சுதந்திர கிழக்கு கொம்பு சீவிவிடுவது யார்?

91

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, இனப்பிரச்சனைக்கு தீர்வை கண்டடைய வேண்டிய பெரிய பொறுப்பு நல்லாட்சி அரசின் தோளில் உள்ளது. சர்வதேசத்துக்கான பொறுப்புகூறல், ஆட்சிமாற்றத்திற்கு தோள்கொடுத்த சிறுபான்மையினங்களிற்கான கைமாறு போன்ற முக்கிய காரணங்களிற்காவது இனப்பிரச்சனை தீர்வை கண்டடைய வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது.  இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் முதல் சிக்கல் தோன்றப்போகும் இடம் வடக்கு கிழக்கு இணைப்பு. வடக்கு கிழக்கு இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதுதான் தீர்வின் அடிப்படை. அதிலிருந்துதான் அனைத்தும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஆனால் அது இடியப்பசிக்கலை போல இலகுவில் தீர்க்க முடியாத சிக்கல்.வடக்கு கிழக்கு இணைப்பு தமிழர்களின் அடிப்படையான தாயக கோட்பாடு. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலம் இணைக்கப்படாமல் வழங்கப்படும் எந்தவொரு தீர்வும் நீடித்து நிற்காதென்பது தமிழர் பக்க நிலவரம். ஆனால் இணைப்பிற்கு அரசு தயாரில்லை. சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டிய தேவை அரசுக்க உள்ளது. அதனால் இணைப்பிற்கு அரசு உடனடியாக தயாராகுமென நம்ப முடியாது. தற்போது மகிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி சிங்கள இனவாதத்தை மிக வேகமாக பரப்பி வருகிறது. வடக்கு கிழக்கு இணைப்பென்பது தமிழீழத்தின் முதற்படியென பிரச்சாரங்களை நடத்துகிறது. அவர்களின் தீவிர பிரச்சாரம் கிராமப்புற மக்களிடம் விரைவாக சென்றடையும்.

அதுபோல முஸ்லீம்களும் இணைப்பிற்கு தயாரில்லை. முஸ்லீம்கள் மத்தியிலுள்ள கடும்போக்கு கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இப்படியான சிக்கலான நிலைமையிலேயே தீர்வு விவகாரம் உள்ளது. தீர்வை வழங்க வேண்டும், தமிழர்களின் பிரச்சனையை முழுமையாக தீர்க்க வேண்டும், நாட்டிலுள்ள மற்ற இனங்களான சிங்கள- முஸ்லீம் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவும் கூடாது. அப்படியொன்றை கண்டுபிடித்தால்த்தான் இந்த அரசின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இணைந்த வடக்கு கிழக்கில், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களின் அடிப்படையான கோரிக்கை. இவை உள்ளடங்கிய சமஷ்டிக்கு குறைவான எதையும் தமிழர்கள் வாங்குவார்களா என்பது சந்தேகமே. ஆனால், இதற்கு சிங்களத்தில் ‘தனித்தமிழீழம்’ என அர்த்தம் கற்பிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு சிறுகாரியத்திலும் தமிழர்களிற்கு எதிரான வெறுப்பை தூண்டி, சிங்கள இனவாதத்தை திரிதூண்டுகிறது மகிந்த அணி. தப்பிச்சென்ற விடுதலைப்புலி சந்தேக நபரை சுட்டுக்கொன்ற படையதிகாரிக்கு விதிக்கப்பட்ட நட்டஈட்டை திரட்ட ஒன்றிணைந்த எதிரணி உருவாக்கிய நிதியம் இறுதி சாட்சி.

இப்படியான உள்ளக நெருக்கடியுடன், தமிழர்களின் முழுமையான எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா என்பதுதான் பெரிய கேள்வி. கொடுத்தாலும் பிரச்சனை, கொடுக்காவிட்டாலும் பிரச்சனையென்ற இருதலை கொள்ளியின் நிலை அரசுக்கு. இதனால்த்தான், தீர்வு விவகாரம் இழுபறியில் இருக்கிறது. யாரும் உரத்து பேசுகிறார்கள் இல்லை. இப்போது கிடைக்கும் தகவல்களின்படி மூவினத்திற்கும் சிக்கலையேற்படுத்தும் விவகாரங்களை அகற்றிவிட்டு, தீர்வு யோசனை உருவாக்கப்படுகிறது. இது எவ்வளவு தூரம் வெற்றியடையும் என்பது தெரியவில்லை. ஆனால், இதற்குள் சில கொம்புசீவில் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளதோ என்ற சந்தேகமும் எழாமலில்லை. வடக்கு கிழக்கு இணைப்பில் தமிழர்களுடன் முட்டிமோத அரசு விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் முஸ்லீம்களும் ஒத்த அலைவரிசையில் இருப்பதால், அவர்களை வைத்தே காரியத்தை முடிக்கும் இரகசிய நகர்வு நடக்கிறதோ என்ற வலுவான சந்தேகங்கள் எழுகின்றன. இணைப்பிற்கு எதிரான முஸ்லீம்களின் குரலை வலுப்படுத்தி, முஸ்லீம்களின் விருப்பத்தை மீறி செயற்பட முடியாமலுள்ளதென கூறி, இதனை தமிழ்- முஸ்லீம் பிரச்சனையாக்கும் முயற்சிகள் நடக்கிறது போலுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற தீவிர நிலைப்பாடுடைய சிறிய கட்சிகளும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் கிழக்கில் முன்னெடுத்துள்ள ‘சுதந்திர கிழக்கு’ கூட்டத்தொடர் இதன் ஒரு அங்க மென்ற பரவலான அபிப்பிராயம் எழுத் தொடங்கியுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான பிரச்சாரமே ‘சுதந்திர கிழக்கு’ செய்வது. கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாக இந்த பிரசார கூட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த வாரம் ஏறாவூரில் முதலாவது கூட்டம் நடத்தப்பட்டது. கிழக்கு முஸ்லீம்களின் இனஉணர்வை தூண்டி, தமிழர்களுடன் முரண்பட வைக்கும் இரகசிய செயற் திட்டமாகவும் சுதந்திர கிழக்கு இருக்கலாம். இதனை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை என்ற கோசத்திற்கு தீவிர சிங்கள அமைப்புக்கள் கொடுக்கும் அச்சுறுத்ததலை, சுதந்திர கிழக்கும் விரைவில் ஏற்படுத்தலாம். இதனை எதிர்கொள்வதில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் பெரிய பொறுப்பு உள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லீம்கள் எடுத்தது வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில். கடந்தகால கசப்பான அனுபவங்களால் தமிழர்கள் தொடர்பாக ஏற்பட்ட அவநம்பிக்கைகள் தற்போது ஓரளவு தீர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னொரு பிரச்சனை உள்ளது. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லீம்களின் விகிதாசாரம் குறைந்துவிடும் என்ற அபிப்பிராயம் பரவலாக உள்ளது. விகிதாசாரம் குறைந்தால் முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ள முடியாதென்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பு கிழக்கில் மட்டுமே காணப்படுகிறது. அதனை இழக்க முஸ்லீம்கள் விரும்பமாட்டார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அண்மைய காலமாக நிறைய விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்கிறது. இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம்கள் ஒன்றிணைந்து ஆட்சிசெய்யும் பூமியாக மாற்றுவோம் என கூட்டமைப்பின் தலைமை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான பொறிமுறை என்னவென்பதை தமிழர் தரப்பு வெளிப்படுத்தும் வரை முஸ்லீம்களின் சந்தேகம் தீராது. அந்த சந்தேகம் தீரும்வரை கையாள்பவர்களிற்கு இலகுவாக இருக்கும்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லீம்களின் வகிபாகம் என்னவென்பதை வெளிப்படுத்தி, இணைப்பு ஒன்றுபட்ட இலங்கைக்கு ஆபத்தில்லையென சிங்களவர்களின் சந்தேகத்தையும் தீர்க்க வேண்டிய பெரிய பொறுப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. இதுபற்றிய வெளிப்படையான உரையாடலை கூட்டமைப்பு விரைந்து ஆரம்பிக்க வேண்டும். கூட்டமைப்பு இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இனப்பிரச்சனை தீர்வு பின்தள்ளப்பட்டு, சிக்கலாகிக் கொண்டேயிருக்கும்.

எம்.என்.எம்.அன்ஸார்