குழந்தைப் போராளி -24

95

கர வீட்டில் வாழ்க்கை இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் இறைச்சி வாங்கப் போன ஹெலன் வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். காசு தொலைந்து போய்விட்டதென்று அழுதுகொண்டே ஹெலன் மாஹியிடம் சென்றாள். இன்னும் சிற்றன்னைக்கு விசயம் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாத நிலை. மாஹி ரிச்சட்டையும் என்னையும் சேர்த்துக் கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினாள். ரிச்சட் வீதியில் பிச்சை எடுக்கலாமென்று முன்மொழிய நாங்கள் பிச்சையெடுக்கச் சென்றோம். பல மணி நேரங்கள் சென்றும் போதியவளவு பணம் சேரவில்லை. கூனிக் குறுகிக் கொண்டு எல்லோரும் வீடுவந்து சேர்ந்தோம். ஹெலன் சிற்றன்னையிடம் விசயத்தைச் சொல்ல அவர் “என்னால் ஒன்றுமே செய்ய முடியாது அப்பா வரும் வரை காத்திரு” எனச் சொல்லி விட்டார். மாலை, அப்பா வந்ததும் ஹெலன் அவர் முன்னே போய் நடுங்கியபடியே நிற்க முகத்தில் அறைகள் விழுந்தன. அவள் தொலைத்த பணம் அவளின் பாடசாலைக் கட்டணத்திற்குச் சமனாயிருந்தது. எனவே அவளை இனிப் பாடசாலை அனுப்ப முடியாது என அப்பா முடிவாகச் சொல்லி விட்டார். ஹெலன் தரையில் முழந்தாளிலிருந்து அப்பாவிடம் மன்னிப்புக்காக மன்றாடினாள். எந்த மன்றாட்டத்தாலும் அப்பாவின் முடிவை அசைக்க முடியாது போயிற்று. நாளையிலிருந்து அவள் வாழைத்தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் பாடசாலை செல்ல பரபரப்பாக இருக்க அவள் மண்வெட்டியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தாள்.

நீண்டகாலமாக இந்த நிலை மாறவே இல்ல. ஹெலன் வேலை செய்தேயாக வேண்டியிருந்தது. காற்றப் போல அவள் வீட்டிலிருப்பது தெரியாமலே இருந்தது. ஒருநாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது ஹெலன் வீட்டை விட்டு ஓடிப்போயிருந்தாள். அப்பாவின் முகம் எந்த உணர்வையும் காட்டவில்லை. “எல்லோரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் உங்கள் அம்மா மாதிரியே உங்களது சகோதரியும் ஒரு முட்டாள்”. இது ஹெலன் வீட்டைவிட்டு சென்றதற்கான அவரது விளக்கம். தொடர்ந்து அவர் சொன்னார், “நீங்களெல்லோருமே வீட்டை விட்டுப் போனாலும் எனக்குக் கவலையில்லை”. எனக்கு ஒன்று தெளிவானது, எங்களது தந்தை எங்கள் அம்மாவை வெறுப்பது போலவே குழந்தைகள் எங்களையும் கடுமையாக வெறுக்கிறார். வாழ்க்கை எங்களுக்கு எதனைத் தரப்போகிறது? அது எங்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது? எங்களது எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது? ஒன்றுமட்டும் நிச்சயம், எங்கள் எல்லோரது வாழ்க்கைப் பாதையும் ஒன்றாகத்தான் இருக்கும்.
கோடைகால விடுமுறைக்காகப் பாடசாலை மூடியவுடன் அப்பா புதிய பண்ணைக்குப் பாட்டியுடன் விடுமுறையைக் கழிக்க எங்களைக் கூட்டிச் சென்றார். பிரயாணத்தின் போது அப்பா ரிச்சட்டிற்கு ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். ரிச்சட் பெரியவனாகி விட்டதாகவும் இனி அவன் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் அவரின் நியாயங்கள். ரிச்சட்டின் வயதிலே அவர் பல பொறுப்புக்களை ஏற்றிருந்ததாகவும் கூறினார். நானும் ரிச்சட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

நாங்கள் பண்ணயை அடைந்தது அப்பாவின் தலைக் கறுப்பு மறைந்ததுமே நாங்கள் மெதுவாக நழுவினோம். ரிச்சட் தேனெடுக்கப் போவோமெனச் சொன்னான். மாஹி “முதலில் நாங்கள் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்துக் கொண்டால் தான் தேனீக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம் அத்துடன் நெருப்புக் குச்சிகளும் ஒரு கத்தியும் தேவை” என்றாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு காட்டை நோக்கிச் சென்றோம் .நிலவு மாத்திரமே எங்கள் பாதையில் வெளிச்சத்தைத் தீற்றிக்கொண்டிருந்தது. கடுமையான தேடலுக்குப் பின்பாக ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்தோம்.

தொடரும்…