அகதி முகாம்களை மூடவைப்பது எப்போ?

98

ழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்குமான தொடர்பாடல் வரலாற்று காலந்தொட்டு இருந்து  வருகிறது. இலங்கையில் சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் அகிம்சைவடிவில் தந்தை செல்வா காலத்தில் இருந்த போதும் அதன் அசைவியக்கம் தமிழகத்தில் இருந்தது  . அகிம்சைபோராட்டம்  தோல்வியுற்று  ஆயுதப்போராட்டத்துக்கு  மாறியதும்,  அதுவும் தமிழகத்தில்  பெரும் அசைவை ஏற்படுத்தியது.  இது யாவரும் அறிந்த ஒன்றுதான் . அகிம்சை, ஆயதப்போராட்டம் இரண்டும்  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி  செய்யப்பட்ட போராட்டங்களாக இருந்தாலும்  இந்தியாவில் வெற்றி பெற்றதாக கூறப்படும் அகிம்சை போராட்ட வடிவம்  உட்பட  ஆயுதப்போராட்டமும் இலங்கைதீவில்  வெற்றி பெறவில்லை.  ஈழத்தமிழர்க்கு நீதி கிடைக்காத பட்சத்தில் எத்தகைய போராட்ட வடிவம் ஈழத்தமிழர்க்கு தேவை என்பது தனியே ஆய்வுக்குரியவை இக்கட்டுரையின் மையம் அதுவல்ல.

இலங்கையில் ஏற்பட்ட முக்கியமான எல்லா போராட்டங்களிலும்  இந்தியாவும் தமிழகமும்  அதன் தன்மைக்கேற்ப  செயல்பட்டபோதும்  அகதிகள் விடயத்தில் மட்டும்பெரும் ஏமாற்றத்தையே  தந்துகொண்டிருக்கிறது என்பது தான  ஈழஅகதிகள் பற்றிய வரலாற்றின் இருண்டகாலமாக இருக்கிறது. அகதிகளுக்கான ஐ.நா.வின் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது உட்பட காலத்துக்கு காலம் சூழ்நிலைகள் மாறி வந்தபோதும் அகதிகள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு  திருப்தியில்லாமல் பாரபட்சமாகவே இருந்து வருகிறது.

1983 ம் ஆண்டு முதல் அகதிகள் இந்தியாவின் கடைகோடி மாநிலமான  தமிழகத்திற்கு  வர ஆரம்பித்ததில் இருந்து, கிட்டத்தட்ட  33 ஆண்டுகள் தமிழகத்தில்  ஈழஅகதிகள் இருந்து வருகிறார்கள்.  சமீபகாலமாக அகதிகள் அபாயகரமான கடல் பயணத்தின் ஊடாக இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது,  ரவீந்திரன் என்ற அகதி மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்ததும், அகதிகள் விடயத்தில்  இந்தியாவின் இறுகிய இன்னொரு முகத்தையே காட்டுகிறது இந்தியா அகதிகள் விடயத்தில்  இறுக்கமாக இருக்கும் அதேவேளை தமிழகத்தில் எட்டுக்கோடி தமிழர்கள்  வாழ்ந்தும் தமிழகத்தில் உள்ள அகதிகளை கண்ணியமாக  நடத்தவுமில்லை,   தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி  அகதிகளை பராமரிக்கவுமில்லை,  அதற்காக இந்திய மத்திய அரசை வலியுறுத்தவுமில்லை.

அதேவேளை ஈழப்.போராட்டத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு  போராட்டம் நடத்திய தமிழகம், போராட்டத்தின் பக்கவிளைவான அகதிகள் விடயத்தில்  கண்ணை இறுக மூடிக்கொண்டது  என்பது மிகையில்லை. 33 ஆண்டுகள் கடந்த அகதிகள் வரலாற்றில்  நான்கு கட்டங்களாக அகதிகள் அடைக்கலம் தேடி தமிழகம் வந்திருக்கிறார்கள்

1)    முதல் கட்டம்- 1983-  1987  — 1,34,053 அகதிகள்
2)     இரண்டாங்கட்டமாக 1989 -1991   — 1,22,78 அகதிகள்
3)     மூன்றாங்கட்டமாக 1996 – 2005  — 22,418 அகதிகள்
4)     நான்ம்கட்டமாக 2006- 2007 — 19,680 அகதிகள்

நான்கு கட்டங்களாக கிட்டத்தட்ட  மூன்று இலட்சம் அகதிகள் இதுவரை தமிழகம் வந்திருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலமாக அய்ரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். பலகட்டங்ளாக இலங்கை சென்றிருக்கிறார்கள்.  தற்போது 32 மாவட்டமுடைய   தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 107 முகாம்களில் அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் வாழ்கிறார்கள். முகாமிற்கு வெளியே சற்றேறக்குறைய முப்பதாயிரம் பேர் வாழ்கிறார்கள். அகதிமுகாம்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள உடல் உழைப்பாளிகள். இவர்களில் 29,500 நபர்கள் இந்திய வம்சாவளி ஈழ.தமிழர்கள் . மற்றவர்கள் ஏனைய சமூகங்களை சேர்ந்தவர்கள்.இலங்கையில் வன்னிப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். முகாம் அடிப்படையை புரிந்து கொள்வதற்காகவே  இவ்வாறு பிரித்து  கூறினேனே தவிர இவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் அகதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

2009 இறுதிப்போர்முடியும் வரை அகதிகள் கடுமையான கண்காணிப்பிற்குள்  அடிப்படை மனித சுதந்திரம் இல்லாமல்தான் அரசு வைத்திருந்து என்ற குற்றச்சாட்டை வைக்கும்போது,  அரசுதரப்பில் அதை நியாயப்படுத்தி கூற  காரணங்கள் இருந்தது. அதை ஏற்க முடியாவிட்டாலும் வாதத்திற்காகக ஒத்துக்கொண்டால்,  2009 க்கு பின் அரசு கூறும் காரணங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட பின்பும் அதே காரணங்களை கூறி  அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில்  நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் முடிந்து ஏழாண்டுகளாக அரசுகளின் மௌனமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

ஈழப்போர்குறித்து  தமிழகம் மட்டுமின்றி புலம்பெயர் தேசங்ளிலும் பேசிய அளவும் போராட்டங்கள் நடந்த அளவும் தமிழம் வாழ் எளிய அகதிகள் பற்றி பேசப்பபட வேயில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. அகதிகள் தங்கள் பிரச்சனைக்காக தாங்களே போராடும் நிலை தமிழகத்தைப் பொறுத்தவரை வாய்ப்பே இல்லை அவர்களின் இயல்பு மனநிலை மற்றும்  தொடர் கண்காணிப்புக்குள் வாழ்தல் அவர்கள்களை அத்தகைய போராட்ட நிலைக்கு நகர்தாது என்பபதை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் காணி பூமி இல்லை  நிரந்தர முகவரிகூட இல்லாத சனங்கள், கால்நூற்றாண்டுக்கு மேலாக முகாம்களில் நெருக்கடிக்குள் வாழ்ந்து பழகியவர்கள் எப்படி எங்கே போவார்கள்? அதற்காக எல்லோருக்கும் இரட்டைக் குடியுரிமை என்பது சரியல்ல.முதலில் இலங்கை செல்ல விரும்பியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும். போக விரும்பாதவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் இரட்டை குடியுரிமை என்பது இரண்டு நாடுகள்  சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளடங்கியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை . அதே வேளை அரசுகள் நினைத்தால் ஒப்பந்தங்கள் மூலமாக நடைமுறைப்படுத்தமுடியும்.

ஆனால் அதற்கான உரையாடல்கள் எங்கிருந்தும் வரவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. ரவீந்திரனின் கோர மரணத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் அறிக்கையில் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமைக்கு முயற்சி செய்வேன் என்று அறிவித்து  மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார். அதற்கான மேலும் அழுத்தத்தை தருவது யார்? அதற்கான கால நிர்ணயம் ஏதுமுண்டா?  தமிழக முதல்வர்கள் மத்திய அரசுக்கு எழுதும் கடிதத்திற்கு என்ன பதிலோ அதுதான் கோரிக்கை மனுவுக்குமா? சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானங்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது? தமிழக முதல்வருக்கு எந்தளவு பொறுப்பிருக்கோ அதே அளவு பொறுப்பு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுக்குமிருக்கிறது. அவருக்கு உள்நாட்டில் நெருக்குதல் இருக்கலாம் .மறுப்பபதற்கில்லை சும்மா பேசக்கூடவா முடியாது .மாற்றாந்தாய் மனநிலையில் தொடர்ந்து  தமிழம் வாழ்அகதிகள் விடயத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் மௌனியாகவே இருக்கிறார் அகதிகள் தமிழகத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் இலங்கை குடிமக்ககள் .

பரிபூரண சுதந்திரதுடன் பாதுகாப்பாக இருந்து கொண்டு  எல்லாத்தையும் விவாதத்திற்குட்படுத்தும் புலம்பெயர் சமூகம் அகதிகள் விடயத்தில் ஏன் மௌனம் காக்கிறது?  சிங்கள அரசின் மௌனம் ஆச்சர்யமில்லை. மற்ற எல்லோருடைய  பெருத்த மௌனம் அகதிகளை ஒதுக்குகிறார்களோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது. தீபெத் அகதிகளை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு  அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து சுதந்திரமாக விட்டிருக்கிறது. ஆனால் ஈழத்து அகதிகளை அகதிகளாக ஏற்கவில்லை  சட்டவிரோத குடியேறிகளாக கருதி அத்தனை கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது அடிப்படை சுதந்திரம்கூட இல்லாத நிலையில் வாழ நிர்ப்பந்தித்திருக்கிறது. உலகத்துக்காகவும் நிர்வாக நடை முறைக்காக மட்டுமே அகதி என்ற சொல்லை பயன்படுத்துகிறது.  இது குறித்தெல்லால் யார் பேசுவது? அகதிகள் விவகாரம் உள்ளூர் பிரச்சனையோ சமூகப்பிரச்சனையோ இல்லை .அகதிகள் சட்டத்தில் இந்தியா கை எழுத்திததால் இது சர்வதேச பிரச்சனையுமில்லை . முன்பு கூறியதுபோல் இலங்கை இந்தியா இருநாட்டு பிரச்சனை.  எல்லோரும் தொடர்ந்து குரல்கொடுப்பபதன் மூலமாகவே அரசுகளின் கவனத்தை பெறமுடியும்.  அரசுகளை நிர்பந்திக்க முடியும்  இப்பகூட நாம் இதை பேச மறுத்தால் வரலாறு மன்னிக்காது.

தொடர்ந்து குற்றச்சாட்டாகவே பதிவு செய்வதாக என்மேலும் குற்றச்சாட்டு பதிவாகிக்கொண்டே வருகிறது. அவ்வாறுதான் சூழ்நிலையிருக்கு என்று நான் காரணமெல்லாம் கூறவில்லை. இந்த முகாம்கள் மூடப்பட வேண்டும்.மக்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். ஜீன் 20 அகதிகள் தினமும் வந்து போய்விட்டது. அதை  முன்னிட்டாவது தமிழகத்தில் உள்ள அகதிமுகாம்களை மூட எந்த முயற்சியும் நடக்கவில்லை!

இந்த மக்களின் எதிர்கால நலனை அடிப்படையாகக் கொண்டு அரசுகள் இரண்டுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் விதத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடவடிக்கையில் இறங்கப் போவது எப்போ?