நான் பானுஜன் அல்ல; மோனிஷா! – 3

203

முதன் முதலாக ஒரு மனித உயிரி என்னை ஆதரவாகப் பார்த்த தருணமது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அன்று மதிய உணவிற்கான இடைவேளயில் அவரைச் சந்திப்பதாகத் தீர்மானித்தேன். ‘நான் ஆணாக இருக்க விரும்பவில்லை. பெண்ணாகவே வாழவிரும்புகின்றேன்’ என்றேன். முதலில் அவர் என்னைக் குழப்பத்துடன்தான் பார்த்தார். அவரிற்கு நான் ஏதோ பிதற்றுவது போலவே இருந்திருக்க வேண்டும். ஆனால் சில நிமிடங்களில் அவர் என்னைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பார்வையில் ஒருவித கனிவு தெரிந்தது. ஆம், அந்த ஆசிரியர் என்னைப் புரிந்துகொண்டார்.

புரிந்து கொண்டது மட்டுமன்றி, மறுநாள் பெற்றோரை வரவழைத்துப் பேசினார். ஆனால் என்ன பேசினார் என்றுதான் தெரியவில்லை. வழமை போல அப்பா இரவில் குடித்துவிட்டு வந்து, அன்று வீட்டில் ருத்திர தாண்டவம் ஆடினார். வலிகள் கண்டு கண்டு இந்தத் தேகம் மரத்துப்போய்விட்டது. மனதில் வன்மம் கூடவே, ஒரு கட்டத்தில் கல் போல இருந்துவிட்டேன். என் மொளனம் மேலும் மேலும் அவரை வெறிகொள்ள வைத்திருக்க வேண்டும். ஆத்திரம் தீரும் வரை அடித்துத் துவைத்து விட்டார். ஆனால் என் கண்கள் அப்போது அழுவதற்குக் கூட அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

யார் யாரோ  உறவினர்கள்  எல்லாம்  வீட்டிற்கு  வருவார்கள்.  குசலம் விசாரிப்பார்கள். அவர்களின் பார்வையில் நான் நாணிக் குறுகிக்போய்விட்டேன். ஒரு புழுவை விட அற்பமாக உணர்தேன்.  சிலர் என்னைக் கண்டு காறி உமிழ்ந்தார்கள். என்னும் சிலர் என்னைக் கண்டு அச்சப்பட்டார்கள். அருகில் வராமல் தெறித்தோடினார்கள். பலருக்கு நானொரு வேடிக்கை வினோதம். அவர்களுக்குத் தெரியாமல் நான் மாறிக்கொண்டேயிருந்தேன் .

அப்பொழுது, ஆண்கள் என்றாலே ஏதோ நரலோகத்தின் எமதூதர்கள் போல இருந்தது எனக்கு. வீட்டிற்கு வரும் ஆண்களிற் கெல்லாம் கற்களால் எறிந்தேன். கோபத்தில் வாயில் வந்தபடியெல்லாம் ஏசினேன். ஆனால் என் செய்கைகள் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கிறது. அதாவது பித்து நிலை.  எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது என பலரும் பலவாறு பேசினார்கள். அதனால்தான் நான் பெண்கள் போல நடந்து கொள்கின்றேன். கற்களால் எறிகின்றேன் எனக் கூறினார்கள். ஆனால் அம்மா மட்டும் எதுவுமே போசாமல் அழுதுகொண்டேயிருந்தாள். அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒருநாள் கோயிலுக்குப் போகப்போவதாகச் சொல்லி என்னை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நானும் ஏதோ விபூதி போட்டு, வேப்பிலை அடிக்கப் போகின்றார்கள் போல என எண்ணிக்கொண்டேன். ஆனால் அன்று நடந்த கதைவேறு. உண்மையில் நான் அழைத்துச் செல்லப்பட்டது, கோயிலுக்கல்ல. அதுவொரு வைத்தியசாலை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம். ஆம், அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு சென்றது தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு. அங்கு எனக்கு ஊசி மூலமாக மருந்து ஒன்று ஏற்றப்பட்டது. அதன் விபரங்கள் எனக்குத் தெரியவில்லை.  அது ஏற்றப்பட்டதன் பின்பு, நான்கு நாட்களின் பின்னர்தான் நான் கண்விழித்தேன். வாழ்க்கையில் அது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது.

அதன் பின்பு மனநல மருத்துவர் சிவயோகனிடம் அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் என்னைப் பதினெட்டு வயது வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அதன் பின்பு தூரத்து உறவுக்கார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்குதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவருக்கு ஒரு 65 வயதிருக்கும். ஒருவகையில் எனக்குத் தாத்தா முறையானவர். அன்று சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்தபடி என்னை அழைத்தார். நானும் ஏதோ உடல்நலம் சரியில்லைப் போலஎன எண்ணியபடி அருகில் சென்றேன். ஆனால் அந்த வஞ்சகன் என்னை அசிங்கமாகத் தொட்டான். உறவிற்கு அழைத்தான். வெலவெலத்துப் போய்விட்டேன். கைகளை உதறிவிட்டு என் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன். அவர் மனைவி வரும் வரை கதவினை இறுக்கமாகத்தாள்பாழ் இட்டுக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கியிருந்தேன்.

(தொடரும்)