“அடித்து, பலவந்தப்படுத்தி எயிட்ஸ் ஊசி போட்டார்கள் “

199

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதுதான் இன்று பெரிய கேள்வி. ஏனெனில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த முன்னாள் போராளிகளின் மரணச்செய்தி திடீர்திடீரென வந்து கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தொடக்கம் பெயரே அறியாதவர்கள் வரை பலர் இறந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. புனர்வாழ்வின் பின் விடுதலையானவர்களில் எத்தனை பேர் மரணித்தார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறும் புள்ளிவிபரங்களின்படி 105 பேர் மரணமாகியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் இரும்புக்கை ஆட்சியில் யாரும் வாயே திறக்க முடியாமல் இருந்த நிலை மாறி, ஓரளவு கருத்து சுதந்திரவெளி ஏற்பட்டுள்ள நிலையில், தமக்கு நடந்தவற்றை பற்றி முன்னாள் போராளிகள் வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். தடுப்பு முகாமில் தமக்கு எயிட்ஸ் ஊசி ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளியொருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தீபம் இதழிற்கு வழங்கிய பேட்டியில் இதுவரை வெளிவராத பல்வேறு பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி எஸ்.என். தேவன் (வயது 41) சொன்ன கதையிது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி பகிரங்கமாக பேச விரும்புவதாக அவர் கூறியதன் நிமித்தம் அவர் வெளியிட்ட தகவல்களை தருகிறோம். எனது சொந்த இடம் கிழக்கு மாகாணம். அவலங்களை நேரடியாக பார்த்து அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்தேன். சிறிதுகாலத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி வன்னியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தேன்.  போர் தீவிரம் பெற்ற காலப்பகுதியில் விலகியவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நான் மீண்டும் போராட்டத்தில் இணையவேண்டி ஏற்பட்டது.

இறுதியுத்தம் நடைபெற்ற போது 2009 மே மாதம் 09 ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் கடலில் வைத்து இராணுவத்தினர் என்னை பிடித்து புதுக்குடியிருப்பு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஓமந்தை சோதனைச் சாவடிக்கு எம்மை அழைத்து வந்தார்கள். அங்கு வைத்து அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள், எல்லைப்படை, துணைப்படையில் இருந்தவர்கள், விடுதலைப்புலிகளுடன்  இருந்த அனைவரையும் பதிவு செய்து விட்டு செல்லுமாறு அறிவித்தார்கள். அதன்படி ஓமந்தையில் இராணுவத்திடம் எனது பெயரை பதிவு செய்தேன். அதன்பின் பிற்பகல் 4 மணியளவில் எம்மை படம் எடுத்தார்கள்.

அப்போது இரண்டு பேரூந்துகளில் பெண்களை இராணுவம் கொண்டு சென்றது. அந்த பஸ்சில் பெண்கள் கத்தும் சத்தமும் கேட்டது. ஓமந்தையில் உள் ஒழுங்கை ஒன்றின் ஊடாக அந்த பேரூந்து சென்றது. அந்த இடம் எனக்கு சரியான ஞாபகம் இல்லை. அந்த பேரூந்து போய் மூன்று மணிநேரம் சென்ற பின்னர் எம்மை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் ஏற்றி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அவ்வப்போது அடிகளும் விழுந்தது. அவற்றை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் ஒரு அறை (வகுப்புக் கட்டிடம்) ஒன்றினுள் எம்மை அடைத்து வைத்தார்கள். அதற்குள் ஒரு இரவு 85 பேர் இருந்தோம். அன்றைய இரவு அந்த பாடசாலையில் 2000 பேரளவில் இருந்தனர். அதிகாலை அங்கு வந்த வெள்ளைவான் ஒன்று சிலரை ஏற்றிச் சென்றது. மறுநாள் என்னையும் சிலரையும் வவுனியா, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரிக்கு  கொண்டு சென்றார்கள். அங்கு ஆறுமாதம் தங்கியிருந்தேன். நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியில் தங்கியிருந்த போது எங்களுக்கு தடுப்பூசி ஏற்றப்போவதாக கூறி வைத்தியர்கள் சிலர் வந்தனர்.

சிலர் அந்த ஊசியால் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு ஒவ்வாத நிலையும் ஏற்பட்டது. அப்போது பறவைக் காய்ச்சல் என பீதி ஏற்பட்டு அடிக்கடி அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு சென்றார்கள். இங்கு தடுப்பூசி போடப்பட்ட போது நான் தண்ணீர் எடுக்கச் சென்றதால் தப்பி விட்டேன். அதன்பின் வவுனியா, வீரபுரத்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். சுமார் 3 மாதம் இங்கு இருந்த பின்னர் வெலிக்கந்தை திருகோணமடு தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்று தடுத்து வைத்தனர். அப்போது அங்கும் எல்லோருக்கும் தடுப்பூசி போடவேண்டும். ரீம் ரீம் ஆக வாருங்கள் என இராணுவத்தினர் அழைத்தனர். நான் ஊசி போடாமல் தப்ப முயற்சித்தேன். இராணுவத்தினர் சிலருடன் கதைத்து ஏன் ஊசி போடுகிறார்கள் என  கேட்டோம். எயிட்ஸ்சுக்கு போடுவதாக அவர்கள் கூறினார்கள்.

பலர் அந்த ஊசியை போட வராததால் எல்லோரையும் பிடித்து கட்டாயப்படுத்தி போட்டார்கள். மஞ்சுள குணவர்த்தன என்ற இராணுவ கப்டன் கொட்டன் ஒன்றுடன் வந்து அடித்து எல்லோருக்கும் ஊசி போடப்பட்டது. அந்த ஊசி ஏன் எதற்கு என்று தெரியாமலே திருப்பி கேள்வி கேட்க முடியாத நிலையில் எல்லோருக்கும் போடப்பட்டது. நான் அன்றைய தினம் ஊசி போடாது ஒருவாறு தப்பித்துக் கொண்டதால் மறுநாள்என்னை வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்து சென்று ஊசி போட்டார்கள். வைத்தியர்களுடன் எம்மை கதைக்கவிடவில்லை. தூரத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் ஏதோ வைத்தியருடன் பேசுவார்கள். அதன்பின் எமக்கு ஊசி போடப்பட்டது.

தற்போது எனக்கு கண்பார்வை மங்கிக்கொண்டு போகிறது. உடல்நிலை தளம்பலடைந்து சோர்வு ஏற்பட்டுள்ளது. முன்னர் 7 கிலோமீற்றர் தூரம் வரை சாதாரணமாக ஓடுவேன். ஆனால் இன்று 100 மீற்றர் கூட ஓடமுடியவில்லை. எனக்கு மட்டுமல்ல புனர்வாழ்வு பெற்ற பலருக்கும் இதே பிரச்சனை தான். அவர்களின் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது. அதனால் அவர்கள் போட்ட ஊசியில் எமக்கு சந்தேகம் இருக்கிறது. எமக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போது தடுப்பூசி எதற்கு போடப்பட்டது? என்ன தடுப்பூசி போன்ற சந்தேகங்களும் தற்போது எமது உடல் ரீயாக ஏற்பட்டுள்ள மாற்றமும் அதனை வலுப்படுத்தியுள்ளது.

எமக்கு தந்த உணவில் கூட இராசாயனம் கலந்திருக்க வேண்டும். எமது உணவை யாராவது இராணுவத்தினர் வாங்கிச் சாப்பிட வந்தால், மற்றவர்கள் அவர்களை தடுத்து  ஏதோ இரகசியம் கதைப்பார்கள். வாங்கிச்சாப்பிட வந்தவர்கள் அதற்கு பிறகு  எமது கிச்சின் பக்கம், நாம் சாப்பிடும் போது வரமாட்டார்கள். ஆனால் எமக்கு வீட்டிலிருந்து வரும் உணவுப்பொருட்களை இராணுவத்தினர் வாங்கி சாப்பிட்டார்கள். எமக்கு இராணுவம் தந்த சாப்பாட்டை இராணுவமே சாப்பிடுவதில்லை. புனர்வாழ்வு பெற்றவர்களிற்கு தற்போது நோய் ஏற்பட்டுள்ளதுதான் சந்தேகத்தை அதிகரிக்கிறது. எமது உணவில் இராணுவம் ஏதாவது சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. இது தொடர்பில் உண்மையை கண்டறிய புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே அவர்களது இழப்புக்களை தடுக்க முடியும் என்றார்.

இந்த தகவல்கள் இதற்கு முன் வெளிவராதவை. யுத்தத்தின் இறுதிநாட்கள், புனர்வாழ்வு முகாம் வாழ்க்கை பற்றி அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை கண்டறிவது அவசியம். பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதற்கும், இழைக்கப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு முன்னகரவும் அந்த செயற்பாடு அவசியம்.