வைத்தியரிடம் கேளுங்கள்

சிவராசா (40), உடுவில்
கேள்வி:- சமீபகாலமாக மலச்சிக்கலினால் அவதிப்படுகின்றேன். இதற்கு பாவிக்கக்கூடிய மருந்து சொல்வீர்களா?
பதில்:- கடுக்காய்ததூள் 15 கிராம், கராம்புத்தூள் 15 கிராம், எடுத்து சுடுநீரில் அவித்து காலையில் பருக 4,5 தடவை பேதியாகும். தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படாதிருக்க திரிபலாகுளிசையை தினமும் இரவில் 2 வீதம் பாவித்து வாருங்கள்.

வாரித்தம்பி (55), கொக்குவில்
கேள்வி:- எனக்கு இரத்த அழுத்தம் இருக்கிறது. இரத்தத்தமளிகளில் கொழுப்பு படிவுகளை நீங்கக் கூடியதும், உணவு சாதாரணமாக சேர்க்கக்கூடிய மூலிகைகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?
பதில்:-  இஞ்சி, உள்ளி, எலுமிச்சை, போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்படும் மூலிகை உணவுகள் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சி, உள்ளி என்பவற்றை துவையல், சம்பல் போன்றவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இஞ்சியை தேனில் ஊறவைத்து காலையில் 5 கிராம் அளவில் எடுத்து வரலாம்.எலுமிச்சைப் பானத்தை நீராகாரமாக அருந்தலாம்.

கண்ணன் (39), அரியாலை
கேள்வி:- காலையில் நித்திரை விட்டு எழுந்து நடக்கும் போது பாதங்களில் வலி ஏற்படுகின்றது. காலில் சிறிதளவு வீக்கம் ஏற்படுகின்றது. என்ன செய்யலாம்?
பதில்:- இதைக் குதிபாதம் எனச் சொல்லுவதுண்டு. நாராயண தைலம் மாஷாத் லம்,என்பவற்றைவெளிப்பூச்சாகப் பயன்படுத்தலாம். ஆமணக்கு இலை, நொச்சி இலை, சதைகுப்பை, எலுமிச்சை ஆகியவற்றை சட்டியில் வறுத்து அதை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். யோகராஜா குக்குலு எனும் மருந்தை சித்தாரத்தை காசாயத்தை எடுக்கலாம்.

தில்லைநாதன் (42), நீராவியடி.
கேள்வி:- எனக்கு இலேசாகத் தொப்பை விழுகின்றது. யோகாசனம் நல்லது என்கின்றார்கள் எத்தகைய ஆசனங்கள் பலன் அளிக்கும்?
பதில்:- சூரிய நமஸ்காரம், பஞ்சிமோஸ்த்தாசனம், தனுராசனம், புஜங்காசனம், போன்றவை தொப்பையைக் குறைப்பதற்கு உதவும். ஒரு யோகாசாசிரியரிடம் கற்ற பின் செய்வதே சிறந்தது.

மதிவதனி (34), கொழும்புத்துறை
கேள்வி:- எனது குழந்தைக்கு 6 மாதம் ஆகின்றது நான் எப்பொது பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்?
பதில்:- குழந்தைக்கு மிகச் சிறந்த உணவே தாய்ப் பால் இதனைத் தாராளமாகக் கொடுக்கலாம். குழந்தைக்கு 6 மாதம் ஆகிற போது தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருக்காது. எனவே திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். திட உணவு பழகிய பின் குழந்தை தாய்ப்பாலை அருந்துவதைக்குறைத்து விடும். ஒன்றரை வயதில் நீங்கள் தாய்ப்பாலை நிறுத்தலாம். வேறு காரணங்கள் எதுவும் இல்லையாயின் ஒரு வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

சாளினி (22), ஈச்சமோட்டை
கேள்வி:- எனக்கு பீனிசம் இருக்கிறது இதனால் மூக்கடைப்பு ஏற்படுகிறது இதற்கு என்ன சிகிச்சை?
பதில்:- பீனிசம், ஒவ்வாமை, குளிரான காலநிலை தோன்ற காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகின்றது. இதை நீக்குவதற்குப் பல வழிகள் உண்டு. ஆவி பிடித்தல், ஆவிபிடிப்பதன் மூலம் முக்கடைப்பிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை இலை, துளசி இலை ஆகியவற்றை அவித்து ஆவிபிடிக்கலாம். இதை விட இஞ்சி தேனீர் குடிப்பதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுபடலாம் . சுடு நீரில் குளிப்பதாலும் இது நிவர்த்தி ஆகின்றது. ஒரு டம்லர் நீரில் ஒரு தேக்கரண்டி உப்புக் கலந்து அதில் சில துளிகள் மூக்கில் விட மூக்கடைப்பு நீங்கும்.