நான்கு விருதுகளைத் தட்டிக்கொண்டது ‘செரஸ்’ திரைப்படம்!

172

கடந்த சனிக்கிழமை, ஜூன் 11ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் மையத்தில், தாய்வீடு பத்திரிகை மற்றும் சுயாதீனக் கலை, திரைப்பட மையம் இணைந்து நடாத்திய சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடைபெற்றது. பல நாடுகளிலும் வாழும் தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு சம்ர்ப்பிக்கப்பட்ட படங்களில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த பதினொரு திரைப்படங்கள் அங்கு திரையிடப்பட்டன. இவற்றில் கனடாவில் இருந்து வெளிவந்த மூன்று படங்களும் இருந்தன . இடையிடையே சில சிறப்புக்காட்சிகளும்திரையடப்பட்டன. திரையிடப்பட்ட படங்கள் பதினைந்து நிமிடங்களுக்குட்பட்டவையாக, சிறந்த தரமான படைப்புக்களாக அமைந்திருந்தன. சிறந்த படத்துக்கான பாலுமகேந்திரா விருதை பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட சதா பிரணவன் இயக்கிய ‘செரஸ்’ திரைப்படம் தட்டிக்கொண்டது. சினிமாவின் மொழியைப் புரிந்துகொண்டு கமராவினூடாகக் கதை சொல்லும் ‘செரஸ்’ திரைப்படம், ஈழத் திரைப்பட முயற்சிகளில் ஒரு பாய்ச்சல் என்றே சொல்லலாம். ஈழத் தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லவைத்த ஈழத்தவர்கள் படங்களில் முதற்படமாக வைத்துப் பேசப்பட வேண்டிய படம் இது.

நிகழ்வில் காட்டப்பட்ட படங்களின் விபரம் பின்வருமாறு.

 • வன்மம் (ஈழம்)
 • கெடு (ஈழம்)
 • அறன் (ஐக்கிய இராச்சியம்)
 • 18 குச்சிகள் (இந்தியா)
 • வெள்ளம் (ஈழம்)
 • ஆதி வர்ணம் (கனடா)
 • Your Destination (பிரான்ஸ்)
 • பங்களா நாய் (இந்தியா)
 • அருவி (கனடா)
 • நான் நானாக (பிரான்ஸ்)
 • செரஸ் (பிரான்ஸ்)

நிகழ்வில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா அவர்களுக்கு வாழ் நாள் சாதனையளர் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணராஜா அவர்களை ‘காலம்’ செல்வம் அருளானந்தம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணராஜா அவர்கள் ஒரு உணர்ச்சிகரமான ஏற்புரையை வழங்கினார். ஓவியக்கலையை ஏனைய கலைகளுக்கு சமானமாக இரசிக்கும் தன்மையை நமது சமூகம் கொண்டிருக்கிறதா, ஓவியக்கலைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியை அவர் விட்டுச் சென்றார். மேலும் நமக்கேயுரிய முக்கியமான கலைஞர்களை நாம் மறக்காமல் கௌரவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விட்டுச் சென்றார்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய, இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட சிறந்த படைப்பாளியும், கலை இலக்கிய மற்றும் சினிமா விமர்சகரும்,பத்திரிகையாளரும் ஆன அ.யேசுராசா அவர்கள் ஈழத்தில் தமிழ் சினிமாவின் வளர்ச்சி, அதன் போக்கு, என்பன பற்றிய மிக ஆழமான கருத்துக்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இவற்றில் தமிழ் சினிமாவின், பொழுது போக்கு அம்சங்களின் எதிர்மறை தாக்கத்தால் உருவாகும்  மாற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்கள் இந்த முயற்சிகளோடு எவ்வாறு இணைந்து கொள்வது அல்லது உதவுவது என்பதற்கான வழிகளையும் தனது பேச்சில் அவர் தொட்டுச் சென்றார்.

நிகழ்வில் அடுத்து விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் விபரம் பின்வருமாறு.

சிறந்த படத்துகான விமர்சகர் விருது: அருவி
சிறந்த படத்துக்கான பாலு மகேந்திரா விருது: செரஸ்
சமூக அக்கறையுடைய சிறந்த படத்துகான விருது:  நானாக நான்.
சிறந்த படத்துகான நடுவர் விருது:  (Jury Award) – Your Destination
சிறந்த இயக்குனருக்கான விருது:  செரஸ் படத்திற்காக சதா பிரணவன்
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது: செரஸ் படத்திற்காக விஜிதன் சொக்கன்
சிறந்த படத்தொகுப்புக்கான விருது (Editing) : செரஸ் படத்திற்காக விஜிதன் சொக்கன்
சிறந்த பிரதிக்கான விருது: 18 குச்சிகள் படத்திற்காக மணிமாறன்
சிறந்த நடிகருக்கான விருது: 18 குச்சிகள் படத்துகாக இலங்கை நாதன்
சிறந்த நடிகைக்கான விருது: செரஸ் படத்திற்காக தேனுகா கந்தராஜா
சிறப்பு விருது- அருவி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்:  வானதி தனேஷ்.
படத்தெரிவுக்கான நடுவர் குழு: எரிக் நட்டேல், கரன் நட்டேல், P.விக்னேஸ்வரன், V.ஆனந்தராம், அ.கந்தசாமி, ராஜதுரை ரமேஷ், நி.விஜயபத்மா, லெனின் வி.சிவம், ரி.கிருஷ்ணராஜா, ரஞ்சன் சேவியர்.
விமர்சகர் விருதுக்கான நடுவர் குழு: கார்த்திகா கோபி நாத், P.தயாநிதி, ரவிச்சந்திரிகா.

நிகழ்வின் முடிவில் “மின்பொறிக்குள் சம்பூர்” என்கிற ஆவணப்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வு மதியம் 12.30க்கு ஆரம்பித்து
மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.
இப்படங்கள் அனைத்தும் நமது கலைஞர்
களின் திறமையை வெளிக்கொணர்ப
வையாக அமைந்தது. இவ்வாறான நிகழ்வுகள் கலைஞர்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்ற வகையில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள். படங்களில் நடித்த அனைவருக்கும் குறிப்பாக ஈழத்தில் இருந்து மலர்ந்திருக்கும் பல குழந்தை நட்சத்திரங்களுக்கும் வாழ்த்துக்கள்.