மனதில் தங்கிய முத்துக்குமார்

165

மெலிந்த சாயலில் ஒரு நெடிந்த உருவம். லேசாக ஆனால் அடர் வண்ணத்தில் கன்னத்தில் படர்ந்திருக்கும் மயிர்ப் பூக்கள் என சாதுவான தோற்றத்திற்கு அவன் சொந்தக்காரன். பாட்டு எழுதுவது அவன் தொழில். ஆம் அவர்தான் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். கருங்குவளை, செந்தாமரை, கூர்வாள், கூர்வேல், மான்விழி, கயல்மீன், கருவண்டு என்றுதான் கவிச்சக்கரவர்த்தி கூட பெண் விழிகளை வியந்து பாடியிருந்தார். ஆனால் “கறுப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன். உன் கண்கள் வண்டையுண்ணும் பூக்கள் என்பேன்” என பெண் விழிகளுக்கு புதிய ஓர் அறிமுகத்தைக் கொடுத்தவர் முத்துக்குமார்.

இந்த 41 வருடங்களில் 700 ற்கும் மேற்ப்பட்ட பாடல்களை எழுதியதுடன் 2012ஆம் ஆண்டில் இல் திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டவர். 2 தேசிய விருது, 4 பிலிம்பேர் விருது, 2 தென் இந்திய சர்வதேச விருது, தமிழக அரசு விருது என விருதுகளின் நாயகனாக வலம் வந்துள்ளார் முத்துக்குமார்.

“இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது” என்று முத்துக்குமாரின் மரணத்திற்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர் அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு வெயில் கூடத்தான் அழகு” என நாம் வெறுக்கும் வெய்யிலைக் கூட அழகாக நம் மனக்கண்ணின் முன் காட்சிப்படுத்தினார். இவரது பாடல்கள் எப்போதும் இலக்கியச் செழுமை மிக்கது. அது மனித மனங்களின் ஏக்கங்களை இயல்பான உணர்வுகளை கடந்துவந்த வலிகளை புதிய உவமைகளுடன் ரசிக்கும் வண்ணம் வரிகளில் வடித்திருப்பார்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அழகிய கடந்தகாலம் இருந்திருக்கும். காலப் போக்கில் அது வெறும் நினைவுகளாக மாத்திரம் மனதோரம் தேங்கி நிற்கும். ஆனால் கடந்துபோன நினைவுகள் எப்போதும் பசுமையானவை , வண்ணமயமானவை. “ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது. அதன் வண்ணங்கள் மட்டும் எந்தன் விரலோடு நின்றது” என்று பிரிவை அதன் நினைவுகளை கூட நயம்பட அழகாகக் கூறியிருப்பார். காதல் எப்போதும் கிளர்ச்சியூட்டக் கூடியது. அதுவும் முதற்காதல் பருவத்து இரசாயண மாறுதல்களினால் ஏற்படும் பிரளயம். அதனை “வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே” என்கிறார் முத்துக்குமார். மனித உணர்வுகளைப் பாடலில் வெளிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பற்றியும் தன் பாடல்களிலிலும் கவிதைத் தொகுப்புக்களிலும் யதார்த பூர்வமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது அலை கரையை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா பேசி போன வார்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? உயிரும் போகும் உருவம் போகுமா? போன்ற தனித்தன்மையான வரிகளால் கவனம் ஈர்த்தவர் நா.முத்துக்குமார்.

இவர் வெளியிட்ட 11 “நூல்களில் பட்டாம் பூச்சி விற்றவன்” தொகுப்பு குறிப்பிடத்தக்க தொன்று.

மனுசிகள்
கள்ளுக்கடையில்
சகானா விற்பவள்
கெட்ட வார்த்தைகளின் துணையால்
காத்துக் கொள்கிறாள்
கடையையும் கற்பையும்

பத்துவருடமாய்
மிளகாய்த் தூளுக்கு மத்தியில்
மதுக்குப்பி மறைத்து
பாண்டிச்சேரியிலிருந்து
கடத்தி விற்க முடிகிறது
பேச்சியம்மா கிழவியால்

வாசனையாகப் பேசி
அய்யர் தெருவிலும்
விற்றுவிடுகின்றாள்
கருவாட்டுக்காரி

கைக்கும் வாய்க்குமாய்
வாழத்தான் செய்கிறார்கள்
இவர்களும்.

தூர்
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூரடவாரும் உற்சவம்
வருடத்திற்கு ஒரு முறை
விசேடமாய் நடக்கும்

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
கட்டையோடு உள்விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க யாரிற்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னாலிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். முதலில் இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தான் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.

“காதல் கொண்டேன்” தொடக்கம் “தெறி” வரை பல திரைப்படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்கும், “சைவம்” படத்தில் எழுதிய “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது.

காலம் தன் கடமையைச் செய்யும். ஆனாலும் கலைஞர்கள் மரணம் என்பது அவர்களின் உடலுக்கானது. அவர்களின் வாழ்க்கைமூச்சுவிடுவதற்கு அப்பாற்பட்டது. இந்த நிமிடம் கூட எங்கேயோவொரு காற்றின் அலைவரிசையில் முத்துக்குமாரின் பாடல்வரிகள் மிதந்து கொண்டுதான் இருக்கும்.