கனடியத் தமிழர் பேரவையின் 8வது நிதிசேர் நடை

182

னடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை 2016 செப்டெம்பர் 11ந்திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோ, தொம்சன் பார்க்கில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும், பல தமிழ் அமைப்புக்களும் இந்த நிதிசேர் நடையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமானதாக்கினர்.

இவ்வாண்டிற்கான நிதிசேர் நடை ‘கனடா – மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ என்று அழைக்கப்படும் நல்லின மாடு வளர்ப்புத்திட்டத்திற்காக நடத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான நிதி சேர் நடையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ‘கனடா-மட்டக்களப்பு நட்புப் பண்ணை’யின் உருவாக்கத் திட்டம் திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் முன்மொழியப்பட்டு, கனடியத் தமிழர் பேரவையினரால் கனடாத் தமிழர்களின் உதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நிதிசேர் நடையானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சம்பூர் பிரதேசத்தில் ஒரு வீடமைப்புத்திட்டத்தை உருவாக்கித்தர நடத்தப்பட்டது. அந்த நிதிசேர் நடையின்மூலம் ஒருலட்சம் டொலர்களுக்கும் மேலாக நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியின் மூலம்  சம்பூரில் அமைக்கப்பட்ட 41 வீடுகளும் கணவரை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கனடியத் தமிழர் பேரவையினரால் வழங்கப்பட்டன என்பது நீங்கள் அறிந்ததே.

இந்த ஆண்டிற்கான நிதிசேர் நடையின் பலனாக 50 நல்லின மாடுகளையும் 50 கன்றுகளையும் கொண்டதொரு பண்ணையாக ‘கனடா-மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ கிழக்கு மாகாணத்தின்  படுவான்கரைப் பிரதேசத்தில் உருவாகும். பண்ணை அமைவதற்காகத் திட்டமிடப்பட்ட மொத்தத் தொகை 100,000 டொலர்கள் என்பதும், நிதிசேர் நிகழ்வின்போது  அந்த இடத்தில் வைத்து மட்டும் 65,000 டொலர்கள்வரை திரட்டப்பட்டுவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள தொகையினைத் திரட்ட உதவி புரிய முன்வருவோர் கனடியத் தமிழர் பேரவையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி பணிவன்புடன் வேண்டப்படுகின்றனர். பண்ணைக்கான நிதி சேகரிப்பு நொவம்பர் மாத இறுதிவரை தொடரும் என்று கனடியத் தமிழர் பேரவையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிதிசேர் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்: