அகதிகளின் நலனுக்காக உழைத்துவரும் தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!

2697

குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டுகொடுக்கும் என்பார்கள். ஆனால் அகிலன் அருளானந்தத்துக்கு அது டெலிபோனுக்கால் வந்தது. தனது வேலைகளில் மும்மரமாக மூழ்கியிருந்த அவருக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு அந்த இன்ப அதிர்ச்சியான செய்தியை அவருக்குத்தெரிவித்தது! ஆம் மக் ஆர்தர் பவுண்டேசனிடமிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு, உலகப் புகழ்பெற்ற அந்த நிறுவனம் வழங்கும், மிகக் கவுரவம் வாய்ந்த, நிபுணர்களுக்கு மட்டும் வழங்கப்படும் தமது பரிசுத் தொகையை, அவரது சேவைக்காக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவிக்கிறது. 6,25,000 அமெரிக்க டொலர் வெகுமதி. முழுக்க முழுக்க ஒருவரது தரம், அவரது திறமை,சமூகத்துக்கான அவரது பங்களிப்பு என்பவற்றை மட்டும் வைத்து வழங்கப்பட்ட வெகுமதி இது. இதற்கு வின்ணப்பங்களோ, பரிந்துரைகளோ கிடையாது. அந்த நிறுவனம் தான் சொந்தமாகத் திரட்டிய தனது தகவல்களின் அடிப்படையில் வழங்கும் ஒரு கொடை இது.

அகிலன் அருளானந்தம் ஒரு சட்டத்தரணி. தென் கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழர். மனித உரிமைகள், குடிவரவு சார்ந்த உரிமைகள், அகதிகளின் உரிமைகள் தொடர்பாக இயங்கிவருவருபவர். பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அவருடய குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக அவரது குடும்பத்துடன் வந்து இணைந்தனர். ‘உண்மையில், அப்போதுதான் நான் முதன் முதலாக அதிகளின் வாழ்க்கை பற்றி அறிகிறேன். ஏனென்றால் அவர்கள் எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள். என்னுடைய வயதினர். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்ததாலும், அந்த இடத்திலும், தம்மை வெற்றிகரமாக அமெரிக்காவில் தகவமைத்துக் கொள்ள எடுத்த கடு முயற்சியாலும்  பட்ட கஷ்டங்களை நான் நேரடியாக அறிவேன். இது எனக்கு இந்த விடயத்தில் அதிக அக்கறையை ஊட்டியது’ என்றுதெரிவிக்கிறார் அகிலன். அந்த அக்கறை காரணமாக, அகதிகள் உரிமை, மனித உரிமைகள் பற்றி ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் அவர் ஒரு சட்டத்தரணியான போது, வன்முறைகளுக்கு அஞ்சி, நட்டை விட்டு வெளியேறும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இயங்குவதே  தனது வாழ்க்கை நோக்கமாக வரித்துக் கொள்ளக்காறணமாயிற்று. ஆனாலும் அவருடைய பெரும்பாலான வேலைகள், இலங்கை அகதிகள் தொடர்பானதல்ல. அமெரிக்காவுக்கு வந்து சேரும் அகதிகள் பற்றியதாகவே உள்ளன என்கிறார். கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்களது வழக்குகளை அவர் நடாத்தியிருக்கிறார். எவரொருவரும், சரியான விசாரணை முறைமை இல்லாமல், அவரது சுதத்திரமான நடவடிக்கைகளிலிருந்து தடுக்கப்படமுடியாது என்று கூறும் சட்டத்தின் ஐந்தவது திருத்தத்தை ஆதரித்து அவர் செயற்பட்டுவருகிறார்.

2006 இல் அவர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, காலவரையறை அற்று குடிவரவாளர்களை தடுப்புக் காவலில்வைத்திருத்தலுக்கு எதிரான, நடராஜா எதிர் கொண்சலஸ், (Nadarajah V. Gonzales) என்ற வழக்கில் குடிவரவாளர் உரிமைக்காக வாதாடினார்!. இந்த வழக்கில், திருப்பி அனுப்பப்படுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த குடிவரவாளர்களில், தடுப்புக் காவலில் ஆறுமாதம் இருந்தவர்களுக்கு அவர்கள் தமது பக்க நியாயங்களைச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் ஒரு விசாரணை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இது உண்மையில் குடிவரவாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு உரிமையாகும்.  அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு மகத்தான வெற்றியும் கூட. இப்போது அவர் மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறிய கிட்டத்தட்ட மூன்று நான்கு வயது குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகிறார். ‘.இந்தக் குழந்தைகளால், தாம் இந்த நாட்டைவிட்டு வெளியேற்றப்படாமல் இருப்பதற்காக, நீதிமன்றில் வழக்காட முடியாது என்பதை புரிந்துகொள்ள ஒருவர் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தெரிவிக்கும் அவர், தனது மேதமைக்காக தரப்பட்ட இந்த வெகுமதியை அவர்களுக்காகவே செலவுசெய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

” மனித மற்றும் குடிவரவு உரிமைகளுக்காக வேலை செய்வது என்பது மிகவும் கடினமான பணி. ஆனால், அதே வேளை அது எனக்கு பெரும் உற்சாகத்தை தருவதாகவும் இருக்கிறது. என்று குறிப்பிடும் அகிலன், மக் ஆர்தர் பவுண்டேசனால் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட 23 மேதமைகளில் ஒருவர் என்பது உண்மையில் பெருமைக்குரிய விடயமே. இது அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம். அதுவும், குடிவரவாளர்களாக வந்து அகதிகளாக இருப்பவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அவர் செயலாற்றி வருவது மிகவும் போற்றலுக்குரிய ஒரு விடயமாகும். அவருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.