மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 3

146

1930 இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரைச் சமன் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி, 1930-ரூ-31 இல் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து 5-நாட் போட்டிகள் ஐந்து கொண்ட தொடரொன்றில் விளையாடியது. இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே நிறையச் சம்பவங்கள் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரானதாகவே இருந்தன. அந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் “வெள்ளை அவுஸ்திரேலியா” என்கிற கொள்கை நடைமுறையில் இருந்தது. இந்தக் கொள்கையின்படி அவுஸ்திரேலியாவுக்கு, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடிய வெள்ளையினத்தவர் மட்டுமே குடிவரவாளர்களாக அனுமதிக்கப்பட்டார்கள். மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம், தொடரின் பிற்பாடு எந்தக் கறுப்பின வீரரும் அவுஸ்திரேலியாவில் தங்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியைக் கொடுத்தபின்னரே இந்தத் தொடரில் பங்குபற்றிய கறுப்பினவீரர்களை அவுஸ்திரேலியா நாட்டுக்குள் அனுமதித்தது. மேலும், மேற்கிந்தியத்தீவுகளின் வேண்டுகேளின்படி அந்த அணியின் எல்லா வீரர்களும் ஒரே தங்குமிடங்களிற்தங்க அனுமதிக்கப்படவில்லை. அணியிலிருந்த 7 வெள்ளையின வீரர்கள் தனியாகவும், 7 கறுப்பின வீரர்கள் தனியாகவும் தங்கவைக்கப்பட்டார்கள்.

தொடரின் ஆரம்பத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்க சிரமப்பட்டார்கள். ஆயினும், ஹெட்லி, கொன்ஸ்ரன்ரைன் ஆகியோர் ஓரளவுக்கேனும் தமது திறமையை வெளிக்காட்டினார்கள். சிட்னி மைதானத்தில் நடந்த ஐந்தாவது 5-நாட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே அவர்கள் அந்நியமண்ணில் பெற்ற முதல் வெற்றியாகும். இருப்பினும், போட்டிகளின் தொடரை 4-1 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்றிருந்தது. வில்லியம் பொன்ஸ்ஃபோர்ட் (467 @ 77.83), டொனால்ட் பிராட்மன் (447 @ 74.50) ஆகியோருக்கு அடுத்தபடியாக 336 ஓட்டங்களை (சராசரி 37.33) இரண்டு சதங்கள் அடங்கலாக ஜோர்ஜ் ஹெட்லி பெற்றுக்கொண்டார். மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடரிற் தோற்றிருந்தாலும், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட விசிறிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது.

1933 ம் வருடம் மீண்டும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2-0 என்கிற கணக்கிற் தோல்வியைத் தழுவிக்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 1934-35 காலப்பகுதியில்  மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் வைத்து எதிர்கொண்டது. அந்தத் தொடர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை மாற்றியமைத்தது எனலாம். பார்பேடோஸில் நடைபெற்ற முதலாவது 5-நாட் போட்டியை இங்கிலாந்து மிகுந்த போராட்டத்தின் பின் வெற்றிகொண்டது. மொத்தம் நான்கு ஆட்டவாய்ப்புகளில் ஒரு அணிகளும் சேர்ந்து 36 இலக்குகளை இழந்து வெறும் 309 ஓட்டங்களையே பெற்றிருந்தனர். அடுத்த போட்டியில் கொன்ஸ்ரன்ரைன், ஹெட்லி, சீலி போன்றோரின் திறமையான துடுப்பாட்டம் மர்றும் பந்துவீச்சாளர்களின் ஒருமித்த உழைப்புக் காரணமாக 217 ஓட்டங்களால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றியைத் தமதாக்கிக்கொண்டது. மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிய, நான்காவது போட்டி தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் ஹெட்லி எடுத்த 270 ஓட்டங்களும், மன்னி மாட்டின்டேல் (MANNY MARTINDALE), கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் சாதகமாக அமைய, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைப் படுதோல்வியடையச் செய்து, தமது முதற்தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

1939 இல் மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் தோற்றது. ஹெட்லி லொர்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியின் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். இந்தத் தொடருக்குப் பிறகு 1948 வரையில் மேற்கிந்தியத்தீவுகள் எந்தத் தொடரையும் விளையாடவில்லை. இந்தத் தொடர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமைந்தது. பார்பேடோஸில் நடந்த முதற் போட்டி சமநிலையில் முடிந்தது. ட்ரினிடாடில் நடந்த இரண்டாவது போட்டியும் அவ்வாறே. அப்போட்டியில் அறிமுகமான கிஸீபீஹ் ANDY GANTEAUME சதமடித்தாரென்பதும், அதற்குப் பிறகு அவர் எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் George Carew என்பாரும் சதமடித்தார்.

இறுதியிரு போட்டிகளிலும் மிகப் பெரும் வெற்றிகளை மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்றுக்கொண்டது. அவ்வெற்றிகளின் காரணகர்த்தாக்கள் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி, வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்