பெண்கள் மீதான பாலியல் வன்முறை

158

ரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியப் படைகளுக்கு பாலியல்  சேவகம் செய்வதற்காக கடத்தப்பட்ட   பல்லாயிரக்கணக்கான கொரியப் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்பெண்களில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுள்ள, இப்பொது உயிருடனிருக்கும் சிலரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று “ஹொட் டொக்ஸ்” எனப்படும் டொரொண்டோ ஆவணத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்படத்தின் பெயர் “மன்னிப்பு” (“The Apology”). இந்தத் திரையிடலுக்காக டொரொண்டொ வந்திருந்த இயக்குனர் டிபனி சியங் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான கில் வன் ஒக் என்பவர்களை அழைத்து தொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ழுஐளுநு இன்  பெண்கள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் (The center for women Studies in Education, OISE/UT) , பெண்களின் மனித உரிமைக் கல்வி நிலையம் (The Women’s Human Rights Education Institute ), அல்பா கல்வி நிலையம் (ALPHA Education), ஆதிக்குடிகலின் கல்வி தொடர்பான கற்கை நெறி (Aboriginal Studies Program, UT), கொரியா பற்றிய கல்வி மையம்  (Center for the Study of Korea, UT ) என்பன இணைந்து ஒரு குழுக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தார்கள். மே 4 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு  ழுஐளுநு வளாகத்தில்  இடம்பெற்ற இந்  நிகழ்வு, சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது மட்டுமல்ல  அது ஆரம்பிக்கும் போதே அரங்கு நிறைந்தும் இருந்தது!.

நிகழ்வினை  ஆரம்பித்து வைத்துப் பேசிய ஒருங்கிணைப்பாளர்  பெண்கள் மேலான வன்முறை மற்றும் காலனித்துவம் என்பன தனியொரு பிரதேசம் சார்ந்த பிரச்சனைகளாக மட்டும் நோக்காது உலகளாவிய அளவில் சமாந்தரங்களைக் கொண்ட ஒரு தொடரும் விடயமாக நோக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்னும் நாம் காலனித்துவ மண்ணில் ஆதிக்குடிகளை ஒடுக்கியபடிதான் வாழ்கிறோம் என்பதையும், ஆதிக்குடிகளைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் நினைவுபடுத்தினார். அடுத்து தொறன்ரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலத்தில் இன்றைக்கு 15,000 வருடங்களுக்கு முன்னிருந்து வாழ்ந்து வந்த ஆதிக்குடிகளின் பெயர்களும் அவர்களைக் கௌரவப்படுத்தும் செய்தியும் வாசிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குறும்பட இயக்குனர் டிபனி தனது படத்தின் முன்னோட்டத்தினைத் திரையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் “விபசாரி” என்று கூறி வீதிகளில் அவமானப்படுத்தப்படும் காட்சியொன்று திரையில் விரிந்தது. திரைப்பட முன்னோட்டத்தை அடுத்து, கொரியாவின் பெண்ணிய செயற்பாட்டாளரும் இராணுவ பாலியல் வன்முறைகள் தொடர்பாக தொடர்ந்து இயங்கி வருபவருமான யூன் மீஹான் தனது உரையை கொரிய மொழியில் ஆற்றினார். அது ஆங்கிலத்தில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. அவர் தனது உரையில் இந்த விடயத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றித் தெரிவித்தார். அதன் சுருக்கம் பின்வருமாறு

“1930களில் இருந்து 1945வரையான காலப்பகுதியில் ஜப்பானியப் படைகளுக்கு பாலியல் சேவைகளை வழங்குவதற்காக பல இடங்களில் “வசதி மையங்கள்” (Comfort Stations) அமைக்கப்பட்டன. முதலாவது மையம் ஷங்காய் இல் அமைக்கப்பட்டது. இவ்வகையான அமைப்பு புதிய கண்டுபிடிப்பல்ல. கடற்படையினரிடையே இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. இதற்குக் காரணமாக இவை பாலியல் வன்புணர்ச்சியைத் தடுக்க உதவும் எனக் குறிப்பிடப்பட்டது. இம்மையங்களில் கொரிய, பிலிப்பீன், இந்தோனேஷியப் பெண்கள் காணப்படார்கள். காலனித்துவத்தினால் இடம்பெயர்ந்த டச்சுப் பெண்களும் இருந்தார்கள். இவர்களின் வயது பெரும்பாலும் 14-18 ஆக இருந்தது. ஒன்று தொடக்கம் ஏழு வருடங்கள் வரை அவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இப்போது அவர்களில் பலர் வயதானவர்களாய் இருக்கிறார்கள். தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் முன்வந்து தமது பெயரைப் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் கிட்டத்தட்ட 2 இலட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 80 வீதமானவர்கள் கொரியப் பெண்கள். அதிகமானோர் பதிவு செய்ய முன்வராததற்குக் காரணம் அவர்கள் குற்றவாளிகளைப் போலப் பார்க்கப்படுகின்றார்கள் என்பதே. அதனால் அவமானப்பட வேண்டி வரலாம் என்று எண்ணுகிறார்கள்.

“இன்று வருகை தந்திருக்கும் நமது பாட்டி  கில் வன் ஒக் இற்கு அவர் அத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட போது வயது 11. இப்போது வயது 89. இந்தப்பெண்கள் பல பல மணி நேரங்கள்  தொடர்ந்து பலரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதால் வலி நிவாரணியாக போதை மருந்து ஊசி மூலம் வழங்கப்பட்டது. அதன் தடயங்களும் அவர்களின் கைகளில் இருக்கின்றன. இவ்வாறான பெண்கள் பெரும் மன உளைச்சல் காரணமாக இரவில் கத்துதல், தூக்கத்தில் நடத்தல், பயங்கரக் கனவுகளைக் காணுதல் போன்ற விளைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இந்த விடயம் தொடர்பாக இன்னும் போதுமானளவு விசாரணை செய்யப்படவில்லை. இதன்போது காணமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியவில்லை. இதற்கு ஜப்பானிய அரசும், போர்க்கால நட்பு அரசுகளும் தான் பதில் கூற வேண்டும். இதற்கான பல முன்னெடுப்புக்களை நாம் செய்து வருகிறோம். மன்னிப்புக்கோரல் மற்றும் சரியான இழப்பீட்டை வழங்குதல் என்பவற்றை நாம் கேட்டு ஒரு அமைப்பாகப் போராடி வருகிறோம். “வண்ணாத்துப்பூச்சி நிதி” என்கிற ஒரு நிதி சேகரிப்பு நடவடிக்கையையும் முன்னெடுக்கிறோம். நமது மதிப்புக்கிரிய பாட்டிமார்  தமக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை இன்னுமொரு பெண்கள் தொடர்பான முன்னெடுப்புக்கு நன்கொடையாகக் கொடுக்க முன்வந்தார்கள். அதைதொடர்ந்து நாம் “சுதந்திரம்” என்று பொருள்படுமாறு “வண்ணாத்திப்பூச்சி” என்று எமது நிதிக்கு பெயரிட்டோம். இதன் மூலம் கொங்கோ, வியட்னாம் பொன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறோம்.

இராணுவப் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட பெண்கள் தாம் சிறுமிகளாக இருக்கும் போதே கல்வி கற்கும் வாய்ப்பை இழந்ததனால் தற்போது இளம் பெண்களின் கல்விக்காக தமது நன்கொடைகளை வழங்க விரும்பினார்கள். அதையும் நாம் செய்து வருகிறோம்.”

அவரது இந்த உரையின் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணான கில் வான் ஒக் ஒரு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தார். கூடியிருப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என வினவிய போது “பக்கங்களில் விழுந்து விடாது நேராகப் பார்த்துப் பயணியுங்கள்” எண்டு கொரிய மொழியில் குறிப்பிட்டார். அவரது உடல் நிலை காரணமாக அவர் அதன் பின் அங்கிருந்து விடை பெற்றார். அதன் பின்னர் மீஹான் தனது உரையைத் தொடர்கையில் கில் வான் ஒக் தற்போது மறதி நோய்க்குள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார். தனது சிறுவயதில் கற்றுக்கொண்ட பாடல்களைக்கூட ஞாபகம் வைத்திருக்கும் அவர், பின்னாளில் நடந்த பல விடயங்களை மறந்து விட்டதாகவும் அது பற்றிக்கேட்ட போது “மறந்திருப்பதனால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். எனக்குக் கிடைத்த பெரிய வரம் மறதி தான்” என்று குறிப்பிட்தாகவும் கூறினார். அவரது மறதி அவர் வேண்டுமென்றே உருவாக்கிய ஒன்று போலவே அமைந்திருக்கிறது என்றார்.

அதன் பின்னர் திரைப்பட இயக்குனர் டிபனி,  ஆவணத்திரைப்படம் எடுக்கும் போது நமது பாட்டிமார்  மறக்க விரும்பும் பலதை ஞாபகப்படுத்தி அவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டி வந்ததால், பல தடவை மனக்குழப்பத்துக்கு உள்ளானதாகவும், பின்னர் அவர்களை நிம்மதியாக மறக்க விடுவதற்காக நாம் அதை ஞாபகம் வைத்திருக்க  வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்தே இப்படத்தை எடுத்து முடித்ததாகவும் சொன்னார்.

அதன் பின்னர் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் வன்முறையின் சமாந்தரங்களைத் தொட்டுப் பதிலுரைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த ஈராக்கியப் பெண்ணிய செயற்பாட்டாளரான யனார் மொஹம்மட் தனது கருத்துக்களை முன்வைத்தார். அவர் ழுறுகுஐ என அறியப்படும் ஈராக்கில்  பெண்கள் சுதந்திரத்துகான அமைப்பினை உருவாக்கியவர்.  2003 இல் அமெரிக்கா ஈராக்கினைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பக்தாத் நகரிலும் அண்மைய பல நகரிலும் இளம் சிறுமிகள் காணாமல் போனதை அடுத்து தானும் பல பெண்ணிய செயற்பாடாளர்களும் பல முறைப்படுகளை முவைத்ததாகவும்,  இரண்டு வருடங்களின் பின்னர் பக்தாத்தின் புற நகர்களிலும்  ஈராக்கினைச் சுற்றியுள்ள எனைய நாடுகளிலும் கடத்தப்பட்ட சிறுமிகள் விபச்சாரத்துக்காக விலைகூறி விற்கப்படும் பல சந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து தான் போராடத்தில் ஈடுபடுகையில், போராட்டத்துக்கான அனுமதி இன்றிப் போராடியதற்காக அமெரிக்கப்படைகளால் போராட்டம் நிறுத்தப்பட்டது என்றும் அப்பொது எந்தவித அரசாங்க அமைப்புக்களோ அலுவலகங்களோ சேவையில் இல்லை. ஏன் அரசாங்கமே இல்லாமல் இருந்தது எனவும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது “அதன் பின்னர் பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம். எமக்கென ஒரு பத்திரிக்கை, வானொலி அலைவரிசை என்பவற்றை அமைத்து கருத்துக்களைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டோம். அமெரிக்க ஆதிக்கத்தினால் நாம் இழந்தது எண்ணெய் மட்டுமல்ல. நமது நாடுக்குள்ளேயெ இரு புறமாக நம்மைப்பிரித்து மோதவிட்டு அமெரிக்கா வேடிக்கை பார்த்தது. இந்த இடத்தில் காலனித்துவத்தினால் உருவாகும் பெண்கள் மீதான வன்முறை என்கிற அடிப்படையில் இதற்கும் உலகின் வேறுபல நிகழ்வுகளுக்குமிடையே பல ஒற்றுமைகளை நான் காண்கிறேன். “

இறுதியாக கொங்கோவிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்து பின்னர் தற்போது சிரிய அகதிகளுக்காக பல உதவிகளை செய்து வரும் வின்னி முச்சுபா தனது அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார். மாற்றுக்கருத்துக்களுக்கு எதிரான மிகத்தீவிரமான அடக்குமுறை கொங்கோவில் இருந்ததாகவும் அதற்குத் தனது கணவர் பலியானதாகவும் அவர் குறிப்பிடார்.  இது என்னைப்பற்றியது மட்டுமல்ல. இது ஒரு பெரிய பொதுவான பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர் இப்பொது பாதிக்கப்பட்ட  பெண்களுக்காக மற்றைய பெண்கள் முன்வந்து உதவி செய்வது, குரல் கொடுப்பது என்னை மகிழ்விக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் கேள்வி பதில் நேரம் வழங்கப்பட்டது. செயற்பாடாளராக இருந்து இதற்குப் பங்களிக்க விரும்பும் இளம் சமுதாயத்துக்கு என்ன சொல்ல விருப்புகிறீர்கள் எனக் ககேட்ட போது மீஹான் “ஞாபகம் வைத்திருங்கள், பலருக்கும் தெரியப்படுத்துங்கள். அதுதான் முதல் படி” என்றார். அத்துடன் தான் கழுத்தில் அணிந்திருந்த  சால்வையைக் காட்டி, “இது பாதிக்கப்பட்ட நமது பாட்டிமாரினால் வரையப்பட்ட பூக்கள் கொண்ட ஓவியம். இதை இளம் சமுதாயத்தினைச் சேர்ந்த சிலர்  சால்வையாக வடிவமைத்திருக்கிறார்கள். அதனை ஒரு ஞாபகப் பொருளாக விற்பனை செய்து வண்ணத்துப்பூச்சி நிதிக்கு வழங்குகிறார்கள். இப்படியான சிறுசிறு வகைகளில் பங்களிக்கலாம். ஞாபகம் வைத்திருப்பது மிக முக்கியமானது” என்றார். யனார் இதற்குப்பதில் கூறுகையில் “எல்லோரும் எப்போதும் நமக்கு ஆதரவு தரமாட்டார்கள். இளம் செயற்பாட்டாளர்கள் அதை உணர்ந்து கொள்ள வேண்டும். உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.

நிகழ்வு இரவு 8.30 அளவ்ல் நிறைவடைந்தது. தொடர்ந்து பங்குபற்றவும் தகவல்களை அறிந்து கொள்ளவும் விரும்பியவர்கள் தமது மின்னஞ்சல் முகவரிகளை விட்டுச் சென்றார்கள். அனைவரும் கொஞ்சம் பாரமான இதயத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது.

அரசி விக்னேஸ்வரன்