எல்லை மீறிச் செல்லும் தமிழக இழுவைப் படகுகள் பிரச்சினை!

140

மிழக இழுவைப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடித்து வருகின்றமை தொடர்
பானபிரச்சினை அதன் எல்லையை மீறி வளர்ந்து சென்றிருக்கிறது. அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளால்  முழு மீன் வளத்தையும் குஞ்சு குருமன்களோடு வாரி அள்ளிச் செல்லும் இந்த மீன்பிடித்தலால்  வட பிரதேச மீனவர்களின் வாழ்வாதராம் பாதிக்கப்படுகின்றது. சிலசந்தர்ப்பங்களில் அத்துமீறி நுழையும்  தமிழக மீனவர்களின் இயந்திரங்கள் வட  பகுதி  மீனவர்களின்  வலைகளையும்  அழித்து விட்டிருக்கின்றன. .இதனால் வட பிரதேச மீனவர்கள் இந்த  அத்துமீறி  நுழைந்து  மீன் பிடித்தலை எதிர்த்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை நாட்டின் இறைமையை மீறுகின்ற ஒரு செயல் என்றமையால்   இலங்கை கடற்படை அத்துமீறி  நுழைந்து  மீன்பிடிப்பவர்களை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி வருகிறது.. இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றமை இக் கைதிற்கு மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். படகுகளும் வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்படுகின்றமை, இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்துதல், படகு மற்றும் வலைகளை அழிப்பது என்பவற்றை எதிர்த்து தமிழக மீனவர்கள் போட்டங்களை நடாத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களின்  படகுகள் மீளஒப்படைக்கப்படாமல் இருப்பது குறித்தும் போராட்டங்கள்  நடாத்தப்பட்டுள்ளன.தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக மீனவர்களின் பிரச்சினையில் தலையிட்டு சாதகமான தீர்வைக்காணுமாறு இந்திய மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதங்களை எழுதி வலுத்தியுறுத்தி வருகிறார்.  கூடவே இப்பிரச்சினையைத் தீர்க்க கச்சை தீவை மீட்பதே  வழி  எனக் கூறி  அதனை வலியுறுத்தியும் வருகிறார் தமிழக முதலமைச்சர்.

இப்பிரச்சினை, அரசியல் அரங்கில் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையாகவே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இந்திய – இலங்கை ஒருங்கிணைப்புக் குழுவொன்று  உருவாக்கப்பட்டு ஒன்பது கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஒன்பதாவது கூட்டத்தில் இருநாட்டு வெளிநாட்டு அமைச்சர்களும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் உடன்பாடு  கண்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் தீர்வு காணப்படாத ஒரு  பிரச்சினையாக  இருந்துவந்த இது இன்று எல்லையை  மீறிச்சென்றிருக்கிறது. இதற்குச் சில காரணங்கள் உள்ளன.

இலங்கை அரசாங்கம் அத்துமீறும் மீனவர்களை கைது செய்கிறது, விசாரணை செய்கிறது, பின் விடுதலை செய்கிறது.  இதற்கு மேலாக,  பேசித் தீர்வு  காணவேண்டும் என்ற   பாணியில் நடந்து  கொள்கிறது.  பல தடவைகள் பேச்சுக்களும் நடைபெற்றுள்ளன.  ஆனால்  பிரச்சினை  தீர்க்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைக்காக இந்தியாவுடன் போரைத் தொடுக்க முடியுமா? எனக் கேட்டிருக்கிறார். இந்நிலைமைகள் இலங்கைஅரசாங்கம் இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கிறது என்ற கருத்தை வடபிரதேச மீனவர்களைடையே  ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது அரசாங்கம் தமிழக இழுவைப் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் இரு நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும்யோசனை ஒன்றை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறது என்ற தகவல் வடபிரதேச மீனவர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது. மற்றொரு விடயம், தமிழத் தேசியக்கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரனால் கடந்த ஆண்டினிறுதியில் கொண்டு வரப்பட்ட  இழுவைப் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள்  கட்டுப்படுத்துவதற்கான சட்ட மூலம்.  இவ்வளவு காலம் கழித்து,   இச்சட்ட மூலம், அது தொடர்பான தொடர்பிலான கருத்தை அறிவதற்காக பாராளுமன்றத்தினால் ஒன்பது மாகாண சபைகளுக்கும்  அனுப்பப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் இச்சட்ட மூலம் தொடர்பில்  நடைபெற்ற கலந்துரையாடலில் வடமாகாணத்திலுள்ள 1500 இழுவைப்  படகு முதலாளிகளின் பாதிப்புக்கள் குறித்துப் பேசப்பட்டதால் அது பர்றிய முடிவெடுக்கப்படாமல் இழுபறியில் இருந்தது.

இந்த நிலை,சட்ட மூலத்தினை தாமதப்படுத்துவதாக  அமைந்துவிடும்  என்பதனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பிரச்சினைகளை  வட மாகாண  சபை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதனாலும் வட பிரதேசமீனவர்களிடையே எதிர்ப்புணவைத் தோற்றுவித்திருக்கிறது.

இப்பின்னணியில் வட மாகாண சபையின் 52 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (12,ஜூலை) கூடிய போது, கைதடியிலுள்ள  வட மாகாண  சபையின்  பேரவைச் செயலகத்தின்  முன்னால்   கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியிருக்கிறார்கள்  வட  பிரதேச  மீனவர்கள்.      வட பிரதேச மீனவர்கள், மீனவர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் பேரவைச் செயலகத்தின் முன்னால் ஒன்று கூடி பேரவைச் செயலக வாயில், முதலமைச்சர் அலுவலக வாயில் என்பவற்றை முற்றுகையிட்டு   இப் போராடத்தை நடாத்தியிருக்கிறார்கள்.வட மாகாணத்திலுள்ள 1500 இழுவைப் படகு முதலாளிமாரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக,  இழுவைப் படகுச்  சட்டத்தை தாமதப்  படுத்தாதீர்கள் இச்சட்ட மூலம் தொடர்பில் வட மாகாண சபை வழங்கிய  கருத்துக்கள் வாபஸ் பெறப்படவேண்டும் இலங்கை அரசாங்கத்தின்  புதிய யோசனைக்கு என்ன அழுத்தங் கொடுக்கப் போகிறீர்கள் என்றகோஷங்களை மீனவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

அதேவேளை இலங்கை அரசே எமது கடல் வளத்தைப் பாதுகாத்து தா, வட மாகாண கடல் எல்லைக்குள் நுழையும் இந்தியஇழுவைப் படகுகளை உடன் கைது செய், அரசே கடல் வளத்தை விற்று அரசியல் செய்யாதே, கச்சதீவு எனக்கூறிக்கொண்டு இரணை தீவிலும் விடத்தல் தீவிலும் அத்துமீறி நுளைவது  நியாயமா? என்ற கோஷங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் போராட்டத்தின் போது, வட மாகாண சபை மீன்பிடி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவர் மட்டுமேபோட்டத்தில் ஈடுபட்டவர்களை  சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “உங்களை உள்ளே அனுப்பியவர்கள்  அழைக்கின்றோம்,  வெளியே  வாருங்கள்” என உள்ளிருந்த வட மாகாண சபைஉறுப்பினர்களை ஒலிபெருக்கியில் அழைத்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

மீனவர்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, மீன்பிடித்துறை முழுமையாக மத்தியஅரசாங்கத்திற்குரியது, சட்ட ரீதியாக  இச்சட்ட மூலத்திற்கு மாகாண சபைகளின் ஆலோசனைகளைப் பெற வேண்டியதேவையில்லை எனவும் இச்சட்ட மூலத்தினை தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாகவும் வட மாகாண இழுவைப் படகுத்தொழிலாளர்களின் நலன்கள் குறித்தே பேசப்பட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்.எனினும் வட மாகாண சபை மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீனவர்கள் முன்னிலையில் தமிழ் அரசியல்வாதிகளின்நடவடிக்கை பற்றி விமர்சித்திருக்கிறார்.  2104 இல் வட மாகாண இழுவைப்  படகுகள் மற்றும்  சட்டத்திற்குமாறான தொழில்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற போது அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் எனக்கு எதிராகப் போராட்டம் நடாத்தப்பட்டது. தற்போதும் 1500 இழுவைப் படகுத் ‘தொழிலாளர்களைப் பாருங்கள் அதற்கு அப்பாலே மற்றவை எல்லாம்|  என்றும்  கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன எனத் தெரிவித்திருக்கிறார்.

வட மாகாண சபை அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீனவர்களின் கோரிக்கைகளை தாங்கள் முழுமையாக  ஏற்றுக் கொள்வதாகவும்,  இரு நாட்கள் அல்ல இரு  நிமிடங்கள் கூட   இந்திய இழுவைப் படகுகள் எங்கள் கடல் எல்லைக்குள்  வரமுடியாது  எனவும், உங்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் கூறியதையடுத்து கவனயீர்ப்பு போராட்டம் முடிவுற்றிருக்கிறது. இம் மீனவர்களின் போராட்டத்தில் வட மாகாண மீனவர்கள், மீனவர் அமைப்புக்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்புஇயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் கலந்து கொண்டிருந்தன.

வட பிரதேசத்தில் மீனவர் போராட்டம் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை (10 ஜூலை) இந்தியவெளி விவகார அமைச்சு “இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான  கலந்துரையாடல்களுக்காக  இலங்கையின்  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரை இந்தியாவுக்கு  வருமாறு அழைப்பு விடுக்குமாறு, இந்தியாவின் கமத்தொழில் விவசாயிகள் நலன்புரி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக”  தெரிவித்திருக்கிறது.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடித்து வருகின்ற பிரச்சினை அதன் எல்லை மீறிவளர்ந்து சென்றிருக்கிறது. சட்டப்படி, இலங்கையின் கடலெல்லை, இந்தியக் கடலெல்லை என்பவை பற்றிய விபரங்கள் தெரியாமல் இந்த எல்லை மீறல்கள் நடக்கவில்லை. இந்திய இழுவைப் படகு முதலாளிகள், தொளிலாளர்களை, எல்லைகடந்து செல்ல வற்புறுத்துவதும் அவர்களைப் பாதுகாக்க தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இலங்கையில் இதை தடுக்க ஒரு பொருத்தமான சட்டம் இல்லாமையும்,  வடக்கு மீனவர் பிரச்சினை தானே என்ற இலங்கை அரசின் பொறுப்பற்ற தன்மையும் நிலமையை இந்த நிலைக்கு வளர்த்து விட்டிருக்கிறது.  இதனால் இப்பிரச்சினைக்கு, வடக்கு மீனவர் நலன்கள் பாதிக்கப் படாமல் இருக்கும் வகையில் ஒரு தீர்வு காணப்படுமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.