மேற்கிந்தியத்தீவுகள்: கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு -1

143

2012 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டி. போட்டிகளை நடத்துகிற இலங்கை அணியை இறுதிப்போட்டியிற் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 2016 இல் போட்டியை நடாத்திய இந்திய அணியை அரையிறுதியிலும், இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெல்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. இரு சந்தர்ப்பங்களிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீரர்களோடு சேர்ந்து தம் அணிகளை வெறித்தனமாக ஆதரிக்கும் இலங்கை மற்றும் இந்திய அணி இரசிகர்களும் களிப்பாக நடனமாடி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

2016 இறுதியாட்டத்தின் கொண்டாட்டங்களின் மத்தியிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சில நாட்களின்பின் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரிற்கான அணியில் தாம் தெரிவு செய்யப்படாமையைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், ட்வைன் ப்ராவோ ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். சிலநாட்கள் கழித்து அணியின் மூத்தவீரரான டினேஷ் ராம்தின் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். அவரைத்தொடர்ந்து சிலநாட்களில் டரன் சமி இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான அணியின் தலைமைப்பதவியிலிருந்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக அணியிலிருந்தே நீக்கப்படுகிறார்.

இத்தனைக்கும் மேற்சொன்ன வீரர்கள் அனைவரும் உலகின் பலபாகங்களிலும் நடைபெறும் இருபதுக்கு இருபது சுழற்கோப்பைப் போட்டிகளில் மிகவும் வேண்டப்படுகிறவர்களாயும், பெருமளவில் வெற்றிகரமாக விளையாடுபவர்களாயும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் எப்போதும் எட்டாப்பொருத்தமே. மொத்தத்தில், மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இப்போதைக்கு கிரிக்கெட் உலகத்தில் அவர்களின் சொந்தக் கிரிக்கெட் சபையைத்தவிர எல்லோரையும் மகிழ்விக்கும் கேளிக்கைக் கலைஞர்கள் (அ) கலிப்சோ துடுப்பாட்டவீரர்கள் (Calypso Criketers).

1976 க்கு முன்னரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி கலிப்சோ துடுப்பாட்டவீரர்கள் என்றே அறியப்பட்டிருந்தார்கள். அந்த வருடம் மேற்கிந்தியத்தீவுகளில் வைத்து இந்தியாவை வென்றதிலிருந்து 1994/95 பருவகாலத்தில் சொந்த மண்ணிலேயே அவுஸ்திரேலிய அணியிடம் தோற்றது வரை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக இருந்தார்கள். அவர்களின் துடுப்பாட்ட வரலாற்றின் பொற்காலத்தைச் சுருக்கமாகத் திரும்பிப்பார்ப்போம். அதன்பொருட்டு முதலில் மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட்டின் ஆரம்பகால வரலாற்றை சற்றே நோக்கலாம்.

மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாறு 1880 களில் ஆரம்பிக்கிறது. பிரித்தானியக் காலனியாதிக்கத்துக்குட்பட்ட கரீபியன் நாடுகளின் ஒருங்கிணைந்த அணியாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடக்ககாலத்தில் அறியப்பட்டிருந்தது. 1880 களில் இந்த ஒருங்கிணைந்த அணி அப்போதைய கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. அக்காலகட்டத்தில் பெரும்பாலான போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளின் உள்நாட்டு அணிகளுக்கிடையிலேயே நடைபெற்றன. 1895 ஆம் வருடம், இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் கொண்டது.

1926இல் சர்வதேசத் துடுப்பாட்டச் சபையில் (International Cricket Conference) மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா மற்று நியுசிலாந்து அணிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. 23 ஆனி 1928 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக தமது முதற்போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி விளையாடியது. அந்தப்போட்டியிலும், அதைத் தொடர்ந்த இரு போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி படு மோசமான தோல்விகளைத் தழுவிக்கொண்டது.

இப்படியாகத் தோல்வியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் வரலாறு முழுவதும் அரசியல், நிர்வாகச்சிக்கல்கள் நிறைந்திருந்தன. அணித்தேர்வில் எப்போதுமே சிக்கல்கள் நிறைந்திருந்தன. இன/நிற வேறுபாடுகளால் மேற்கிந்தியத்தீவுகள் அணி அல்லற்பட்டது. பெரும்பாலும் வெள்ளையினத்தவரே மேற்கிந்தியத்தீவுகள் அணியில் விளையாடினார்கள். கறுப்பினத்தவர்கள் மிக அரிதாகவே அணிகளில் சேர்க்கப்பட்டார்கள்.

அணித்தலைவராக வெள்ளையினத்தவர் ஒருவரே எப்போதும் இருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் ஆதிக்குடிகளும், பல்வேறு மேற்காபிரிக்க நாடுகளிலிருந்து அடிமைக்குடிகளாக அழைத்து வரப்பட்ட கறுப்பினத்தவரும் நிரம்பிய பிரதேசம். இருந்தும், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட அணியில் ஆண்டைகளான ஆங்கிலேயர்களே அதிகம் விளையாடினார்கள். வரும் அத்தியாயங்களில் இந்த நிலை எப்படி மாறியது என்பதைப் பார்க்கலாம். (இதழ் 40 இல் அடுத்த பகுதி வரும்)

 கிருத்திகன்