வைத்தியரிடம் கேளுங்கள்

விமலேஸ்வரன், வயது:- 25, கோப்பாய்
கேள்வி:- எனக்கு காலை எழுந்தவுடன் லேசான தலைச்சுற்றும், வாந்தியும் ஏற்படுகின்றது. சித்த மருத்துவரிடம் காட்டிய போது பித்தம் அதிகரிப்பதால் இவ்வாறு ஏற்படுகின்றது என்கின்றார். பித்தம் தனிய என்ன செய்யலாம்?
பதில்:- செங்களும்புச்சாறு 100 மில்லிலீற்றர் எலுமிச்சைப்பழச்சாறு 10 மில்லிலீற்றர் ஆகியவற்றுடன் சீரகப் பொடி கலந்து காலையில் அருந்தி வாருங்கள். நிலவேம்பு, பற்ப்படாகம், கடுகு, ரோகினி, கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து குடிநீராகக் காய்ச்சி குடித்து வரலாம்.

ஆ.சபாரத்தினம், வயது:- 50, வேலணை
கேள்வி:- எனது கண்பார்வை சற்று மங்கலாகி வருகின்றது. கண்ணாடி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை. கண்பார்வையை அதிகரிக்கும் சித்த மருத்துவம் கூறுவீர்களா?
பதில்:- பொன்னாங்காணி இலையை காலையில் மென்று தின்று பின் பால் குடித்து வந்தால் கண்பார்வை அதிகரிக்கும் கடுக்காய் தூள், நெல்லிவற்றல் இரண்டையும் இடித்து 1 தேக்கரண்டி வீதம் தினம் சாப்பிட்டு வர கண்பார்வை அதிகரிக்கும். பொன்னாங்காணி தைலம், பிருங்காமலத் தைலம், என்பவற்றில் ஒன்றைத் தினம் வைத்து வாருங்கள்.

சுந்தரலிங்கம், வயது:- 38, இருபாலை
கேள்வி:- அடிக்கடி காய்ச்சல், தடிமல், ஏற்படுகின்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது என்கின்றார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை மேம்படுத்த என்ன செய்யலாம்?
பதில்:- வெள்ளைக் கரிசிலாங்கனி 200 கிராம், தூதுவளை 50 கிராம், மொசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து இடித்து பாலில் கலந்து சக்கரை சேர்த்து அருந்தி வரலாம். இதோடு நெல்லி, விளாங்காய் என்பதை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இத்தோடு தும்பை, கரிசிலாங்கனி, குப்பைமேனி, என்பவற்றை சூரணம் செய்து தினம் அருந்திவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சுதன், வயது:- 35, பாஷையூர்
கேள்வி:- நான் வீட்டு வேலைகள் அதிகமாக செய்கின்றேன் இருந்தும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி தேவை என்கின்றார்கள். கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
பதில்:- உடல் அப்பியாசம் என்பது ஆரோக்கியத்தையும், உடலுறுதியையும் பேணுவதற்கான உடற்செய்முறையாகும். உடற்பயிற்சிப் பொழுது என்புகள், தசைகள், வலுப்பெறுவதோடு குருதிச்சுற்றொட்டம், சுவாசம் தேவைப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் நேயெதிர்ப்புத் தன்மை மேம்படுவதால் நோய் வராது தடுக்கப்படுகின்றது. மேலும் பயிற்சியின் போது கவனம் பயிற்சியில் குவிக்கப்படுவதால் மனஅழுத்தம் போன்ற நிலைகளுக்கும் தீர்வாகின்றது. நோயுற்றவர், நோயற்றவர், என்ற வேறுபாடில்லாது அனைவருக்கும் ஒழுங்கான அல்லது கிரமமான உடற்பயிற்சி வேண்டும். சில நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு தேக அப்பியாசம் அவசியமாகின்றது.

நவரத்தினசாமி, வயது:- 40, ஆவரங்காடு
கேள்வி:- எனக்கு நீண்ட காலமாக உள்மூலம் இருக்கிறது. சிலவேளை கடுப்பு அதிகமாகி வேதனை தருகிறது மருந்து சொல்லுங்கள்?
பதில்:- தொட்டாச்சினிங்கி இலை, நொச்சி இலை, படிகாரம், வேப்பெண்ணை, ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு, ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம்உள்ள பகுதியில் பூசிவர வேதனை குறையும். பிரண்டை, கற்றாளை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய், சம அளவு எடுத்து அரைத்து தினம் மோரில் கலந்து உண்டு வந்தால் உள்மூலம் குணமடையும். வைத்தியரின் ஆலோசனையுடன் கருணைக்கிழங்கு லேகியம் எடுத்து வாருங்கள்.

நவமணி, வயது:- 35, நுணாவில்
கேள்வி:- நீண்டகாலமாக வயிற்றுநோ இருக்கின்றது. மாதவிடாய் ஒழுங்கீனமும் உண்டு. இதற்கு கருப்பை பலவீமாக இருப்பது காரணம் என்கின்றார்கள். கருப்பையை பலப்படுத்தக் மூலிகை மருந்துகள் குறிப்பிடுவீர்களா?
பதில்:- சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள், இவற்றை சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும். அசோகமரத்தின் பட்டைகள், மாதுளம்பழத்தின் கோது என்பவற்றை காயவைத்து பொடி செய்து தேனுடன் காலை, மாலை அரை தேக்கரண்டி அளவு அருந்திவரலாம். அல்லது வேப்பங் கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் சாப்பிட்டு வரவேண்டும். 3 மாதம் தொடர்ச்சியாக மருந்தை அருந்தினால் கருப்பை கோளாறு நீங்கிகர்ப்பம் உண்டாகும். மேலும் மாதுளம் பழம், அறுகம்புல், சிறுகுறிஞ்சா, வேப்பம் பூ, போன்ற மூலிகைகள் கருப்பைக்கு வலுவளிக்கின்றன.