சிவராமின் கொலை பற்றிய விசாரணை எதுவும் நடக்கவில்லை!

127

ஏப்ரல் மாதம் 30 ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சிவராம் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளரும்  தமிழ் மக்களுக்கு உதவினார் என்ற குற்றச்ச் சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தவருமான ருக்கி ஃபெர்னாண்டோ ஆற்றிய உரையின் சுருக்கம்:

சிவராம் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட நாளை நினைவுகூர்வதும் அவரது கொலைக்குக் காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்தவும் கோரி வடக்கிலும் தெற்கிலும் ஒரே நேரத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம் பெறுகின்றன. இன்றைய நினைவு நாள் சிவராமுக்கு உரியதாயினும் இந்த நாளில் கருத்துச்சுதந்திரம், ஜன நாயகம், மனித உரிமைகள் பற்றியும் நாம் சிந்திப்பது பொருத்தமானதே.சிவராமை எனக்கு நேரில் தெரியாது. சர்ச்சைக்குரிய, சிந்தனைகளைத் தூண்டும் பல கட்டுரைகளைக் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அவர் எழுதினார் எனபது நாம் அறிந்ததே. சிவராமின் கொலையை ஒட்டி, The Island நாளிதழின் ஆசிரியரான காமினி வீரக்கோன் எழுதியதை நாம் கவனத்தில் எடுக்கலாம். அவர்தான் சிவராமுக்கு பத்திரிகையாளர் வேலை வழங்கியதோடுமட்டும் நின்று விடாது சிவராமுக்குத் தராக்கி என்ற புனைபெயரையும் சூட்டியவர். ” சிவராமின் கருத்துக்களைப் பிரசுரிப்பதால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எமக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தாலும் நாம் அவற்றைத் துணிந்து பிரசுரித்தோம்” என்கிறார் காமினி வீரக்கோன்.

சிவராமின் கருத்துக்களும் எழுத்துக்களும் கொழும்பின் மைய நீரோட்ட ஆங்கிலப் பத்திரிகைகளின் நிலைப்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்குவதாகவே எப்போதும் இருந்து வந்தது. இந்தப் பின்னணியில் ஒரு பத்திரிகை ஆசிரியராக சிவராம் மாற்றுக் கருத்துக்களைப் பிரசுரித்திருப்பாரா? இன்றைய தமிழ் ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்களுக்கான மதிப்பு என்ன? பன்மைத்துவத்துக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் பொதுவாகவே ஊடகங்களில் என்ன இடம்? ஊடகங்களின் உரிமையாளர்களாக யார் இருக்கிறார்கள்? போன்ற கேள்விகளை சிவராமை நினைவு கூரும் இன்று நாம் சிந்தித்தல் நல்லது என்க் கருதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு,  அரசாங்கத்தின் ஊடக அமைச்சுக்குச் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர், ஊடகவியலாளர்களுக்குத் தனிச் சிங்களத்தில் ” அரசியல் ஆலோசனைச் சுற்று நிருபம்” ஒன்றை அனுப்பினார். இப்போதைய அரசுக்குச் சாதகமானது அது. இது ஏன் சிங்கள மொழியில் மட்டும் உள்ளது எனக் கேட்கப்பட்டபோது, தேவையானவர்கள் அதனைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம் எனச் செயலாளர் பதில் தந்தார். எல்லா வலைத்தளங்களையும் பதிவு செய்யும்படி அரசு கேட்கிறது. வடக்கிலே ஊடகவியலாளர்கள் சென்ற மாதம் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருடைய ஒளிப்படக் கருவிகள் நொருக்கப்பட்டுள்ளன. மஹிந்த் அரசின் கீழ் இருந்ததைவிட ஒப்பீட்டளவில் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் உள்ளது உண்மை எனினும் முழுமையான ஊடக சுதந்திரத்தை எய்த நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

சிவராம் கொலையுண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகும் : நல்லாட்சி” வந்து 475 நாட்கள்ஆகிவிட்ட பிற்பாடும் சிவராமின் கொலை பற்றிய எத்தகைய பொறுப்புக்கூறலும் இன்னும் இல்லை. காணாமல் போன, கொல்லப்பட்ட ஏனைய பல ஊடகவியலாளரதும் நிலை இதுதான். மே மாதம் 2ம் தேதி உதயன் நாளிதழ் பணிமனையில் கொல்லப் பட்ட ஊடகவியலாளரை நாம் நினைவு கொள்வோம். பழையபடி கடத்தல்கள் வடக்கில் இடம் பெற ஆரம்பித்து விட்டன. கடத்தப்பட்டவர்களில் சிலர்  பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டுள்ளனர். இப்போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதற்கு மலர்கள் தூவ எம்மால் முடிகிறது.விளக்கேற்ற முடிகிறது. நினைவு கூர முடிகிறது. சிலவற்றை நினைவு கூர இந்த அரசு அனுமதித்தாலும் பலவற்றை நாம் நினைவு கூர அரசு அனுமதிப்பதில்லை. மே 18 நாம் நினைவு கொள்ள அனுமதிக்கப் படாத ஒரு நாள். எனினும் நினைவு கூரலை மேலும் தொடர நாம் பாடுபட வேண்டும்.

ஆனால் வன்முறையைக் கொண்டாடுவதற்காக அல்ல. மாற்றுக் கருத்துக்களுக்கான மதிப்பையும் பன்முகப்பாட்டிற்கான வெளியையும் எதிர்ப்பின் உயிர்ப்பையும் வலியுறுத்துவதே நாம் சிவராமுக்குத் தருகின்ற பொருத்தமான அஞ்சலியாகவும் நினைவு கூரலாகவும் அமையும்.

-றுக்கி ஃபெனாண்டோ