நிலவின் ஒளியில் மாயஜாலம்

253

வூடி அலனின் திரைப்படங்கள் எப்போதும் இருத்தல் சார்ந்த கேள்விகளையே எழுப்புகின்றன. ஒவ்வொரு மனிதரும் தமது பகுத்தறிவின் மூலம் தமக்கான வாழ்வையும், உறவுகளையும் கட்டியமைக்க முயல்கின்றனர். ஆனால் பகுத்தறிவு நமக்கான விடுதலையைத் தந்துவிடுமா?நம்மை மகிழ்ச்சியாகவோ அல்லது ஆகக்குறைந்தது நிம்மதியாகவோ அந்தத் தேடல் வாழ விடுமா என்பதைத் தேடும் ஒரு படந்தான் Magic in the Moonlight.

மாந்தீரிகவாதியான ஸ்ரான்லி பல வித்தைகள் செய்து பார்வையாளர்களை வசியம்செய்தாலும் அவரொரு பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கையற்றவர். எந்த ஒரு ‘வித்தை’யையும் பகுத்தறிவால் அவிழ்த்து விடமுடியுமே தவிர உண்மையில் அதற்கப்பால் ‘அமானுஷ்ய’ சக்திகள் இல்லை என்று தீவிரமாக நம்புகின்றவர். மனிதர்களின் சிந்தனைகளுக்கு அப்பால் சக்திகள் இருக்கின்றன எனக் கூறுகின்றவர்களை கேலியும் செய்கின்றவர். இவ்வாறான ஸ்ரான்லியிடம் அவரின் நண்பரொருவர் உதவி கேட்டு வருகின்றார். ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில், ‘மனிதர்களின் மனதை வாசிக்கும்’ ஒரு பெண் நுழைந்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கின்றார், அவரை ஒரு போலியென அக்குடும்பத்தில் நிரூபிக்கவேண்டும் என நண்பர் ஸ்ரான்லியிடம் கேட்டுக்கொள்கிறார். மேலும் இந்தப் பெண்ணின் மீது பணக்கார வீட்டு ஆண்களில் ஒருவர் ஏற்கனவே காதலில் வீழ்ந்தும் விட்டிருக்கின்றார் என்பதும் கூறப்படுகின்றது.

ஸ்ரான்லி, இப்படி மனித மனங்களை வாசிப்பதென்பது போலியான விடயம், நான் அங்கு வந்து இதைப் பொய்யென நிரூபிக்கின்றேன் என நண்பருடன் புறப்படுகின்றார். எல்லாமே பகுத்தறிவிற்கு உட்பட்டதென தீவிரமாய் நம்பும் ஸ்ரான்லியையும் அந்தப் பெண், தன் ‘மாந்தீரிகத்தால்’ கொஞ்சம் கொஞ்சமாக நம்பவைக்கின்றார். ஒருகட்டத்தில் ஸ்ரான்லி மனித அறிவால் எட்டமுடியாது, அதற்கு அப்பாலும் விடயங்கள் இருக்கின்றதென நம்பத் தொடங்குகின்றார். இந்தப் பெண் உண்மையிலே மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவள் என பத்திரிகையாளர்களை அழைத்துச் சொல்லவும் செய்கின்றார். பத்திரிகையாளர்கள் ‘நீங்கள் முன்னர் இப்படியான விடயங்களே இல்லை என தீர்க்கமாய்க் கூறியவர், அவர்களை எள்ளலும் செய்தவர், இப்போது இதையெல்லாம் உண்மையென நம்பத் தொடங்கிவிட்டீர்களா?’ எனவும் கேட்கின்றனர். ‘ஆம், முன்னர் அப்படித்தான் இருந்தேன், ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இதையெல்லாம் நம்பத்தொடங்கிவிட்டேன், உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கின்றேன்’ என்கின்றார்.

இறுதியில் என்ன நடக்கிறது, மாந்தீரிகமா, பகுத்தறிவா தம்மைச் சரியென நிரூபித்துக்கொள்கிறதென்பதை படத்தின் முடிவில் அறிந்துகொள்ளலாம். வூடி அலன், இங்கே மாந்தீரிகத்தை ஒரு தளமாய் எடுத்துக்கொண்டாலும், அவர் அதனூடாக பரிசோதித்துப்பார்ப்பது மனித மனங்களைத்தான். ஸ்ரான்லி என்கின்ற பெரும்புகழ்பெற்ற மாந்தீரிகவாதி, தன்னை ஒத்த அறிவுடைய ஒரு துணையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்பதை இந்த மாந்தீரிகம் செய்யும் பெண்ணைக் காணும்போது கண்டறிந்துகொள்கின்றார். அந்தப் பெண் தந்து கொண்டிருப்பது உற்சாகமான நாட்கள் என்றாலும் அவருடைய ‘அறிவு’ இதைக் காதலென பெயரிட்டுக்கொள்ள மறுக்கிறது. இந்த அற்புத அனுபவங்களைக் கூட, அறிவின் வழி ஆய்ந்து ஆய்ந்து மீண்டும் தன்னை உற்சாகமில்லாத ஒரு தனிமை வாழ்விற்குள் இழுத்துச் செல்ல விரும்புகின்றார். ஆனால், அவரது அன்ரியொருவர் ஸ்ரான்லியின் அறிவிற்கும், காதலுக்கும் இடையில் தள்ளாடும் மனதை எளிதாகப் போட்டுடைக்கின்றார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தம் புதிய உறவுகளை அமைத்துக்கொள்ளும்போது, தமக்கான அதே படிநிலையிலேயே தமது துணைகளைத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு இதமாய் இருக்குமென நம்புகின்றனர். உண்மையிலே அப்படி நாம் நம் உறவுகளை அறிவின் வழி தேர்ந்தெடுக்கும்போது நமக்கு ‘நிலைத்த’ மகிழ்ச்சி கிடைப்பது சாத்தியந்தானா என வூடி அலன் நம்மிடையே கேட்க முனைகின்றார். கொஞ்சம் மாந்தீரிகம், கொஞ்சம் பொய்கள், கொஞ்சம் கற்பனைகள் இருந்தால் வாழ்வு இன்னும் அழகாகியும் விடக்கூடுமல்லவா? ஸ்ரான்லி என்னும் பகுத்தறிவாளருக்குள், எல்லாவற்றையும் ஆராயும்ஃதேர்ந்தெடுக்கும் ஒருவருக்குள், அவரளவிற்கு அறிவோ, வசதியோ இல்லாத ஸோபி என்கின்ற அழகான கண்களையுடைய அப்பாவித்தனமுள்ள பெண் எல்லா நிலைகளையும் எளிதாய் உடைத்தெறிந்து உள்நுழைந்து கொள்கிறாள். ஸ்ரான்லி, ஸோபியின் ‘மனங்களை வாசிக்கும்’ திறனை நம்பிக்கொள்வது கூட, அவரின் ‘பகுத்தறிவை’ மறைத்து/மறைந்து எழும்பிய காதலினால்தான் என்பதை பார்வையாளர் எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியும்.

வூடி அலனின் படங்களில் முரண் உரையாடல்களாலேயே அழகான காதல்கள் கட்டியெழுப்பப்படுவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால் இந்தப் படத்தில் அவ்வாறான தீவிர உரையாடல்கள் பாத்திரங்களிடையே நிகழத்தப்படவில்லை என்பதோடு, காதல் கூட அழகாக மனதைத் தொடும்படியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை இப்படத்தின் ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும். ஒருவகையில் அவரின் முன்னைய படங்களைப் போன்று அவ்வளவு பாதிப்பையோ, நினைவில் இருத்திக்கொள்ளக்கூடிய நுட்பமான காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படமாகவே இது இருக்கிறது. வூடி அலனின் Vicky Cristina Barcelona, Midnight in Paris , Rome with Love, Blue Jasmine  போன்று இருத்தலியத்தையும், காதலையும் நுட்பமாக செதுக்கிய படங்களோடு ஒப்பிடுகையில் சற்று பின்தங்கிய நிலையிலேயே இத்திரைப்படம் இருக்கின்றது.

-டிசே தமிழன்