யாழ் உலகத் திரைப்பட விழா 2016

107

இந்தவருடத்திற்கான யாழ் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பானத்தில் நடக்கும் இரண்டாவது உலகத் திரைப்பட விழாவான இந்த விழாவில் திரையிடப்படவுள்ள திரைப்படங்கள் அனைத்தும் இலவசமாகவே காண்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுலள்ள திரைப்படங்களில், Girlhoodஎன்ற ஃபிரஞ்சுப் படம், Paper plane என்ர அவுஸ்திரேலித் திரைப்படம் மற்றும் இறுதிநாள் திரையிடப்படவுள்ள வெற்றிமாறனின் ‘விசாரணை’ என்ற திரைப்படம் என்பவை முக்கியமான படங்கள் எனத் தெரியவருகிறது. விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான பாக்கியநாதன் அகிலன் அவர்கள் இது தொடர்பான ஊடகவியலாலர் சந்திப்பின்போது ஆற்றிய உரை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது. (ஆ-ர்)

முதலாவது தமிழ் திரைப்படம் கீசகவதம் வெளியிடப்பட்ட 100ஆவது வருடத்திலும், முதலாவது பேசும்படம் காளிதாஸ் வெளி வந்து 75ஆவது வருடத்திலும் நின்றுகொண்டு யாழ்ப்பாணம் எனும் யுத்தத்தால் குதறியெறியப்பட்ட ஒரு சிறிய பிராந்தியமொன்றின் இரண்டாவது சர்வதேசச் சினிமா விழாவினை  நிகழ்துவதில் பெரு மகிழ்சியடைகிறோம். தமிழ் சினிமாவின் இந்த நூற்றாண்டுப் பயணத்தில் தென்னிந்திய சினிமாப் பண்பாட்டுப்புலத்தின் வெவ்வேறு களங்களில் வெவ்வேறு சினிமாத் துறைகளில் ஈழத்தமிழர்களின் பங்கும் பணிகளும் கலந்தூறிப்போயுள்ளன. ஒரு தொழிற்சாலையாக தமிழ் சினிமா இந்த நூற்றாண்டுப் பயணத்தின் விளைவாக பெரு வளர்ச்சி கண்டுள்ளதாயினும், அதனூடாக தமிழில் ஒரு பெரிய வெகுஜன சினிமாப் பண்பாட்டைக்@ கட்டியெழுப்பியுள்ளோம்  என்ற போதிலும், இந்த நூறாண்டுகளில் சினிமாவின் உள்ளார்ந்த வெளிப்பாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பெறுமானங்களாலான- பல்பரிமாணமுடைய வாழ்க்கைக்கு நிகரான இன்னொரு வாழ்வாக நிற்கின்ற, அதனால் வாழ்வின் ஆழமான கேள்விகளாலும், அர்த்தங்களின் பல்லடுக்களாலும் அமையப்பெற்ற சினிமா வெளிப்பாடுகளாலும் அவற்றை ஒட்டிய தொடர்ச்சியான திரையிடல்கள், பார்வையிடல்கள் உரையாடல்கள், திறனாய்வுகள்  என்பவற்றாலான ஆரோக்கியமானவொரு மாற்றுச் சினிமாப் பண்பாட்டையும் வெகுஜனச் சினிமாப் பண்பாட்டிற்கு நிகராக கட்டியெழுப்ப எங்களால் எவ்வளவு தூரத்திற்கு முடிந்திருக்கின்றது என்ற கேள்வி இந்தத் தருணத்தில் முக்கியமானது.

நம்பிக்கை தரத்தக்க பல முன்னோடிச் செயற்பாடுகள் தமிழ் சினிமா வட்டகையில் உண்டென்றாலும் – சினிமாப் பண்பாடு குறித்தான மாற்றுச் செயற்பாடுகளும், மாற்று சினிமாக்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் இன்று பரந்துபடக் காண்கிறோம் என்ற போதிலும் சினிமா மொழியிலும், மொழிதலிலும் மேலும் வலுப்பெற வேண்டிய விடயப் பரப்புகள் எம்முன்னால் விரிந்தே காணப்படுகின்றன. அதேநேரம் சினிமா என்ற கலை வடிவம் தன்னியல்பிற் கொண்டுள்ள கவர்ச்சி காரணமாகவும், அது ஏனைய வெகுஜன ஊடகங்கள் மீது கொண்டுள்ள வலுவான ஆதிக்கம் காரணமாகவும், இன்று சினிமாவை எடுப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியங்களின் வளர்ச்சி காரணமாகவும் பெருந்தொகையான இளைஞர்கள் சினிமாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இவ்வகையில் அண்மைச் சில வருடங்களாக இலங்கையில் பெருந் தொகையான இளைஞர்கள் குறுந்திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வங்காட்டுதலைக் காண முடிகிறது. பரந்துபட்ட கருப்பொருட்களை அவர்கள் கையாளுகிறார்கள். ஆனால் மேற்படி ஊடகத்தின் மீதான கவர்ச்சியைத் தவிர அவர்களிற் பலரிடம் அதன் மொழி அதன் பரிணாமங்கள் பற்றிய போதிய அறிவும், அனுபவமும் இல்லை. மேலும் அவர்களிடையே வலுவான ஒரு சினிமா சார்ந்த ஆளுமைகளுடனான் வலைப்பின்னலும் இல்லை. அதனால் பெரும்பாலான இத்திரைப்படங்கள் வெளிப்பாட்டு ரீதியாகப் பலவீனமானவையாக உள்ளன.

இத்தகைய சூழலை மாற்றியமைப்பதிலும், வெகுஜன சினிமாப் பண்பாடொன்றுக்கு எதிரிடையான மாற்று சினிமாப் புலத்தைக் கட்டியெழுப்புவதிலும் – அதே சமயம் வெகுஜன சினிமாவை புரிந்து கொள்ளுதற்கும் வாசிப்பதற்குமான புதிய பார்வைகளை வழங்குவதிலும் இத்தகைய சினிமா விழாக்கள் பெரும் பங்கை ஆற்ற முடியும். உலகத்தின் தலை சிறந்த சினிமா ஆக்கங்களை ஒருங்கே பார்பதற்கும், அவற்றிடையே பயணஞ் செய்யும் வேறுபாடுகளையும், தனித்துவங்களைக் கண்டுகொள்ளவும், உணர்ச்சிகளின் காண்பியக் கழிப்பை பெறுதலுக்கும், வாழ்வை மேலும், மேலும் புரிந்து கொள்வதற்கும், கலை வெளிப்பாடு தன்னுடைய சொந்தத் தர்க்கங்களான இன்னொரு வாழ்வாக இருத்தலைக் காணவும் இவை வழி திறந்து விடுகின்றன சினிமாப் படைப்பாளிகளின் வகுப்புக்கள், சினிமாப் படைப்பாளிகளுடனாக நேரடிச் சந்திப்புக்கள் என்பன அவர்களது துறைசார் பட்டறிவுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றன. அந்தவகையில் சினிமா விழாக்கள் உள்ளூர் படைப்பாளிகளுக்கான வலுவான தளமொன்றை உருவாக்குமதேசமயம். உலகளாவிய சினிமாக்களின் புதிய போக்குகளுடனும், படைப்பாளிகளின் வலையமைப்புடனும் அவர்களை இணைக்க உதவுகிறது. உள்ளூர் மக்களை சினிமாவை நோக்கி இவ்வகைப்பட்ட விழாக்கள் ஈர்ப்பதுடன் அவர்களது சினிமா அரங்குகள், வர்த்தக முயற்சிகள் மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை இவற்றின் மீதும் சாதகமான மாற்றங்களை சினிமா விழாக்கள் உருவாக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பலவேறு நாடுகள் – பிராந்தியங்கள் – பண்பாடுகளினது படைப்பாக்கங்களை எதிர்கொள்வதனூடாக அவற்றின் இடம், வரலாறு, இனத்துவம், மதம் முதலியன சார்ந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளவும், அதேநேரம் அவற்றை ஊடறுத்துச் செல்லும் மனிதகுலப் பொதுமைகளை மேற்படி வேறுபாடுகளிடையே காணவும் இவ்விழாக்கள் உதவுகின்றன. கலையொரு சாட்சியமாகவும், அதேசமயம் பிரநிதித்துவமாயும், அதனால் ஒரு வரலாற்று ஆவணமாகவும் நிற்கும் ஒரு பெருங்கடப்பாட்டை ஆற்ற, ஒரு வெளிப்பாடாக அது கொள்ளும் பல தோற்றப்பாடுகளைக் காண இத் திரைப்படவிழா ஒரு யாத்திரை வழிபோலத் தொழிற்படும் என நம்புகிறோம்.