முளையிலேயே கிள்ளி எறியப்படும் கிழக்கின் கல்வி!

ண்மையில் தாயகத்தில் கிழக்கு மாகாணத்தின் தமிழர் வாழும் பல இடங்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. போரால் பெரிதும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் இன்றும் திகைத்து நிற்கும் உறவுகளின் நிலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய தேவைகள் ஏராளம் இருப்பதால், எங்கே ஆரம்பிப்பது என்று புரியவில்லை? காரணம் எந்த அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு இல்லை. பல பாலர் பாடசாலைகளை நேரிற் சென்று பார்க்கவும் ஆசிரியர்களோடும், பிள்ளைகளோடும், பிள்ளைகளின் பெற்றாரோடும் கலந்து பேசவும் எனக்குச் சந்தர்ப்பம் அமைந்தது. இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளோ, சீரான கட்டிடங்களோ, கற்றல் உபகரணங்களோ, விளையாட்டு மைதானங்களோ, ஊட்டச் சத்துமிக்க உணவுகளோ இல்லை. ஏன் உட்கார்ந்து படிக்க மேசை, கதிரைகள் கூட இவர்களுக்கு இல்லை.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவிலும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்    –  மகாகவி பாரதியார்

இலங்கையின் கிழக்கு மகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலகங்களைக் கொண்டமைந்துள்ளது. இதில் 10 தனித் தமிழ் பிரதேச செயலகங்களில் ஒன்றே வவுணதீவு பிரதேச செயலகம். இவ் ஆட்புலத்துக்குள் இடம் பெற்ற கொடிய யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட கிராமங்களில் புதுமண்டபத்தடி, நடராஜாநந்தபுரம் கிராமம் மிக முக்கியமானது. இந்த நடராஜாநந்தபுரம் பாலர் பாடசாலை மாணவர்களின் நிலமை  மிகவும் கவலைக்குரிய இடத்தில் உள்ளது. உடனே கவனிக்கப்பட வேண்டிய பாடசாலையும் இதுவே. இங்கு கல்வி கற்கும் 35 மாணவர்களுக்கு சரியானதொரு கட்டிடம் இல்லை. இவர்கள் ஒரு பெரிய மரத்தின் கீழ்தான் பாடங்களைக் கற்று வருகிறார்கள். அது வெயிலோ, மழையோ எதுவாயினும் அந்த மரம் தான் அவர்கள் பாடசாலை. அப்படி இல்லாதபட்சத்தில் இங்குள்ள சிறார்கள் கிட்டத்தட்ட 7 கிலோமீற்றர் பயணம் செய்து புதுமண்டபத்தடியில் உள்ள பாலர் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இது எல்லாப் பெற்றோர்களாலும் முடியாததால் பல மாணவர்கள் ஆரம்பக் கல்வியை இழக்கின்றனர்.

கைவிடப்படும் நிலையில் உள்ள இந்த பாலர் பாடசாலையை மீள் செயற்படுத்துவதற்கு, அவர்களுக்கு அவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. புலம் பெயர் உறவுகளுக்கு நிச்சியமாக இவர்களுக்கு உதவ முடியும். அவர்கள் உதவி செய்யும் பட்சத்தில் 35 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், இன்னும் அங்கு வாழும் 125இற்கும் அதிகமான குடும்பங்களும் பயனடையும். அதுமட்டுமல்லாது கல்வியறிவு கொண்ட ஒரு சமுதாயமும் உருவாகும். வவுணதீவு அண்டிய கிராமங்களில் எதிர் காலத்தில் சிறந்ததொரு கல்விச் சமூகத்தை உருவாக்கலாம். சிறுவயது முதலே எழுத்தறிவு, எண்ணறிவு, கலையாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றைக் கொடுக்கலாம். சிறுவயது முதல் சிறந்த பழக்கவழக்கங்களை மாணவர்களிடம் உருவாக்கலாம். சிறுவயது முதலே தலைமைத்துவ பண்புகளை உருவாக்கலாம்.

இது போல் இன்னும் வாகரை, கதிரவெளி, கடற்கரைவீதியில் அமைந்துள்ள 50 மாணவர்கள் ஆரம்பக்கல்வி பயிலும் கலைமகள் பாலர் பாடசாலையும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு பாலர் பாடசாலையாகும். 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை எகேட் நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பாடசாலை இயங்கி வந்தது. ஆசிரியாகளின் சம்பளம், பள்ளியின் சீருடை மற்றும் உணவு போன்ற தேவைகளை எகேட் நிறுவனமே கொடுத்து வந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு எகேட் நிறுவனத்தினரின் செயற்றிட்டம் இடை நடுவே கைவிடப்பட்டமையால் 2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 2 ஆசிரியர்கள் 50 மாணவர்களுடன் மிகவும் சிரமத்தின் மத்தியில் கற்றல் செயற்பாடுகளைக் கைவிடும் நிலையில் இயக்கி வருகிறார்கள்.

கற்றல் செயற்பாடுகளுக்கு அதுவும் பாலகர்களுக்குப் பொருத்தமற்ற இடிந்து விழும் நிலையில் உள்ள கூரையைக் கொண்ட ஒரு சிறிய கட்டிடத்தினுள் எதுவித கற்றல் உபகரணங்களோ, மின்சார வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ இன்றிய நிலையில் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இந்தப் பாடசாலை உள்ளது. நான் அவர்களை பார்க்கச் சென்ற நேரம், வெப்பநிலை 36 செல்சியஸ் ஆகும். மதியம் கொளுத்தும் வெயில், தகரத்தினால் ஆன கூரையைக் கொண்ட அந்த சிறிய உயரம் குறைந்த கட்டிடத்தினுள் நுழைந்ததும், பாண் சுடும் ஒரு வெதுப்பகத்தினுள் சென்றது போல் அத்தனை சூடாக இருந்தது. வியர்வை வடிய, வாடிய முகத்தோடு இருந்த அந்தக் குழந்தைகளின் முகம் இன்னும் எனக்குள் கண்ணீரை வர வைக்கிறது. அந்த சிறிய கட்டிடம்தான் அவர்கள் பாடசாலை. பாடங்களைக் கற்றுக் கொள்வதோ, விளையாடுவதோ எல்லாமே அதற்குள் தான். அவர்கள் கட்டிடத்தைச் சுற்றி சரியானதொரு வேலியில்லாத படியினால் பிள்ளைகளை வெளியில் விடுவதற்கு ஆசியர்கள் விரும்புவதில்லை. அதுமட்டும் அல்லாது இடம் சிறியதாய் இருக்கிறபடியால் பிள்ளைகளை இரண்டு வகுப்புகளாக பிரித்து அவர்கள் தரத்திற்கேற்ப கல்வியைக் கற்றுக் கொடுக்கவும் முடியாமல் இரண்டு ஆசிரியர்களும் வெகு சிரமத்தோடு தங்கள் பணியைச் செய்கிறார்கள். முக்கியமாக பிள்ளைகளுக்கு போசாக்கான எந்த சிற்றுண்டியும் கொடுக்கப்படுவதில்லை. கிராமத்து மக்களாக சேர்ந்து கொடுக்கும் பசும்பாலைத்தான் பெற்றோர்களில் சிலர் வந்து சூடாக்கிக் பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்கள்.  

அங்கிருக்கும் பெற்றோர்களோடு நான் பேசிய போது, “எங்கள் பொருளாதார நிலமை மிகவும் மோசமாக இருக்கிறது. நாங்கள் ஏழைகள், எங்களால் பிள்ளைகளை அதிக துரம் அழைத்துச் சென்று கல்வி கற்றுக் கொடுக்க முடியாது. அதற்காக எங்கள் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாது இருந்து விடவும் முடியாது. நாளைக்கு எங்கள் பிள்ளைகளும் படித்துப் பாடசாலைக்கு போக வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வோம். நீங்கள் கல்லையும், சீமெந்தையும் மட்டும் வாங்கித் தாருங்கள் நாங்கள் கூலி வேலைசெய்து கட்டிடத்தை முடிப்போம்” என்றார்கள். தங்கள் குழந்தைகளைக் கஸ்டப்பட்டாவது படிப்பிக்க வேண்டும் என்ற இந்த உயர்ந்த எண்ணத்தைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு கிழக்கின் கிராமங்கள் எங்கும் சிறுவர்களுக்கான ஆரம்பக்கல்வி இழக்கப்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2000இற்கும் அதிகமான சிறுவர்கள் அடிப்படை வசதிகள் இன்மையால் பாடசாலைகளுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.  எக்காலங்களிலும் சிறுவயதுக் கல்வி என்பது கிராமங்களின் எழுச்சிக்கு வித்திடும். “வரப்புயர” என்றார் அவ்வையார். ஒரு சமூகத்தின் எல்லா முன்னேற்றங்களுக்கும் ஆரம்பக் கல்வியோ முதற்படி. ஒரு கிராமத்தில் ஒரு பாலர் பாடசாலையாவது கட்டாயம் தேவை. அதை உருவாக்குவதில் நாம் அளப்பரிய பங்காற்ற முடியும். மேற்கூறிய பாடசாலை போல் வாகரை, கோமத்தலாமடு கண்ணகி பாலர் பாடசாலை (30 மாணவர்கள்), உன்னிச்சை, பாவற்கொடிச்சேனை துர்க்கா பாலர் பாடசலை (35 மாணவர்கள்) உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பாசாலைகள் ஆகும். இதோ போல் இன்னும் பல பாலர் பாடசாலைகள் தேவைகளோடு இருக்கின்றது. இந்தப் பாடசாலைகளை முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ (கட்டிட வசதி, கற்றல் உபகரணங்கள், சீருடை, காலணி, சத்துணவு, ஆசிரியர்களின் சம்பளம்) பொறுப்பெடுக்கலாம். கிழக்கு மாகாணத்தில் இயங்கும் உதவும் கரங்கள் அமைப்போடு இணைந்து கனடியத் தமிழர் பேரவை இத்தகைய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கூடிய விளக்கங்களுக்கும் பங்காளராகவும் கனடியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு: 416-240-0078, www.canadiantamilcongress.ca