வைத்தியரிடம் கேளுங்கள்

232

ஷி.சரண்யா (30), நல்லூர்
கேள்வி:- எனது குழந்தைக்கு மூன்று வயது வயிற்றுப் பொருமல் இருக்கிறது. அடிக்கடி அசீரணம் ஏற்படுகிறது. என்ன செய்யலாம்?
பதில்:- இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுங்கள். தோடம்பழம் போன்ற பழச்சாறு கொடுக்கலாம். ஒமம் அசீரணம் போக்க சிறந்தது ஆகும். ஒமத்தை வறுத்து அவித்து தேன் விட்டுக் கொடுக்கலாம். அசீரணத்துடன் வயிற்றோட்டம் இருக்குமாயின் கபாட மாத்திரையை வைத்தியரின் ஆலோசனையுடன் கொடுக்கலாம்.

மயில்வாகனம் (35), கோண்டாவில்
கேள்வி:- சீரகம் வயிற்று நோய்களுக்கு சிறந்தது என்கின்றார்கள். இதை எப்படி பாவிக்க வேண்டும்.
பதில்:- இதைக் குடி நீராகவும், கறிக்குபோடுகின்ற மசாலாப் பொருட்களில் ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்துகிறார்கள். இளஞ்சூடான சீரகக் குடிநீர் இரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளை சரி செய்து வாதம், பித்தம், கபம், மூன்றையும் சரிப்படுத்தும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கின்றது. வயிற்றுப் பொருமல், உப்புசம், வாந்திபேதி, காலையில் தோன்றும் பித்தம், தலைச்சுற்றல் என்பவற்றிற்கு சிறந்த பானம்.

வலிங்கம் (45), இருபாலை
கேள்வி:- நான் மேசன் வேலை செய்பவன் அடிக்கடி முதுகுப்பிடிப்பு ஏற்படுகிறது. என்ன மருந்து பாவிக்கலாம்.
பதில்:- முதலில் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸ்சின் அளவை பார்த்துக் கொள்ளுங்கள் நீரிழிவு நோய் இல்லையென்றால், மிளகு, கராம்பு, சித்தரத்தை, சுக்கு இவற்றை சமனிடை எடுத்து குடிநீர் செய்து காலை, மாலை, இரு வேளை அருந்தவும். வாதநாராணி இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். இவற்றுக்குக் குணமாகாமல் விட்டால் பல ஆயுள் வேத மருந்துகள் இதற்கென உண்டு. ஆயுர்வேத மருத்துவரின் உதவியுடன் உபயோகிக்கலாம்.

சண்முகம் (50), கஸ்தூரியார் றோட்.
கேள்வி:- யாழ்ப்பாண மருத்துவத்தில் கற்பூரவள்ளிக்கு தனிச்சிறப்பு உண்டு. முன்பெல்லாம் வீடுகளில் இதை வளர்ப்பார்கள். இதன் மருத்துவக் குணங்களைக் கூற முடியுமா?
பதில்:- கற்பூரவள்ளி ஒரு கிருமிநாசினியாகும். இதனால் இதனை வீடுகளில் வளர்ப்பார்கள். குழந்தைகளின் சளியை போக்குவதில் சிறப்பிடம் பெறுகிறது. கற்பூரவள்ளி இலையை எடுத்து சாறு பிளிந்து அரை தேக்கரண்டி அளவு தேனுடன் கொடுக்க நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வெளியேறும். கற்பூரவள்ளி, தூதுவளை, வல்லாரை இலைகளை எடுத்து 100 மில்லிலீற்றர் நீரில் அவித்து 50 மில்லிலீற்றர் ஆக்கி பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம்.

சிதுளசி (20), மீசாலை
கேள்வி:- எனக்கு அடிக்கடி தும்மல் ஏற்படுகின்றது. சித்த மருந்துகள் பாவிக்கலாமா?
பதில்:- பீனிசம் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். பீனிசதைலம் அல்லது வெற்றிலைச் சாற்றெண்ணையை தலைக்கு வைத்து வரலாம். திப்பிலிப் பொடியை தேனில் சாப்பிட்டு வாருங்கள். குளிரான உணவுகளை தவிர்க்க வேண்டும். கிரந்தி உணவுகளைத் தவிருங்கள். அல்லது துளசி, தூதுவளை, சுண்டங்கத்தரி, இவற்றின் இலைச்சாறு எடுத்துக் குடித்து வரக் குணமாகும்.

மருதலிங்கம் (60), சாவகச்சேரி
கேள்வி:- எனது முழங்காலில் வீக்கத்துடன் உளைவு காணப்படுகின்றது. இரவில் காய்ச்சலும், இருக்கின்றது. வாத சுரத்திற்கு குடிக்கக் கூடிய குடிநீர் முறை ஒன்றைத் தருவீர்களா?
பதில்:- பாவட்டை இலை, கொன்றை இலை, சிற்ரமட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர் ஒரு பிடி இவற்றுடன் மிளகு, ஒமம், வசம்பு, 10 கிராம் எடுத்து அடித்து 1 லீற்றர் நீர் விட்டு 1ஃ4 லீற்றர் ஆக காய்ச்சி 30 மில்லிலீற்றர் அளவாக மூன்று வேலை குடித்தால் வாதசுரம் நீங்கும்.