நோய்களை விருந்துக்கழைக்கும் சோம்பல்!

நாளும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 67 பிலியன் டாலர்களுக்கும் மேல் செலவு வைக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் சோம்பியிருப்பது என்ற விடயம் உலக அளவில் தொற்று நோய் போல பரவிக்கிடக்கும் இந்த நிலை, உலகுக்குச் சுகாதாரச் செலவினங்களில் 2013 ம் ஆண்டில் மட்டும் சுமார் 54 பிலியன் டொலர்களையும்,  இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பிலியன் டொலர்களையும் என்ற அளவுக்கு செலவு வைத்தது என்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் மருத்துவச் சஞ்சிகையான ‘லேன்செட்’டில் பிரசுரமான ஒரு கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஓடியாடிச் சுறுசுறுப்பாக இல்லாமல், ‘உட்கார்ந்தே’ இருக்கும் வாழ்க்கை முறையால், ஆண்டொன்றுக்குச் சுமார் 5 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் சுறுசுறுப்பான உடற்பயிற்சி தேவை என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உடற் பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது. சோம்பி இருப்பது என்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கே இடையூறாக இருக்கிறது என்றும், மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள செல்வந்த நாடுகள் இந்தச் சிக்கலுக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சோம்பலாயிருப்பது என்பது மற்றய பழக்கங்களைப் போல் நாங்களாக உருவாக்கிக் கொள்ளும் பழக்கம் தான். இக் கெட்டபழக்கத்தை நாம் தொடராமல் ஆரம்பத்திலேயே நிறுத்திக் கொண்டால் நாட்டுக்கு நல்லது என்பதை விட நமக்கும் நம் உடல் நலத்திற்கும் நன்மையாகும். இளமையாக இருக்கும் போது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்து (உணவு, நேரம்) உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறோம். காலப்போக்கில் அவைகளை மறந்து விடுகிறோம். நாம் அழகாக இருக்கிறோம் என்பதை விட ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதே இங்கே முக்கியமான விடயமாகும்.

தினமும் ஒரு மணிநேரமாவது நாம் உடற்பயிற்சி செய்யாது போனால் உடல் பருமனாவது மட்டுமல்ல அதோடு சேர்ந்து வயது செல்லச் செல்ல பல நோய்களையும் (high blood presure, High cholesterol, Heart disease, Osteoporosis and diabetes, stress, depression, greater risk of having a stoke or heart attack, developing cancer) நாம் நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம். நாம் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் நாளும் உடற்பயிற்சி யாவருக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

சோம்பலாயிருப்பதற்கும் உடற்பயிற்சி செய்யாமல் காலத்தைக் கடத்துவதற்கும் மிகவும் உதவி செய்வது தொலைக்காட்சியும் தொலைபேசியும் இணையத்தின் குமுக வலைத் தளங்களும் தான். அதிகாலையில் எழுதல் என்பது நம்மிடையே இல்லாமல் போய்விட்டது. வேலைக்கு போவதற்குச் சற்று முன் எழுந்து பறக்கப் பறக்க அணியமாகி செல்வது தான் நம் வழக்கம்மாயிற்று. இந்த சோம்பல் வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடுவது அவ்வளவுவொன்றும் கடினமான செயல் அல்ல. சிறிய சிறிய படிகளாக ஏறிச் சோம்பலை முறியடிக்கலாம். முதலில் நாம் நம்மை நேசிக்க வேண்டும். நாம் ஆரோக்கியமாக (எந்த மருந்து மாத்திரைகளும் இன்றி) அதிக நாட்கள் என் மக்களோடு வாழவேண்டும் என்ற ஆசை நமக்குள் வரவேண்டும்.

உடற்பயிற்சியைச் சிறியதாக ஆரம்பிக்கலாம். 10 நிமிட நேரம் நடப்பது, சமைத்த பாத்திரங்களை Dishwasherகளைப் பயன்படுத்தாது நாமே கழுவுவது, ஏதாவதொரு புதிய பொழுதுபோக்கொன்றை தெரிந்து கொள்வது (இசை, தொண்டர்களாக பதிவு செய்து கொள்ளுதல், கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள் எழுதுவது அல்லது படிப்பது, சமைப்பது, தைப்பது, வரைவது) இப்படி சிறியதாக ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை நாளின் கடைசி நேரம் வரை தள்ளிப்போடாமல் நாளின் தொடக்கத்திலேயே செய்யத் தொடங்குவது, வேலைகளின் இடையே சிறிய நேர ஓய்வெடுப்பது, சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்துவது, தொலைபேசியை சிறிது நேரம் (Silent mode) நிறுத்தி வைப்பது. இது Face Book  இற்கும் தொலைக்காட்சிக்கும் பொருந்தும்.

இப்படி சிறிது சிறிதாக நம் சோம்பலை விட்டு விலகி அழகான நலமான ஒரு வாழ்வை வாழ வழி வகுக்கும்.