ஆங்கிலப்படம் இயக்கி விருதுகள் குவிக்கும் இயக்குனர் ரொறன்ரோவில்..!

121

னோஜ் அண்ணாதுரை. இன்று தமிழ் திரைப்பட உலகில் ஆச்சரியத்துடன் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழகத்தில் இருந்து நியூயோர்க் வந்து, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கி, உலகளாவிய விருதுகளைப் பெற்று பலரது கவனத்தைக் கவர்ந்த இளம் தமிழ் இயக்குனர் மனோஜ். ரொறன்ரோ திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இங்கு வந்திருந்தார். ‘தீபம்’ அவரைச் சந்திக்கிறது.

சென்னையில் பிறந்த மனோஜ் இயக்கிய அவரது ‘Get Happy’ திரைப்படம் அரை மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தயாராகியிருக்கிறது. இரண்டு மணிநேரம் ஒடும் இந்த Romantic Comedy வாழ்க்கையின் அற்புதங்களையும், குறைபாடுகளையும் உள்ளார்ந்த நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி Manhattan Film Festival இல் Best Romance Comedy  விருதையும், Universe Multicultural Film Festival இல் Best Romance Feature விருதையும், Montrial Film Festival, New York Independent Film Festival  ஆகியவற்றில் திரையிடுவதற்காக உத்தியோகபூர்வ தெரிவாயும் (Official Selection), Maryland International Film Festival இல் Best Feature Finalist விருதையும், World Fest Houston Film Festival இல் GOLD REMI விருதையும் பெற்றுத்  கலக்கியிருக்கிறது. நியூயோர்க்கில் மட்டும் ஒருவாரத்திற்கும் மேலாக தொடர்ந்து திரையரங்கில் ஓடியிருக்கும் இத்திரைப்படம், ஐரோப்பிய, அவுஸ்த்ரேலிய, ஆசிய திரையரங்குகளிலும் விரைவில் திரையிடப்படுகிறது. சுயாதீன திரைப்படம் (Independent film) என்ற வரைமுறைக்குள் வரும் இத்திரைப்படம் இவ்வளவு விருதுகளையும் எடுத்தவுடனேயே குவித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

“இது கனடாவுக்கான எனது இரண்டாவது வருகை. TIFF திரைப்பட விழா நடக்கும் பகுதியில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.  திரைப்படம்தான் எனது வாழ்க்கை. ரொறன்ரோவில் இருக்கும் இந்த இரண்டுவாரகாலத்தையும் திரைப்பட விழாவிலே காட்டப்படும் படங்களை பார்க்கும் அளவில்தான் என் பொழுது கழிகிறது. எனது அடுத்த அடுத்த திட்டங்களுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் மனோஜ்.

அப்படி வலுசேர்க்கும் அளவுக்கு என்னதான் செய்து கொண்டிருக்கிறார் மனோஜ்? இன்றைய தமிழகத்தின் திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சி உலகத் தரம் வாய்ந்தது. காமெரா, எடிடிங், இசை, க்ராபிக்ஸ் என பல்வேறு தொழில்நுட்பங்களிலும் தமிழர்கள் கலக்குகிறார்கள். இவர்களின் பங்களிப்புடன் ஆங்கிலப் படங்களை எடுக்கும் சந்தையில் நுழைந்து அதன்மூலம் உலக கவனத்தை நம் தமிழ் மக்களின்மேல் திருப்பவேண்டும் என்பதே மனோஜ் அண்ணாதுரையின் இலக்கு. அதன் முதல் முயற்சியாக,  மேற்குலகத்திற்கு ஏற்ற ஒரு திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து முற்று முழுதாக அமெரிக்க நடிகர்கள் நடிக்க, தானே அதை இயக்கி மிரட்டியிருக்கிறார் மனோஜ். Get Happy படத்தைப் பார்க்கும் எவரும் இது ஒரு இந்தியனால் இயக்கப்பட்டது என்று தெரியாமலே பார்த்து ரசிக்கிறார்கள்.

பிறகு இயக்குனர் ஒரு இந்தியர் என்பது தெரிய வரும்போது வியந்து போகிறார்கள். “ரசிகர்களின் இந்த வியப்புத்தான் ஒரு புதுமுக இயக்குனராக எனக்குக் கிடைத்துவரும் பெரிய விருது. என் அடுத்த அடுத்த படங்களில் இதன் தொடர்ச்சியாக காமெரா, எடிடிங், இசை, க்ராபிக்ஸ் என்பனவற்றிற்கும் தமிழர்களை இழுத்து வரவிருக்கிறேன். கமெராவிற்குப் பின்னால் இருக்கும் நம் திறமைகள் ஹொலிவூட்டிற்கு செல்ல இது ஒரு முன்முயற்சியாக இருக்கும்.” என்று  நம்பிக்கையுடன் சொல்கிறார் மனோஜ்.

“உலகளாவிய நிலையில் பெயர் பெற்ற Orson Welles இலிருந்து James Cameron வரை மேற்குலகத்தின் பலவேறு இயக்குனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இந்திய சினிமாவின் பாதிப்பு இல்லாமல் இந்தியரால் எடுக்கப்படும் ஒரு படம் மேற்குலக மக்களினால் ரசிக்கப்பட வைப்பதற்கு நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். உலக சினிமா, மேற்குலகத்தின் ஜனரஞ்சக சினிமா இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளிகூட சுவாரஸ்யமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டே ஆங்கிலத்தில் படம் இயக்கும் என் முயற்சி தொடர்கிறது. இன்னும் சாதிப்பேன்.” என்று புன்னகைக்கும் மனோஜிடம் இருக்கும் பல ஆசைகளில் ஒன்று என்ன தெரியுமா? “இலங்கைத் தமிழர்களின் வலி நிறைந்த போராட்ட காலத்தின் ஏதோ ஒரு கதையை எந்தவித பக்கசார்பும் எடுக்காமல் ஒரு ஆங்கில திரைப்படமாக உருவாக்க வேண்டும். அதன்மூலம் பல விருதுகளை நாம் பலரும் பெறவேண்டும்.”

ஆர்வமும் துடிப்பும் கொண்ட பழக இனிமையான இளைஞர். பெரிய கனவுகளுடன், அமைதியாக ஆனால் உறுதியுடன் இயங்கி வருகிறார். அவருக்கு முன்னே மிகப்பெரிய எதிர்காலம் காத்திருப்பதை இப்போதே உணர முடிகிறது, அவருடன் உரையாடுகையில்!