ஐ.நா.அவையின் அகதி

132

ந்த முறை ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவும் ஐ.நா.அவையின் அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகமும் இணைந்து  அகதிகளைக் கொண்ட ஒரு விளையாட்டு வீரர் குழுவையும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி வைத்திருந்தது. இவர்களில் இருவர் இன்று உலக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள். கொங்கோ நாட்டிலிருந்து அகதியாக வெளியேறிய பொப்போல் மிசெங்கா (Popol Misenka) பல தடவைகள் சாவிலிருந்து தப்பியுள்ளார். பதினெட்டு ஆண்டுகளாகத் தனது பெற்றோரைச் சந்திக்க முடியாமால் அல்லலுறுபவர். ஒலிம்பிக்போடிகளுக்கான அகதி வீரர்கள் குழுவில் ஜூடோ போட்டியில் பங்கு பெற்றார். முதல் சுற்றில் இந்திய வீரரைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானார்.

இன்னுமொரு புகழ் பெற்ற அகதி வீராங்கனை சிரியாவைச் சேர்ந்த யுஸ்ரா மார்டினி. (Yusra mardini) சிரியாவில் படுகொலைகளுக்குத் தப்பி அகதிகளாகச் சிறு படகொன்றில் கிரேக்கத்தைச் சென்றடைய முயன்ற போது படகு கவிழ்ந்து விட்டது. யுஸ்ராவும் அவரது தங்கையுமாக படகை மீட்டு அதிலிருந்த 17 பேரையும் காப்பாற்றிக் கரை சேர்த்தனர். யுஸ்ரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் முதல் சுற்றில் வென்றார். எத்தகைய முறையான பயிற்சியும் அதற்கான வாய்ப்புகளும் வளங்களும் தமக்கென நாடும் இல்லாமல் உழலும் லட்சக்கணக்கானவர்களிடையே இருக்கும் அபார திறமைகளை இந்தமுறை ஒலிம்பிக் போட்டிகள் எடுத்துக் காட்டியுள்ளன. பணம் வாய்ந்த, பெரிய நாடுகள் எடுக்கும் நூற்றுக்கணக்கான பதக்கங்களை விட யுஸ்ராவும் பொப்பொலும் அவர் போன்றவர்களும் நமக்குத் தருகிற நம்பிக்கையும் ஊக்கமும்தான்இந்த முறை ஒலிம்பிக்கின் சிறப்பு.