காக அவைகள் பிரிந்து இயங்கிய போதும், தொழிலாளர்களுக்கும், தொழில் வழங்குனருக்கும் இடையிலான உறவில் அவை தவிர்க்கமுடியாத சக்தியாக இன்றுவரை இருந்து வருகின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும், தொழிற்சங்கங்களின் இருப்பு என்பது, தொழிலாளர்காளின் நலனுடன் தவிர்க்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளது.


தொழிலாளர்களது உரிமைகளுக்காக போராடி வருகின்ற போதும், ஒரு தொழில் நிறுவனத்தை முடக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை தொடர முடியாது என்ற உடன்பாட்டின்கீழ், தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமாக, வேலை நிறுத்தம், சட்டப்படி வேலை, ஆர்ப்பாட்டம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈட்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்களும்,தொழிலாளர் சங்கங்களும் அரசும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட கால வரைக்கான முக்கூட்டு ஒப்பந்ததின் அடிப்படையில் அவர்கள் செயற்படுவதும் உண்டு. தொழிற்துறை சமாதானத்தைப் பேண இத்தகைய வழிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன.ஆனால், தொழிற்சங்கங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவரை வெளியேற்றுமாறு கோரிக்கை வக்க முடியுமா?.

ஆம். தொழிலாளர்களின் நலன் என்பது தொழில் நிறுவனத்தின் நலனுடனும் சம்பந்தப் பட்டுள்ளது என்பதால், அதன் நலனைப் பாதுகாத்தல் அவசியம் என்ற அர்த்தத்தில் அவ்வாறான ஒரு கோரிக்கையை வைக்க முடியும். அத்தகைய ஒரு கோரிக்கையை இப்போது இலங்கை அரச தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சிறீலங்கா ரெலிக்கொம் தொழிற்சங்க கூட்டணி முன்வைத்துள்ளது. இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், சிறீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தைன் சபாபதியுமான குமாரசிங்க சிறீசேன அவர்களை, அவரை ஒரு திருட்டு மோசடிக்காரன் என்று அம்பலமாகுவதற்கு முன்பாக, உடனடியாக கவுரவமான முறையில் பதவி விலகுமாறு அவை கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அவருக்கு எதிரான  மோசமான 13 ஊழல் மோசடிக் குற்றச் சாட்டுக்களைப் பட்டியலிட்டு, எழுதப்பட்ட இந்தக் கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பிரதம மந்திரி,பாராளுமன்ற சபாநாயகர், தொலைத்தொடர்புகள் அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுளன.

குமாரசிங்க சிறிசேன, கடந்த வருடம் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் ஜொடர்ந்து இந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டிருந்தார். ஆயினும் அவர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை, நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுத்ததல்லாமல்,  நிறுவனத்தின், சபாபதி என்ற வகையில் அதன் வளர்ச்சிக்குப் பயனுள்ள எந்த விடையங்களையும் செய்யவில்லை என்று அந்தக் கடிதம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இவரது பதவியில் முன்பு இருந்தவருக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளம் ரூ.200,000.00. ஆனால் இவர் வந்ததும் தனது சம்பளத்தை முதலில் ரூ 900,000.00 ஆக மாற்றியிருந்தார். அதன் பின் அதை அவர் 3 மில்லியனாக மாற்றினார். பத்திரிகைச் செய்தி யொன்றின் தகவலின் படி, இந்த நிறுவனத்துடன் கூட்டாகவுள்ள 7 நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு இவர் சபாபதி என்பதால் இவருக்கு 9 மில்லியன் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர இவருக்கான இதர கொடுப்பனவுகள் மற்றும், கொழும்பு வீட்டு வாடகையாக தரப்படும் கூ 5000.00 பணமும் சேர்ந்தால் இவரளவு வருமானம் பெறும் இன்னொரு அரச ஊளியரை இலங்கையில் காணமுடியாது என்று அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

உடனடியாக பதவியை விட்டு கவுரவமாக விலகு, அல்லது திருடன் என்ற பட்டத்துடன் வெளியேற வேண்டி வரும் என்று எச்சரிக்கைத் தொனியில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் பட்டியலிடப்பட்ட பதின் மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்களும் இவை:

1. ரெலிக்கொம்முக்கான பொருள் மற்றும் சேவை வழங்கலுக்கான விலை மனுக்கோரலில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மீறி ஒரு காப்புறுதி நிறுவனத்துக்கு சேவையை வழங்கி ரூ.20 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை நட்டத்தை நிறுவனத்துக்கு ஏற்படுத்தியது.

2. தனது மகனுக்கு வழமையான விதிகளை மீறி ரெலிக்கொம்மில் வேலை வழங்கியது.

3. தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதியின் மகளுடைய நிறுவனத்துக்கு, விளம்பர ஏஜன்சியை பாரபட்சமான முறையில் வழங்கியது.

4. செய்வதற்கான நிறைவேற்று அதிகாரம் இல்லாத போதும், சபாபதிக்குரிய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்திற்குப் பாதகமான வகையில் இயக்குனர் சபையின் கூட்ட அறிக்கைகளில் திருத்தம் செய்ததுடன், முக்கிய ஆவணங்களை சட்டபூர்வமானவையாக உறுதிப் படுத்தியது.

5. ஏற்கனவே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஆர். ரூபசிங்க என்பவரை சிறிலங்கா ரெலிக்கொம் கம்பஸின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்தது.

6. இயக்குனர் சபை அங்கத்தவர்களை தனக்கு வசிப்பதற்கான ஒரு வீட்டுக்கு         ரூ.750,000.00 வாடகையை அனுமதிக்குமாறு ( நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ கடிதமூலம் இது தொடர்பான தனது அதிருப்தியை தெரிவித்தும்), வற்புறுத்தியது.( இது, தனிப்பட்டமுறையில், நியூ யோக்கில் கூட இல்லாத ஒரு வாடகையை தனது ஆடம்பரத்துக்காக கோரப்பட்ட மாளிகைக்கான வாடகைத் தொகையாகும்)

7. இயக்குனர் சபையின் தீவிர எதிர்ப்பையும் மீறி,நேர்மையற்ற விதத்தில், தனது சம்பளத்தை மூன்று மடங்காக அதிகரிக்கும் சபைக் கடிதத்தை சமர்ப்பித்தது.

8. திரு. ஹலொலுவ, திரு.குரே ஆகிய இயக்குனர்களை, தனது சம்பள அதிகரிப்பை எதிர்த்ததற்காகவும்,தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காகவும் சபையிலிருந்து நீக்கியது.

9. தனது நண்பரான திரு வேகப்பிட்டியவை, தான் நினத்ததை சாதிக்கும் நோக்குடன் இயக்குனர் சபையில் இணைத்துக் கொண்டது.

10. பதவிக்கு நியமிக்கப்பட்ட காலம் முதலான இவரது தவறான நடவடிக்கைகள் லங்கா ஈ நியூசில் வந்தமை நிறுவனத்தின் நற்பெயருக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பது.

11. இவருக்கு முந்திய எந்த சபாபதிகளும் செய்திருக்காதவிதத்தில், தான் செய்யும் தவறுகள் நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, தன்னைப் பற்றிய தகவல்கள் வெளிவரும் லங்கா ஈ நியூஸ்  அங்கு வருவதை தடை செய்தது.

12. சிறீ லங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிற்றெல் நிறுவனக்களின், வழங்குனர்களிடமிருந்து பகிரங்க விலைமனுக்கோரல் நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடுகளை மேற்கொள்வதும் இதனால் நிறுவனத்தில் சீரான செயல் நடவடிக்கைகளை குழப்புவதும்.

13.இத்கைய ஒரு சூழலில்,நிறுவனத்தை பலப்படுத்துவதற்காக ஊழியர்கள் வகுக்கும் திட்டங்கள் எல்லாவற்றிலும், இவரது கவனம் அவர்கள் பாடுபட்டு திரட்டும் வருமானத்தை எப்படி சூறையாடுவது என்பதாகவே இருக்கிறது.

ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரு காரணத்தை தவிர இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான எந்த அதிகாரமும் இவருக்கு இல்லை. ராஜபக்ச அரசின் கீழ் இருந்து வந்ததால் இருந்த அச்சம் காரணமாகப் பொறுத்துப் போனவர்கள் இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இலங்கையின் தொழிற்சங்கங்கள் இவ்வாறானதொரு அரசியல் நடவடிக்கையில் இறங்கியிருப்பது வரவேர்க்கத் தக்கது. ஆனால் இவரை பதவியிலிருந்து தூக்க இன்னமும் பொறுப்பான அமைச்சர் தயங்குவதும், ஜனாதிபதி இதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் பெரும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இன்னமும் ராஜபக்ச யுகம் முழுதாக மாறவில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவேளை, ஜனாதிபதி சகோதரர் இயல்பாகவே அம்பலமாகிப் போகட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?. ஆனால் ஜனாதிபதியின் மகன்,மகள்,சகோதரர் மூவரும் ஜனாதிபதிக்கு எதிரான பெரிய கிடங்கை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு தெளிவாகக் காண முடிகிறது!

தகவல்: லங்கா ஈ நியூஸ்