இன்னும் கண்ணீர் ஓயவில்லை

முப்பது ஆண்டுகளாய் ஈழத்தின் கண்ணீர் இன்னும் ஓயவில்லை. போர் என்னவோ முடிவுக்கு வந்தாலும் நம் சொந்தங்களின் கண்ணீர் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. இன்றே கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான, தட்டிக் கழிக்க முடியாத தேவைகள், பணிகள் வடக்கிலும் கிழக்கிலும் குவிந்து கிடக்கின்றன.

முப்பது ஆண்டுகாலமாய் வடக்கு கிழக்கில் நடந்த யுத்தத்தினால் ஒரு இலட்சத்து ஐயாயிரத்துக்கும் அதிகமான (1,005,000) நம் சகோதரிகள் விதவைகள் ஆக்கப்பட்டிருக்கிறாரளூகள். இவர்களில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் அகவை முப்பதையும் தாண்டாத இளம் பெண்கள். இவர்களுடைய கணவன்மார்களில் அதிகமானோர் போர்க் காலத்தில் இறந்தவர்களை விடவும் காணாமல் போனோரும், கடத்தப்பட்டோருமே அதிகம். இதனால் இன்னும் தங்கள் கணவன்மார் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

ஆயுதப் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்த போதிலும் மறுவாழ்வுக்கான திட்டமிட்ட செயற்பாடுகள் சரியாக நடைமுறைப் படுத்தப்படுவதில் பெரும் சிக்கல்கள் நிலவி வருகிறது. பொருளாதாரத் தேவைகள் மட்டுமன்றி உளவியற் தேவைகளும் அதிகரித்து வருகிறது.

எவ்வித வருமானமும் இல்லாமல், உறவுகளின் உதவிகளும் இல்லாமல் கைகளில் இளம் பிள்ளைகளோடு அவதியுறுவோரில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்குத் தள்ளப்படுகிறார்கள். மன விருப்போடு இப்பயணங்கள் அமையாவிட்டாலும் தம் பிள்ளைகளின் பசியை ஆற்றவும், ஓர் நல்ல எதிர்காலத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவுமே இப்பணங்கள் அவசியமாகின்றன. இவர்களில் ஒரு சிலரைத் தவிர அதிகமானோர் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஏன் சிலர் உயிரைக் கூட இழக்க நேரிடுகிறது. சொந்த ஊரிலும் உதவியின்றி வேலைத் தேடிச் செல்லும் இடத்திலும் பாதுகாப்பின்றி இப் பெண்கள் படும் இன்னல்களுக்கு அளவேயில்லை.

இவ் இளம் விதவைகளில் அதிகமானோர் வாழ்வதற்கு ஒரு சீரான இருப்பிடம் இல்லாமல், தகரக் கொட்டில்களிலும், ஓலைக் குடிசைகளிலும் ஆடு மாடுகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஏழ்மையின் காரணமாக இவர்களுடைய பிள்ளைகளும் படிப்பைத் தொடர முடியாமல் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்துகிறார்கள். அப்படிச் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலே நிற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 2000 ஆகக் காணப்படுகிறது.

கல்வியே செல்வமாய் வாழ்ந்த தமிழினம் இப்படிக் கல்வியை இழப்பது எத்தனை கொடுமை. கல்வியறிவற்ற ஒரு தலைமுறை நமக்குப் பின் தோன்றுமானால் மொழி, கலச்சாரம், பண்பாடு அனைத்தும் ஒழிந்து போகும் அல்லவா? அவர்கள் காலம் காலமாக அடிமைகளாய் வாழ்ந்திட இது வழிகோலுமே.

வடக்குக் கிழக்கில் போரின் பின் மறுவாழ்வு பெற்ற போராளிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 11 900 ஆகும். இவர்களில் நாற்பது வீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாவர். இதில் பெரும்பாலானோர் இடுப்பிற்கு கீழே அசைய முடியாதவர்கள். இவர்களால் கடின வேலை செய்வது முடியாதது. ஏனையோரும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களும் இவர்கள் குடும்பங்களும் அன்றாடத் தேவைகளைச் சந்திப்பதற்கே மிகவும் போராடுகிறார்கள். இவர்களுக்கான தேவையும் அங்கே குவிந்து கிடக்கிறது.

இவர்கள் தம் புலம்பெயர் உறவுகளிடம் உணவு கேட்கவில்லை. மாறாக தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வழியையே கேட்கிறார்கள். உணவாக மீனைக் கேட்காமல், மீன்களைப் பிடிக்கும் தூண்டிலை எதிர்பார்க்கிறார்கள். தன்னிறைவான வாழ்க்கைச் சூழலை அவர்கள் உருவாக்கிக் கொள்ள இதுவே துணைசெய்யும். உறுதியான எதிர்காலமொன்றை உருவாக்கப் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களே வழிசெய்யும்.

நாம் விரைவாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நேரமிது. அவர்கள் இழந்த வலிமையை ஈட்டிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்குண்டு. அவர்களது கைகளைப் பலப்படுத்தினால் விதைப்பும் அறுவடையும் அவர்களுக்குக் கடினமல்ல.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.’

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். – திருவள்ளுவர்