வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹிஸ்ஸின் ஹாப்ரே’ வழக்குத் தீர்ப்பு!

112

ஆபிரிக்க நாடுகளிலொண்றான சாட் குடியரசின் முன்னாள் ஜனாதிபதியான சர்வாதிகாரி ‘ஹிஸ்ஸின் ஹாப்ரே’ மீதான வழக்கில் அவர் குற்றவாளியாகக்  காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார், 1982-1990 வரையான அவரது ஆட்சிக் காலப்பகுதிக்குள் அவர் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம், கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்யப்பட்டு கடந்த ஒருவருடகாலமாக நடந்துவந்த விசாரணையின் மீதான தீர்ப்பு கடந்தவாரம் வெளியிடப்பட்டது. பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் அவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இவ்வழக்கின் போது நிரூபிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கு, ஆபிரிக்காவில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்காக அங்குள்ள சிவில் சமூகம் எடுத்த பெருமுயற்சிகளுக்கு ஒரு மைற் கல்லாக அமைகிறது. ஆபிரிக்கக் கண்டத்திலேயே நடைபெற்ற முதலாவது சர்வதேச விசாரணை இது. முதன் முதலாக ஒரு நாட்டின் முன்னைனாள் தலைவர்,சர்வதேச சட்டத்தின் கீழ் இன்னொரு ஆபிரிக்க நாட்டிலுள்ள நீதி மன்றத்தில்விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்குமாக இது அமைகிறது.

“ஹிஸ்ஸின் ஹாப்ரே மீதான வழக்கில் மே 30ம் திகதியன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். இது 25 வருடங்களுக்கு மேலாக இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திருந்த பல பத்தாயிரக் கணக்கான பாதிக்கப்பட்டோருக்கு பெரும் நிம்மதியைத் தருவதும், சர்வதேச நீதித் துறைக்கு மறக்க முடியாத ஒரு தருணமுமாகும்” என்று சர்வதேச மன்னிப்புசபை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டக்காரிலுள்ள ஆபிரிக்க விசேட நீதிமன்றம் (the Extraordinary African Chambers (EAC) ) அவரை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மற்றும் சித்திரவதைளுக்காக குற்றவாளியாக இனங்கண்டு, ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

“நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பானது, சர்வதேச குற்றவியல் சட்டங்களின் பிடியிலிருந்து சர்வாதிகாரி ஹிஸ்ஸின் ஹாப்ரே தப்பிவிடக் கூடாது என்பதற்காக அயராது போராடி வந்த, குற்றமிழைக்கப் பட்டவர்களுக்கு ஒரு பெரும் வெற்றியாகும். அத்துடன், போதிய அரசியல் உறுதி இருக்குமானால், அரசுகள் கூட்டாக இணைந்து செயற்படுவதன் மூலம், மிகவும் இறுக்கமான நிலமைகளின் கீழ் கூட, இத்தகைய குற்றச் செயல்களுக்கு நல்ல முடிவைக் கான முடியும் என்பதையும் இந்த வெற்றியானது எமக்கு உணர்த்துகிறது” என்று தெரிவிக்கிறார், சர்வதேச மன்னிப்பு சபையின் மேற்காபிரிக்க ஆய்வாளர் கேற்றன் மூட்டோ.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “உலகெங்கும் வாழ்கின்ற குற்றமிழைக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள், நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலமைகள் நிலவும் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பினும், அவர்களிடையே நம்பிக்கையை துளிர்க்கவைக்கும் ஒரு தருணமாக இது அமையும்@அவர்களுக்கு நியாயத்துக்காக போராடுவதற்கான பலத்தையும் வழங்கும். இந்த வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, முழு ஆபிரிக்காவிலுமுள்ள அனைத்து நாடுகளுக்கும் இத்தகைய முயற்சிகளைத் தமது நாடுகளில் மேற்கொள்வதற்கான உந்துதலை வழங்குவதாக அமைய வேண்டும்.

செனகலில் கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய இந்த விசாரணையில், 69 பாதிக்கப் பட்டோர்கள், 23 சாட்சிகள்,10 நிபுணத்துவ சாட்சிகள் தமது சாட்சிகளை வழங்கியிருந்தனர். மற்றைய சாட்சிகளுடன், 1980 இலிருந்து வெளிவந்த சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கைகளும் விசாரணைகளின் போது பயன் படுத்தப்பட்டன.
1970 களிலிருந்து. சர்வதேச மன்னிப்பு சபை, சாட்டிலுள்ள மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக தொடர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தது. பல்வேறு அரசியல் தடைகளுக்கு மத்தியிலும். பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து, விட்டுக்கொடுக்காத போராட்டத்தை ,நாட்டிலும், தமது பிராந்தியத்திலும்,முழு உலக மட்டத்திலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார்கள். இதன் விழைவாக 2012 ஓகஸ்ட் மாதத்தில் இந்த நீதிமன்று ச்தாபிக்கப்பட்டது கிட்டத்தட்ட 40,000 பேரளவில் 1982-1990ந்காலப்பகுதியில் அரச இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டும், எழுந்தமான கைதுகள் மற்றும் சித்திரவதைகள், காணாமற் போனவைகள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சாட் மக்களது விட்டுக் கொடுக்காத போராட்டம் அவர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி, இலட்சக்கணக்கில் மக்களைப் பலிகொடுத்த ஒரு சமூகமான ஈழத் தமிழர்களுக்கு ஒரு நல்லுதாரணமாக அமைவதும், அவர்கள் வழியொற்றி நமது சமூகமும் நீதிக்கான போரை தொடர்வதற்கு உந்துதலாக அமைவதும் இந்தச் செய்தி மூலம் நாம் பெறக்கூடிய முக்கியமான அனுபவம் என்பதை சொல்லத் தேவையில்ல. நமது சிவில் சமூகம் விழிப்புடன் செயலாற்றினால் எமது இழப்புகளுக்கான நீதியைப் பெர்றுக்கொள்வது ஒன்றும் நடக்க முடியாத விடயம் அல்ல!