இல்லாத ஆட்களுக்கு நடந்த மீள்குடியேற்றம் வடக்கிலும் தொடருமா?

145

யுத்தம் தின்ற நமது மக்களின் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிரந்தர காணி, வீடு இல்லாமல் வாழும் மக்களின் எண்ணிக்கையே ஏராளம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்பவர்கள், அகதிமுகாம்களில் வாழ்பவர்களின் துயரக்கதைகள் மெல்லமெல்ல மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில் அவர்களின் நிலங்கள் இராணுவவலயங்களாகின்றனஞ் பாரம்பரிய நிலங்கள் வேறுபிரதேசவாசிகளிற்கான குடியேற்றங்களாகின்றன. எல்லாமே அரசியல்தான். அரசியல் புகுந்து விளையாடும் மக்களின் மீள்குடியேற்ற கதை கண்ணீர்கதையாக தொடர்கிறது. மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் மக்களிற்கான நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்குள் அரசியல் புகுந்து விளையாடிய கதையெல்லாம் ஊரறிந்தது.

அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீனின் செயற்பாடுகளிற்கு எதிராக பலத்த கண்டனக்குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து எழுந்தது. வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இருந்ததாக வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன. வீட்டுத்திட்டம் வழங்கலில் இனப்பாகுபாடு இருந்ததென்பது அப்பொழுது எல்லா வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. தமிழர்களிற்கு 18 வீதம், சிங்களவர்களிற்கு 75 வீதம், முஸ்லீம்களிற்கு 120 வீதமாக அப்போதைய வீட்டுத்திட்ட சூத்திரம் இருந்ததென்றெல்லாம் கூறப்பட்டது. அந்த சமயத்தில் அரசும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதை மறுத்தனர். எனினும், அந்த குற்றச்சாட்டில் உண்மையுள்ளதோ என்று சிந்திக்க வைக்கும் விடயத்தை தீபம் இப்பொழுது அம்பலப்படுத்துகிறது.

வவுனியா, சாளம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த போதும், அது தமிழ்மக்கள் மிகச்செறிவாக வாழ்ந்த கிராமம். அந்தகிராமத்தின் சனப்பரம்பலில் சடுதியான மாற்றத்தை நிகழ்த்தியது 2010 இல் நடந்த குடியேற்றம். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பம்பைமடுவுக்கு முன்னாள் உள்ள பகுதியில் சுமார் 200 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அதில் அவசர அவசரமாக முஸ்லிம் குடியேற்றம் ஒன்றும் செய்யப்பட்டது. அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் நேரடி தலையீட்டின் கீழ் இது இடம்பெற்றிருந்தது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதையோ, நிவாரணம் பெறுவதையோ யாரும் எதிர்க்க முடியாது. அதனை அனவாத அடிப்படையில் பார்க்கவும் கூடாது. ஆனால் சில அரசியல்வாதிகள் இனங்களிற்கிடையிலான முறுகலை ஏற்படுத்தும் விதமாக நடப்பதே சிக்கலை தோற்றுவிக்கிறது. வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றமென்பது இனஅடையாளங்களை கடந்து, பாதிக்கப்பட்டவர்களிற்கானதாக இருந்திருந்தால் சிக்கல்கள் தோன்றியிராது.

சாளம்பைக்குளம் கிராம அலுவர் பிரிவில் 685 முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இக்கிரிக்கொலவ, புத்தளம் பகுதிகளில் குடியிருந்த முஸ்லிம் மக்களே இவர்கள். இவர்களில் பலருக்கும் இப்பொழுது இரண்டு இடத்திலும் காணி, வீடுகள் உள்ளன. 341 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் 250 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாளம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அவர்களது குடும்ப பதிவுகளும் இடம்பெற்றது. தற்போது பதிவுகள் இருக்கின்றது, வீடுகள் இருக்கின்றது, காணிகள் இருக்கின்றது, ஆனால் பல குடும்பங்களை காணவில்லை. அவர்கள் தமது சொந்த இடமான இக்கிரிகொலாவ சென்று குடியேறி விட்டதாக அங்கு உள்ள பலரும் கூறுகிறார்கள். தற்போது வெறும் 65 வரையான குடுப்பங்களே இங்கு வசித்து வருகின்றனர்.பலரது வீடுகள் பூட்டப்பட்ட பாழடைந்த வீடுகளாக மாறிப்போயுள்ளதுடன், சிலரது வீடுகள் மந்து பற்றைகளாலும் மூடப்பட்டுள்ளன. இனப்பரப்பலை குலைத்து அவசர அவசரமாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்று இந்த நிலையில் தான் இருக்கின்றது. சாளம்பைக்குளத்தில் மட்டுமல்ல இரணை இலுப்பைக்குளம் போன்ற பகுதிகளிலும் இதேநிலை தான். ஆனால் இந்த குடியேற்றங்களிற்கு சமீபமாகவே வீடின்றி அவதிப்படும் ஏராளம் தமிழ்மக்கள் உள்ளனர்.

இந்ந நிலையில் தான் தற்போதைய அரசாங்கத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சராகவுள்ள றிசாட் பதியுதீன் மீண்டும் வடக்கின் மீள்குடியேற்ற செயலணியின் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ஃபைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அங்கத்துவம் பெறுகின்றனர். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் வடக்கு முதல்வர் உள்ளிட்ட மாகாணசபை தரப்பு உள்வாங்கப்படவில்லை. அவர்கள் அதனை தீவிரமான விடயமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த சிக்கல் எழுந்தது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் காலத்தில். அப்பொழுது மீள்குடியேற்ற செயற்பாட்டில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இருக்கவில்லை. அதனால் எல்லாம் தன்னிச்சையாக நடந்தது. நல்லாட்சியிலாவது தமிழ்மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்து மீள்குடியேற்றம் முறையாக நடக்குமா?

 நேருஜி