கனடா நாள்

னடா நாள் (Canada Day/ Fetudu Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867ஆம் ஆண்டு யூலை முதலாம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்துப் பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம்” கொண்டு வரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் யூலை முதலாம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது. பின்னர் 1982ஆம் ஆண்டு கனடாச் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள், கனடா முழுவதிலும் மற்றும் உலக நாடுகளில் வாழும் கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

1867ஆம் ஆண்டு யூலை 1ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக்,மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் உரிமை வழங்கப்பட்டது. கனடா வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கை அமைப்புகளையும் கால நிலைகளையும் கொண்டது.

இன்றைய கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியூம் ஆட்சி மொழியாகும். பிரெஞ்சு மக்கள் 1605ஆம் ஆண்டளவில் றோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்
லாந்தில் 1610ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்குப் புது நோய்களைக் கொண்டு வந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத் திறனற்ற முதற் குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள். பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக ”Chinese Exclusion Act” 1923ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.

கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாகப் பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793ஆம் ஆண்டில், மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடிவந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என்று அழைக்கப்பட்டது.

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூ பெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோசியா British North American Act மூலம் 1867ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. நியூ பவுன்லாந்து 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.

கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையூம் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையூம் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப் பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் Thundra (low grasses, Shrubs, mosses, Lichens)வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) வளர்கின்றன.

கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையைக் கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும் இது, -40 வரை தாழக்கூடியது. வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர் காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை. கோடை காலத்தில் கிழக்கிலும் மேற்கிலும் 20 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையூம், இடைப்பட்ட பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையூம் கொண்டிருக்கும். விதிவிலக்காக, பசிபிக் பெருங்கடல் கடற்கரை கொண்டிருக்கும் பிரிற்ரிஸ் கொலம்பியா மிதவெப்பக் காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாகவும் இருக்கின்றது.

நிலம், நீர், காடு, மீன், எண்ணெய், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கனடாவில் மிக அதிகமாக உண்டு. பிரிட்டிஸ் கொலம்பியாவில் மரங்கள் பேண்தகு முறையில் வெட்டப்பட்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1950களில், அல்பேர்டாவில் எண்ணெய் கண்டறியப்பட்டது. அல்பேர்டா, இன்று செல்வம் மிக்க ஒரு மாகாணமாக வளர எண்ணெய் உற்பத்தி ஏதுவாக்கிற்று. கனடாவே அமெரிக்காவுக்கு அதிக விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்பது குறிப்படத்தக்கது. அட்லாண்டிக் மாகாணங்கள் மீன்பிடி வளம் மிக்கப் பகுதிகளாகும். எனினும் முந்தைய பேண்தகு முறையற்ற மீன்பிடிப்பால் பல மீன்வளங்கள் அருகிப்போய்விட்டன. தற்சமயம் இந்த மாகாணங்களை அண்டிய கடற்பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்து, அதை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வட ஒன்ரோறியோவில் தங்கம், நிக்கல், யுரேனியம், காரீயம் ஆகிய கனிமச் சுரங்கங்கள் உண்டு. இவற்றின் உலக உற்பத்தி அளவில் கனடாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கனடா இயற்கைவளம் மிக்க நாடு என்றாலும் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP – Gross domestic Product) ஆறு வீதம் மட்டுமே இத்துறையில் இருந்து வருகின்றது நான்கு வீதமான மக்களே இதில் பணியாற்றுகிறார்கள்.

கனடாவின் பொருளாதாரத்தில் பெரியதுறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்-மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 வீதம் மக்கள் பணியாற்றுகின்றனர். கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு ஆகும்.

பொதுவாக ஒரு நடுநிலைப் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றும்,  அதே வேளை பொருளாதாரத்தை வளப்படுத்துவதில், சமூக நீதியை பேணுவதில் அரசுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும், கனடாவின் அணுகுமுறையாக இருக்கின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமவாய்ப்புச் சூழலைப் பேணல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு முக்கியப் பங்கு வகிக்கின்றது.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு யூலை முதலாம் திகதிய கனடா நாள், கனடாவின் 150வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.