‘விக்கி சத்தியலிங்கம்’ மோதல்

171

மெல்லமெல்ல புகைந்து கொண்டிருந்த வடமாகாணசபை மோதல் பகிரங்கமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. மாகாண சபை கட்டிடத்திற்குள் முட்டிமோதிக் கொண்டும், மாறிமாறி கையெழுத்து வேட்டைநடத்திக்கொண்டும் முரண்பட்டுக் கொண்டிருந்த வடமாகாணசபை மோதல் இப்பொழுது சந்திக்கு வந்து நிற்கிறது. வடக்கு அமைச்சர் சத்தியலிங்கத்திடம் இருந்த சில அமைச்சுக்களை முதல்வர் பறித்தெடுத்தது மோதலின் உக்கிரத்தை வெளியில் காட்டியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் கடந்த பல மாதங்களாகவே வெட்டுக்
குத்துத்தான். நூறு பாகை செல்சியசில் கொதித்துக் கொண்டிருந்தாலும், பகிரங்கத்தில் கைகோர்த்துக் கொண்டு “ஜனநாயக மென்றால் பல கருத்திருக்கும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா“ என சிரித்து மழுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? ஆளையாள் எதிர்ப்படவே முடியாதளவில் மோதல் உக்கிரமடைந்துள்ளது.

வடக்கு மாகாணசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு வென்றபோது தமிழர் இராச்சியம் மீண்டும் வென்றெடுக்கப்பட்டது என ஊடகங்களும் ஊதிப்பெருப்பிக்க, மக்களுக்கும் ஒரு ஆசுவாசம் பிறந்தது. நம்மவர்கள் இனி நம்மை கவனித்துக் கொள்வார்கள் என. ஆனால் அந்த ஆசுவாசத்திற்கு ஆயுள் அதிகமிருக்கவில்லை. மாகாண சபைக்குள் கூட்டமைப்பு உறுப்பினர்களே குடுமிப்பிடி சண்டையை ஆரம்பித்தார்கள். இதனால் மக்கள் பிரச்சனையெல்லாம் ஓரமாக தூக்கிப்போடப்பட்டுள்ளது.

முதல் “தெறி”

“எதார்த்தமாக கதைக்க அது பதார்த்தமானது” என்றொரு வடிவேலு ஜோக் உள்ளது. அது வேறு யாருக்கும் பொருந்தா விட்டாலும் முதல்வரிற்கு கச்சிதமாக பொருந்ததும்.அரசியல் பிரச்சனைகளில் முதல்வர் அதிரடி கருத்துக்கள் தெரிவிக்க, அதெல்லாம் கட்சிக்குள் “பதார்த்தமாக” தொடங்கியது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின் அவர் பேசியதெல்லாம் கட்சிக்குள் கடுப்பை கிளப்பியது. ஆனால் பேஸ்புக் போராளிகள் தெனாவெட்டு மீம்ஸ் போட்டு கலக்கினார்கள்.

மகிந்த வீட்டுக்கு போன பின்னர் இனஅழிப்பு பிரேரணை, ரணில் மீது பகிரங்க விமர்சனம், சுயநிர்ணய கோரிக்கை என அவர் அதிரடி காட்ட, முதல்வர் பிரச்சனையை சிக்கல்படுத்துகிறாரா? சிக்சர் அடிக்கிறாரா என்ற விவாதங்கள் எல்லாம் ஆரம்பித்தது. இனஅழிப்பு பிரேரணையை மகிந்த காலத்தில்த்தான் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஏன் அப்பொழுது நிறை வேற்றவில்லையென்பதற்கு முதல்வர் தரப்பிடம் தெளிவான பதிலில்லை!

புதிய அரசுடன் தமிழ்தேசிய கூட்ட மைப்பு நெருக்கமாக செயற்பட்டு இனப்பிரச்சனையை தீர்க்க முயலும்போது முதல்வர் வீண் நெருக்கடி ஏற்படுத்துகிறார் என்பது ஒருதரப்பு வாதம். ஒத்துப்போவதென்ற பெயரில் உப்புச்சப்பில்லாத தீர்விற்கு ஒத்துக் கொள்ள பார்க்கிறார்கள். நாங்கள்தான் தமிழர்களிற்கு தேவையானதை வலியுறுத்துகிறோம் என்பது முதல்வர் தரப்பு வாதம்.

இதுதான் முதல்வர் தமிழரசுகட்சி மோதலின் சுருக்க பயோடேட்டா. பின்னர் மாகாண சபைக்குள் ஆரம்பித்தது “உள்குத்து“. மாகாணசபைக்குள் நடக்கும் லடாய்களை தமிழ் பத்திரிகைகள் அவ்வளவாக வெளியில் சொல்வதில்லை. அந்த கூத்துக்களை காண கட்டாயம் இணையத்தளங்களிற்கு செல்ல வேண்டும். கண்கொள்ளாக்காட்சிகளாக இருக்கும்!

ஊர் இரண்டானது

மாகாணசபைக்குள் இரண்டு குறூப்ஸ் இயங்க தொடங்கியது. விக்கி குறூப், எதிர்க் குறூப். இரண்டு குறூப்பும் வெளிப்படையாக சிரித்து பேசிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஆளையாள் கவிழ்த்துவிடும் காரியத்தில்த்தான் கண்ணாயிருந்தனர்.

குறிப்பாக முதல்வரின் எல்லா நடவடிக்கையிலும் குறை கண்டுபிடிக்க எதிர்த்தரப்பு ஆரம்பிக்க, எதிர்தரப்புக்கள் எதிரித்தரப்புக்களாகி விட்டன. இதுதான் இன்றைய மாகாணசபை யதார்த்தம். இந்த இடமொன்றில்த்தான் முதல்வர் விக்கி வில்லங்கத்தில் சிக்கினார். அது தமிழ் மக்கள் பேரவை. தமிழ்தேசிய கூட்டமைப்பு, வடமாகாணசபை, தமிழ் மக்கள் பேரவையென்ற மூன்று பிரிவின் தனித்தனியான இனப்பிரச்சனை தீர்வு யோசனைகளில் ஒருவர் எப்படி அங்கம் வகிக்க முடியும்? இதுதான் உதைக்கும் கேள்வி.

இனப்பிரச்சனை தீர்வு திட்டத்தை மக்களிற்கு தெளிவுபடுத்தாமல் தமிழரசு கட்சி இரகசியம் பேணுகிறது, அரசியல
மைப்பு திருத்தம் பற்றிய பகிரங்க கலந்துரையாடல்களை அது விரும்பவில்லை யென கூறிக் கொண்டு ஆரம்பித்த தமிழ் மக்கள் பேரவையில் விக்கி இணைந்தது பெரும் வில்லங்கமானது. பேரவையின் தீர்வுத் திட்டத்தையும் மக்கள் மத்தியில் சேர்க்காமல் வெளிநாட்டு தூதரகங்களில்த்தான் சேர்க்கிறார்கள் என்பது வேறுகதை!

தமிழ்மக்கள் பேரவையின் செயற்பாடுகளிலிருந்து பின்னாளில் அவர் ஒதுங்கிக் கொண்டாலும், ஆரம்பத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். அவர் தமிழ்மக்கள் பேரவையில் இணையக்கூடாதென தீவிர எதிர்ப்பு காட்டியவர்களில் ஒருவர்தான் அமைச்சர் சத்தியலிங்கம். அந்த சமயத்தில் முதல்வரை நேரில் சந்தித்து தமிழ்மக்கள் பேரவை கூட்டத்திற்கு போக வேண்டாமென சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் முதல்வர் போனார்.இதுதான் இரண்டு பேரும் “தெறித்த“ இடம். இந்த சம்பவத்தின் பின்னர் முதல்வர் எதிர்ப்பு அணியில் சத்தியலிங்கமும் இணைந்துவிட்டார் என்கிறார்கள். இதன் பின்னான நாட்களில் இருவரும் அவ்வளவாக பேசியும் கொள்ளவில்லையென கூறப்படுகிறது.

நாங்கள் “டூ“

வவுனியா சிதம்பரபுரத்தில் காணிகளில்லாத மக்களிற்கு காணி உறுதி வழங்கப்படும் என ஒரு திகதி அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு வேறொரு திகதி அறிவிக்கப்பட்டது. இறுதியில் அந்த திகதியும் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம்?

பெரிதாக ஒரு காரணமுமில்லை. அமைச்சர் சத்தியலிங்கமும் முதல்வர் விக்கியும் ஆளுக்காள் “டூ“ (கோபம்) போட்டுக் கொண்டதுதான் காரணமென்கிறார்கள். அந்த காணி உறுதிகளை முதல்வர் இல்லாமல் வழங்க முடியாமலும், முதல்வரை நேரில் சந்தித்து அழைக்க முடியாமலும் அமைச்சர் திண்டாடினார் என்பது உள்வீட்டு தகவல்.

மக்களின் அடிப்படை பிரச்சனை யொன்றை தீர்ப்பதையே உள்குத்து அரசியல் இழுபறியால் தாமதித்துக் கொண்டிருப்பதை எந்தவகைக்குள் அடக்குவது? இந்த மோதல்கள் நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில்த்தான் வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை தோன்றியது. வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையமொன்றை அமைக்க கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் மாகாணசபையிடம் கோரியிருந்தார். இந்த விடயத்தை முன்வைத்து வவுனியாவில் அக்கப்போர் ஆரம்பித்தது.

தாண்டிக்குளம் விவசாய பண்ணையை பொருளாதார மத்திய நிலையம் ஆக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உள்ளிட்டவர்கள் விரும்பினார்கள். ஓமந்தையிலுள்ள மாணிக்கவளவு என்ற இடத்தை பொருளாதார மத்திய நிலையமாக்களாமென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பெருமளவான மாகாணசபை உறுப்பினர்கள் விரும்பினார்கள். வடக்கு முதல்வர் மற்றும் விவசாய அமைச்சரும் ஓமந்தையையே பரிந்துரைத்தனர். இடத்தேர்வு இடறுப்பட்டுக் கொண்டிருக்க வவுனியா அரசஅதிபர் ஒரு நிபுணர்குழுவை அமைத்திருந்தார். அவர்கள் இரண்டு இடங்களின் சாதக பாதகங்களையும் அறிக்கையிட்டுள்ளனர்.

தாண்டிக்குளம் விவசாய பண்ணையை பொருளாதார மத்திய நிலையமாக்கினால் பல்வேறு சிக்கல்கள் தோன்றலாமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் மாசடைதல், தொற்று அபாயம், பொளாதார மத்தியநிலையத்தை விஸ்தரிக்க முடியாமை, பயிர்களிற்கும் நோய்த்தொற்று ஏற்படலாமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்த்தான் வவுனியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாண்டிக்குளம் விவசாய பண்ணையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும், முதல்வரிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் தொடர்பான சர்ச்சைகளும் கிளம்பியிருந்தன. வவுனியாவின் சில பகுதிகளிலிருந்து கூட்டிவரப்பட்ட ஆட்களிற்கு எங்கு போகிறோம், ஏன் போராடுகிறோம் என்பதே தெரிந்திருக்கவில்லை என வவுனியாவின் முக்கிய சமூகசெயற்பாட்டாளர்களில் ஒருவரான மகேஸ்வரன் தாமோதரம்பிள்ளையும் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த போராட்டம் நடக்கப்போவதை முன்னரே அறிந்த முதல்வர் அவசர கடிதமொன்றை சத்தியலிங்கத்திற்கு அனுப்பியுள்ளார். போராட்டத்தை நடத்த வேண்டாம் என அதில் கேட்டிருக்கிறார். ஆனால் போராட்டம் நடந்தது. இதுதான் இரண்டு தரப்பையும் கீரியும் பாம்புமாக்கியுள்ளது. தாண்டிக்குளத்தை விட ஓமந்தைதான் பொருளாதார மத்தியநிலையம் அமைக்க சாதகத்தன்மை கூடிய இடம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்த பின்னரும் தாண்டிக்குளம்தான் வேண்டுமென்பதில் அமைச்சர் தரப்பு விடாப்பிடியாக நின்றது.

மாகாணசபையில் இது சர்ச்சையாகி இறுதியில் தாண்டிக்குளத்தையே பொருளாதார மத்திய நிலையமாக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலின் தொடர்ச்சியாகத்தான் அமைச்சர் சத்தியலிங்கம் வசமிருந்த சமூகசேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராபமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் முதல்வரால் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன. முதல்வர் தரப்புடன் இது பற்றி விசாரித்தால், அமைச்சு பதவிகளை பறித்ததற்கு வேறு காரணங்கள் கூறுகிறார்கள். முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படும்போது புனர் வாழ்வுப்பணிகளையே அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அதனாலேயே அமைச்சுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது என்றார்கள். சுகாதார அமைச்சு மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தால் மேலதிக அமைச்சுக்களை பறித்ததாக இன்னொரு கருத்தும் உள்ளது. வடமாகாண சபை அமைச்ஷ்சர்கள் பலரில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல தடவைகள் சுமத்தப்பட்டபோதும் விசாரணை நடத்தப்பட்டு அவை நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களே நீதிபதிகள் ‘பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்க வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே அக்கறையாக செயற்பட்டவர் அமைச்சர். அமைச்சர் இல்லாவிட்டால் வவுனியாவிற்கு பொருளாதார மத்திய நிலையம் வந்திருக்குமா தெரியாது. தாண்டிக்குளத்தில் அமைக்கவிடாமல் தடுப்பவர்கள் இதை குழப்புபவர்கள்’ என்கிறார்கள் அமைச்சர் சத்தியலிங்கம் தரப்பினர். மறுவளமாக எதிர்தரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள். மாகாண முதல்வரை கண்டுகொள்ளாமல் மத்திய அமைச்சர்களுடன் நெருக்கமாக செயற்படுகிறார், மத்திய அமைச்சர் ஹரிசன் விவகாரம் இதற்கு உதாரணம் என்கிறார்கள். இறுதியாக மாகாணசபையில் குழப்பம் ஏற்பட்டது, மாகாண சபை அமர்வு சமயத்தில் ஹரிசன் தொலை பேசியில் சத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு, பொருளாதார மத்திய நிலைய காணியை அன்றே தரவிட்டால் திட்டத்தை வேறிடத்திற்கு மாற்றப் போவதாக கூறியது. ஏன் இதனை ஹரிசன் முதல்வருடன் பேசவில்லை? காணியை அடையாளப்படுத்தியதும் மறுநாளேஹரிசன் பணிகளை ஆரம்பிக்கவில்லைதானே, இன்னும் ஓரிருநாள் பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன என கேள்வியெழுப்பும் அவர்கள், இது ஒரு திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலா மென்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதில் யார் சரி, யார் பிழையென்ற விவாதத்திற்கு நாம் செல்லவில்லை. ஏனெனில் இரண்டு தரப்பும் ஆயிரம் நியாயத்தை வைத்திருப்பார்கள். மக்களே நீதிபதியாகட்டும்!

– நாடியா
nadiyanice@yahoo.com