நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி?

170
Woman taking her own blood sugar

டு சாமம் ஒரு மணி அளவில் தொலைபேசி ஒலித்தது. கட்டிலில் படுத்திருந்த கந்தர் மெதுவாக எழுந்து இந்த நேரத்தில யார் என முணு முணுத்தபடி தொலைபேசியை எடுத்து “கந்தர் பேசுகிறேன்“ என்றார். மறு முனையில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியானதும் துக்கமானதும் என்பதை மின்னொளியில் அவரின் முகமாற்றம் காட்டியது.

“கனகம் இங்க வா“ என்ற பெரிய குரலில் வீறிட்டு கூவி, “நாங்கள் பாவிகள். என்ன பாவமடி செய்தோம். இதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நாங்கள் இங்கை குத்தாட்டம் இருக்க, எங்கடை மூத்த குஞ்சு எங்களை விட்டு போய்விட்டதாம்“ என அலறினார். கனகமும் வீறிட்டு அழ அக்கம் பக்கத்து வீட்டுக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. சிறிது நேரத்தில் ஒருசிறு கூட்டம் வீட்டில் கூடிவிட்டது. கனகம் முன் திண்ணையில் இருந்து புலம்பிக் கொண்டிருந்தார். “பாரடி புவனம் எனக்கு இந்தப் புரட்டாதியோட எண்பத்தைந்து வயது ஆகின்றது. எனக்கு ஒரு வருத்தமும் கிடையாது. என்ர மூத்த பொடி கணேசனுக்கு நீரிழிவு நோய். முப்பத்தியிரண்டு வயசிலேயே வந்திட்டுது. அவனும் வியாபாரம் வியாபாரம் என்று இரவு பகல் பாராது ஓடித்திரிந்து தன்ரை உடம்பைக் கவனிப்பதும் இல்லை. சாப்பாடு ஒழுங்காக சாப்பிடுவதுமில்லை. கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட சாப்பாட்டை சாப்பிட்டு நேரத்திற்கு மருந்து போடாமல் திரிந்து நீரிழிவால் வாற எல்லா வருத்தமும் வந்து இண்டைக்கு எங்களையெல்லாம் விட்டுட்டு போட்டான். கடைசியாக நாங்களெல்லாம் நடுரோட்டில“ அவள் இவ்வாறு புலம்ப கந்தர் ஒருவாறு வீட்டைப் பூட்டிக்கொண்டு மகன் வீட்டை ஓடுவதற்கு தயாராக வந்தவர்களையும் சமாளித்து விட்டு மிக வேகமாக மகனின் வீட்டை நோக்கி விரைகின்றனர்.

இங்கே குறிப்பிடப்பட்ட சம்பவம் போன்ற பல சம்பவங்கள் எங்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் நம்மிடையே அதிகரித்துக் கொண்டுமிருக்கிறார்கள். நீரிழிவு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.நீரிழிவு தவிர்க்கவே முடியாத பிரச்சனையா? இல்லை. இதனைத் தடுப்பது மட்டுமல்ல, குறைக்கவும் முடியும். ஆனால் இது மருந்து மாத்திரைகளால் ஏற்படக்கூடிய மாயமல்ல. நாம் எமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களே எம்மை இவற்றிலிருந்து பாதுகாக்க முடியும். தற்கால மருத்துவ முறைகள் மட்டுமல்லாது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளும், ஆன்மீக பெரியார்களும் இதற்கான தீர்வை கூறிச்சென்றுள்ளனர். நாம் அவ் வழிமுறைகளைப் பின்பற்றாது வியாபார உலகின் மாயைக்குள் அகப்பட்டு எமது வாழ்க்கையைத் தொலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நீரிழிவு நோயானது சிறுகச் சிறுக கொல்லும் நோய் என வருணிக்கப்படுகின்றது. ஏனெனில் இது உடம்பிலுள்ள எல்லாப் பாகங்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது என்பதை அறிந்து கொள்வது மிகவும் பொருத்தமானது. உடல் இயக்கத்திற்கு சக்தி மிகவும் அவசியமானது உடலிலுள்ள அனைத்து அங்கங்களின் அடிப்படைக்கூறு கலம் எனப்படுகின்றது. கலங்கள் தொழிற்பட சக்தியானது தேவைப்படுகின்றது. அவ் சக்தியை குளுக்கோசுகளை உடைப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அவ் குளுக்கோசு நாம் உண்ணும் உணவின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. நம் உணவுக்கால்வாயினூடாக உள்ளெடுத்து அங்கு சமிபாடு அடையச் செய்யப்பட்டு அகத்துறிஞ்சப்பட்டு ஈரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. அனேகமாக ஈரலில் இருந்து குளுக்கோசானது இரத்தத்தினூடாக உடம்பிலுள்ள சகல கலன்களுக்கும் அதாவது மூளையிலுள்ள கலங்களிலிருந்து கால் நுனி விரலிலுள்ள கலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இவ்வாறு குருதி மூலம் எடுத்துச் செல்லப்படும் குளுக்கோசானது கலன்கள் தமது தேவைக்கு ஏற்ப இரத்ததில் இருந்து எடுத்துக் கொள்ளும். இவ்வாறு கலங்கள் இரத்தத்தில் இருந்து குளுக்கோசை எடுப்பது குறையுமாயின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கும். இதனைக் கட்டுப்படுத்த மேலதிக குளுக்கோசானது கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.

எனவே குருதியில் குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தும் செயலை எமது உடலில் உணவுக்கால்வாயுடன் தொடர்
புடைய சதயி என்ற உறுப்பு சுரக்கும் சுரப்பான இன்சுலின் கட்டுப்படுத்துகின்றது. இவ் இன்சுலினானது குருதியிலுள்ள குளுக்கோசை கலங்கள் உள்ளெடுக்கச்செய்வதன் ஊடாகவும், ஈரலில் குளுக்கோசை கிளைக்கோசனாக மாற்றுவதன் ஊடாகவும், குறைக்க முயல்கின்றது. ஒருவருக்கு இன்சுலின் சுரப்பு சுரக்கும் தன்மை குறைவதினாலோ அல்லது இன்சுலின் சுரப்பின் செயற்படுதன்மை கல்மட்டத்தில் குறைவதினாலோ நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

இப்போது உள்ள கேள்வி என்னவெனில் அவ்வாறான பழக்கவழக்கங்கள் இன்சுலின் சுரப்பை பாதிப்பதில் செல்வாக்கு செலத்துகின்றன. அவற்றை நாம் எவ்வாறு தடுத்து அளவான தொழிற்படுநிலை இன்சுலின் சுரப்பை நீண்ட காலத்திற்கு எமது உடலில் பேணலாம் என்பதை நாம் அடுத்த இதழில் அறிந்து கொள்ளலாம்.