கனடாவும் அகதிகளும்

கடந்த வார இதழிலே நியூபவுண்லாந்து மாகாணத்திலே கனடியத் தமிழர்களாக ஒன்றுகூடி கடலிலே தத்தளித்த தமிழர்களை காப்பாற்றிக் கரைசேர்த்த நியூபவுண்லாந்து மக்களுக்கும், அவருடன் கூட நின்று உதவிய கனேடிய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றி கூறி நடைபெற்ற முதலாம் நாள் நிகழ்வுகளைப் பார்த்தோம். இந்நிகழ்வுகளுக்கு நியூபவுண்லாந்து ஊடகங்களும் கனேடிய மைய ஊடகங்களும் கொடுத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடை இரண்டாம் நாள் எங்கள் எல்லோராலும் பூரணமாக உணர்க்கூடியதாக இருந்தது.

நாங்கள் நின்ற  SHERATON HOTEL லே இரண்டாம் நாள் பொழுது விடிந்த பொழுது எங்கள் அறை எங்கும் விநியோகிக்கப்பட்ட நியூபவுண்லாந்து மாகாணத்தின் பிரபல தினசரியான ‘டெலிகிராம்’ பத்திரிகை அதன் தலைப்புச் செய்தியாக இந்நிகழ்வைத்தான் பிரசுரித்திருந்தது.

நாங்கள் மட்டுமல்ல, அந்த ஹோட்டேலிலே இருந்த அத்தனை விருந்தினர்களும் இந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்த்து எங்களுடன் பேச முண்டியடித்ததைக் கண்டு, நாங்கள் பிரமித்துப் போனோம். முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வுக்காக இப்படி ஒரு நன்றி சொல்லும் நிகழ்வா என்று எங்களையெல்லாம் பாராட்டி அவர்களும் ஆனந்தத்தில் திளைத்ததை கனடியத் தமிழர்கள் எல்லோருக்கும் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் என்றே நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அதே தினம் எம்முடன் வந்தவர்கள் பாதையில் நடந்தபோதும், நகரத்து மக்கள் வலியவே வந்து அவர்களைப் பாராட்டிச் சென்றதை எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். அது மட்டுமல்ல எம்மில் சிலர் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்றபோது அவர்கள் கேட்காத உணவு, பானங்கள் மேசைக்கு வந்தன. இதைக் குறித்து அவர்கள் தங்களுக்கு உணவு பரிமாறுபவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மேசைக்கப்பால் இரண்டு மேசை தள்ளியிருந்த நியூபவுண்லாந்து மக்கள் உங்களுக்காக என்னிடம் இதைக் கொடுக்கச் சொன்னார்கள். அதுதான் பரிமாறினோம் என்றார்கள். இதைக் கேட்டபோது அவர்கள் எல்லோரும் எப்படியான ஒரு அன்பு மழையிலே தாங்கள் எல்லோரும் நனைந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்து பூரித்துப் போனதை எங்களிடம் வந்து சொன்னபோது எங்கள் எல்லோருக்கும் இந்த நன்றி கூறும் நிகழ்வு எவ்வளவு தூரம் நியூபவுண்லாந்து மக்களை பாதித்திருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியவந்தது.

அன்று முழுவதும் இப்படியான நிகழ்வுகள் பலவற்றை நாங்கள் எதிர்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கிடையே கனேடிய மைய ஊடகங்கள் மேலும் சில எங்களைத் தொடர்பு கொண்டு கடலிலே காப்பாற்றப்பட்ட தமிழர்களை தாங்களும் பேட்டிகாணவேண்டும், ‘ஒழுங்கு செய்ய முடியுமா?” என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.

இப்படியாக இரண்டாம் நாள் பகல் பொழுது முழுவதும் நியூபவுண்லாந்து மக்களின் அன்பு மழையில் நனைவதும், கனடியத் தேசிய ஊடகங்களின் அன்பான அழைப்புக்களுக்கு முகம் கொடுப்பதுமாக இனிதே கழிந்தது.

மூன்றாம் நாளன்று தமிழர்களைக் காப்பாற்றிய நியூபவுண்லாந்து மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அன்றைய அரசியல்வாதிகளுக்கும் நன்றி பாராட்டி ஒரு இரவு விருந்துபசாரத்தையும் இந்நிகழ்வை ஒழுங்கு செய்த கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. நியூபவுண்லாந்து மாகாணத்தின் தலைநகரமான செயின்ற் ஜோன்ஸ் நகரிலே இருக்கும் ஒரு மிகப் பிரபலமான அருங்காட்சியகத்திலே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இயற்கை வனப்புடன்கூடிய இடத்திலே அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடிவாரத்திலே அமைக்கப்பட்டிருந்த இந்த அருங்காட்சியகம் இரவு நேரத்திலே ஒரு ஜொலிக்கும் கட்டிடமாக இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்படியான ஒரு பிரசித்தி பெற்ற இடமாக இருந்தபோதிலும் எங்களுக்காக ஒரு மிகக் குறைவான செலவிலே இந்த இடம் எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அன்று மாலை 5.30 மணி அளவிலேயே அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் குழுமத் தொடங்கி விட்டனர்.

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் டரூடோ சார்பிலே நியூபவுண்லாந்தின் முக்கிய அரசியல் பிரமுகரும், மத்திய அமைச்சருமான  JUDY FOOTE முன்னைய மல்ரோனி அரசாங்கத்திலே குடிவரவுத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த Gerry Weiner அவர்கள் கனேடிய எல்லைப்பாதுகாப்பின் அட்லாந்திக் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவி ஆணையாளர் Wade Spureel அவர்கள், கப்பலிலே வந்த தமிழர்கள் காப்பாற்றப்பட்டபொழுது அவர்களுக்கு உதவிய செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகள், கனடிய தமிழ்பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உட்பட பல கனடிய தமிழர் பேரவை முக்கியஸ்தர்கள் கனடிய வர்ததக சம்மேளனத்தின் தலைவர் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் மற்றும் கடலிலே காப்பாற்றப்பட்ட தமிழர்க்ள அவர்கள் குடும்பங்கள், அவர்கள் காப்பாற்றப்பட்ட பொழுது அவர்கள் விடுதலைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுத்த அன்றைய கனடிய தமிழ்த் தலைவர்கள் மற்றும் இங்கிருந்து இந்நிகழ்வுக்காகச் சென்ற ஏனைய கனடியத் தமிழர்கள் எல்லோரும் இந்த விருந்துக்காக ஒன்றாகக் கூடினர். மிகவும் உற்சாகமான சூழ்நிலையிலேயே விருந்துக்கான ஆரம்ப உபசரிப்பு அபரிதமாக இருந்தது.

விருந்து இடம்பெற்ற அருங்காட்சியகத்தின் உத்தியயோகத்தர்களும் மிகவும் உற்சாகத்ததுடன் இந்த விருந்துபசாரத்தை நடத்த  உறுதுணை புரிந்தனர். இந்த விருந்திலே நடந்த பல சுவாஸ்யமான சம்பவங்களுடன் மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.