பேயான த்ரிஷா

147

அரண்மனை 2 படத்திற்கு முன்பு வரை த்ரிஷா மரங்களைச் சுற்றி டூயட் பாடி மகிழ்ச்சியாக இருந்தார். வெளிநாடு சென்றால் இன்னும் மகிழ்ச்சி. விதவிதமான ஆடைகளில் அழகழகான லொகேஷன்களில் அபிநயம் பிடித்தால் போதும். அரண்மனை 2 -க்குப் பிறகு எல்லாமே மாறிப் போனது. அந்தப் படத்தில் ரோப்பில் கட்டி த்ரிஷாவை அந்தரத்தில் தொங்கவிட்டார்கள். அடுத்து நடித்த நாயகி படத்திலும் அந்தரத்தில்தான் பாதி நாளும். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட பத்து தினங்களில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு படமாக்கினார்களாம். இப்போது மோகினி படத்துக்காக லண்டன் சென்றிருக்கிறார். இங்கும் உயரமான கட்டிடத்தில்தான் த்ரிஷாவின் கதாபாத்திரம் உலவுகிறதாம். பேயாக நடிப்பது சும்மாவா.

மூன்று கெட்டப்பில் சிம்பு
சிம்பு தற்போது நடித்து வரும் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்துக்காக மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், சிம்பு மூன்று கெட்டப்புகளும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சிம்பு இப்படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இப்படத்திற்கான ஒரு பாடல் முடிவடைந்துள்ளது.

ரித்திகாவிற்கு  பொருந்தும்
பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெற்றி பெற்ற படம், சிவலிங்கா. இதனை தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து எடுக்க முயன்றார் வாசு. ஆனால் கிடைத்தது லாரன்ஸ். அவர்தான் சிவலிங்காவின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் வாசுவின் மகன் சக்தி. இந்தப்படத்துக்கு நாயகி தேடிக் கொண்டிருந்தனர். தற்போது இறுதிச்சுற்று ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

எனக்கு வாய்த்த அடிமைகள்
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகத் திறமைசாலிகள்..” எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் தமிழக பிரசித்தம். அதனை சற்றே மாற்றி, எனக்கு வாய்த்த அடிமைகள் என்று பெயர் வைத்துள்ளனர். மகேந்திர ராஜமணி என்பவர் இயக்கத்தில் ஜெய் ஒரு படம் நடிக்கிறார். நாயகியாக நடிப்பது ப்ரணித்தா. படத்தில் ஜெய்யின் அடிமைகளாக காளி வெங்கட், கருணாகரன், நவீன் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக் களத்தில் படம் தயாராகிறது. இது தவிர, ராட்சஸன், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் என இரு படங்களில் ஜெய் நடித்து வருகிறார்.