குறமகள் மறைந்தார்!

132

ஈழத் தமிழிலக்கிய உலகில் அறுபதுகளிலிருந்தே நன்கு அறியப்பட்ட முக்கியமான பெண்நிலை சார்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்த படைப்பாளியும் சமூகப் போராளியுமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம், கடந்தவாரம் (15-9-2015)தனது 83 வது வயதில் காலமாகினார். மிகச் சிறிய வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த  அவர் தனது இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தவர். அறுபதுகளிலேயே பெண் என்ற அடிப்படையிற் சிந்திக்கவும் செயற்படவும், புரட்சிகரமான முற்போக்குக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவும்,சமுக உரிமைப் போராட்டங்களில் பங்கேற்கவும் தயாராகவும் துணிச்சல் கொண்டவராகவும் இருந்தவர் அவர். சிறுகதைகள், கவிதைகள்,குறுநாவல்கள், கட்டுரைகள் என்று அவர் எழுதியவை அதிகம். இதுவரை அவரது எழுத்துக்களைக் கொண்ட ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் நூலுருப்பெறாத படைப்புக்கள் அவரிடம் இருந்தன.

‘யாழ்ப்பண சமூகத்தில் பெண்கள் கல்வி’ என்ற அவரது நூல் மிகவும் முக்கியமான ஒரு ஆய்வு நூலாகும். கடந்த மார்ச் மாதம் அவரை தாய்வீடு இதழுக்காக நேர்காணல் செய்த அருண்மொழிவர்மன் அவர் பற்ரிக் குறிப்பிடும்போது “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வியின் வரலாற்றையும், அன்றைய சமூகச் சூழலையும் ஆராயும் இந்நூலில் அன்றைய தலைவர்கள், சைவமும் தமிழும் என்று அன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கம் பற்றியெல்லாம் தன் கருத்துகளைக் காத்திரமாக முன்வைப்பதுடன் இக்கருத்தாக்கங்கள் எவ்வாறு பெண்ணடிமைத்தனத்தையும், சாதியத்தையும் பேண உதவின என்றும் விபரமாகப் பேசுகின்றார்.  குறமகள் என்கிற பெயர் சிறுவயதில் அறிமுகமானபோதும் அவரது எழுத்துக்களுனுடனான அறிமுகம் இந்நூலின் வாயிலாகவே எனக்குக் கிடைத்தது.   காலமும் முதிர்ச்சியும் அவரில் மெல்லிய தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சில விடயங்களை அவர் மறந்திருந்தாலும் இன்னமும் வசீகரிக்கின்ற ஓர் ஆளுமையாகவே இருக்கின்றார்.  பெண்விடுதலை, சாதிய ஒழிப்பு, சமத்துவ சமூகம் தொடர்பான அவரது கருத்துகள் இன்னமும் உறுதியாகவே ஒலிக்கின்றன.  இன்றும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கின்றார்” என்று தெரிவித்திருந்தார். உண்மை. எம்மத்தியில் வாழ்ந்து மறைந்த பெண் ஆளுமைகளில் முக்கியமான ஒருவர் அவர். அவருக்கு தீபத்தின் அஞ்சலிகள்!.