பெண்ணெழுத்து 15

98

பெண்களிற்கு எதிரான வன்முறை பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டு கொண்டேயிருக்கிறது. அரசதிணைக்களங்கள் சுவரொட்டிகள் ஒட்டுகின்றன. தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்துகின்றன. வருடத்தின் சில தடவைகள் பேரணிகள் செல்வார்கள். ஆனால் யதார்த்தம் என்னவோ கசப்பாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

பெண்களிற்கு எதிரான வன்முறைகள் குறைவதாக எந்த புள்ளிவிபரமும் இல்லை. பெண்களிற்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வு, உரையாடல்கள் அதிகரித்து செல்வதற்கு சமாந்தரமாக வன்முறையும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஏன்? எங்கே தவறுள்ளது? பொறிமுறையில் ஏதாவது தவறுள்ளதா? இது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம். பெண்கள் அமைப்புக்கள் இதில் கவனம் கொள்ள வேண்டும். வித்தியா கொல்லப்பட்ட பின்னர் பெண்கள் அமைப்புக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். விசாரணையை அவதானிக்க பிரதிநிதிகளை அனுப்பினார்கள். அண்மைய விசாரணை சமயங்களில் அவதானித்தபோது, உடையார் கைத்தடியை அனுப்பிய விதமாக சில பிரதிநிதிகள் இருந்தார்கள். வடக்கில் இப்பொழுது பெண்கள் அமைப்புக்கள் பல செயற்படுகின்றன. பெண்களிற்கு எதிரான வன்முறை புள்ளி விபரங்கள் அவர்களிடம் வருகின்றன. விசாரணை சமயங்களில் அவதானிக்கவும் செல்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களிற்கு பரிகாரம் கிடைக்கவும் உதவுகிறார்கள். தற்காலிக நிவாரணமும் அளிக்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட பெண்களிற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பது உண்மையே. ஆனால், இந்த செயற்பாட்டில் உள்ள பலவீனம், இது கிராமங்களையும் நோக்கி செல்ல வேண்டும். தமது உரிமைகள் என்னவென்பதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்திருப்பதுடன், தமக்கு சட்ட உதவிகள் வழங்க தொண்டு அமைப்புக்கள் உள்ளன என்பதையும் ஒவ்வொரு பெண்ணும் அறியவைக்க வேண்டும்.

வன்முறைக்குள்ளாகும் பெண்கள் பொதுவாகவே சட்டஉதவியை நாடுவது குறைவு. தமக்குள்ளாகவே போட்டு மூடி
வைத்துவிடுபவர்களே பெரும்பாலானவர்கள். அதற்கு காரணம் நமது சமூக அமைப்பு. ஆண்களை மையப்படுத்தி, ஆண்களை பாதுகாப்பதாக உருவாக்கப்பட்டுள்ள நமது கலாசாரம், பண்பாட்டு அம்சங்கள் பெண்களை மோசமாக வஞ்சிப்பவை. இந்த சூழலில் தற்போதைய  நீதிப்பொறிமுறையையும் நாட அஞ்சுகிறார்கள். இந்த நீதிப்பொறிமுறையிலும் பெண்கள் அச்சப்படும் புள்ளிகள் உள்ளன. நமது நீதிபரிபாலன சட்டங்கள் ஐரோப்பியரது. அதன் சில புள்ளிகள் பெண்களிற்கு பாதகமாக அமைந்தால் எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுவது பெண்களே. அல்லது உயர்ந்த சமூக மதிப்பீடுகளை கொண்டவர்கள் அந்ததுறையில் இருக்க வேண்டும். அண்மையில் கனடாவில் ஒரு பாலியல் துஷ்பிரயோக வழக்கு நடந்தது. அதை விசாரித்த நீதிபதி ரொபின் காம்ப் என்பவர் பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்தார். கால்களை ஒடுக்கி வைத்திருந்தால் ஏன் இந்த விபரீதம் நடக்கப்போகிறதென பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேள்வி வேறு கேட்டுள்ளார்.

புகழ்பெற்ற சட்டத்தரணி ஜி. ஜி. பொன்னம்பலம் பற்றியும் இப்படியொரு கதையுள்ளது. அது எவ்வளவு தூரம் உண்மைதெரியாது, ஆனால் ஊரில் பேசக்கேட்டுள்ளேன். பாலியல் வல்லுறவு வழக்கொன்றில் குற்றவாளிக்காக அவர் முன்னிலையாகினாராம். தனது வாதத்தின்போது ஒரு ஊசியை எடுத்து நூலை கோர்ப்பது பற்றி பேசினாராம். நூலை கொண்டு போகும்போது ஊசி சற்று நகர்ந்தால் கோர்க்க முடியாதல்லவா, அதனை உதாரணமாக காட்டி இருவரின் சம்மதமும் இருந்தால் மாத்திரமே ஆண் பெண் இணைவு சாத்தியம் எனவாதிட்டார் என பெரியவர்கள் பேசுவதுண்டு.

இப்படியான சமூக அமைப்பில் பெண்கள் அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பதை போலத்தான் வாழவேண்டியுள்ளது. பெண்களிற்கு எந்த பாதிப்புமில்லாத இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வதென்பது பற்றி சிறுவயதிலிருந்தே பெண்பிள்ளைகள் கற்பிக்கப்பட வேண்டும். பெண்கள் கல்வி அடிப்படையில் சில மாற்றங்களை காண வேண்டும். வெறும் பாடப்புத்தகத்தை பாடமாக்கி புள்ளிகளை அதிகம் பெறுவது மட்டுமே பெண்களிற்கு இந்த சமூகத்தில் பாதுகாப்பில்லை. ஒவ்வொரு காலடியை வைக்கும்போதும், ஏதோ ஒரு பொறி மறைந்துள்ளதென்ற எச்சரிக்கையுணர்வு பெண்களிற்கு அவசியமாகிறது. அண்மையில் நடந்து முடிந்த நல்லூர் திருவிழா சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த இரண்டு பெண்கள். 21, 23 வயதானவர்கள். ஒருவர் தாய் தந்தையரை இழந்தவர். நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, காரைநகரிலுள்ள ஒருவரின் அம்மம்மாவின் வீட்டிற்கு இருவரும் சென்றனர். இரவாகிவிட்டதால் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். முச்சக்கர வண்டிக்காரனும் இளைஞன். தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் வைத்து விட்டேன், போய் எடுத்துக்கொண்டு போவோம் என கூறியுள்ளான். இருவரும் சம்மதித்துள்ளனர். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் எப்படி தரிப்பிடத்தில் நின்று ஓட்டுகிறான் என்ற தர்க்கபூர்வ கேள்வியொன்றை எழுப்பவும் அவர்களால் முடியவில்லை. அவ்வளவு வெகுளிகள்.

அவன் முச்சக்கரவண்டியை கொண்டு சென்றது ஆளில்லாத ஒதுக்குப்புற வீடொன்றிற்கு. அங்கு இன்னுமொருவனும் இருந்துள்ளான். பெண்கள் இருவரையும் உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பித்து ஓடியுள்ளாள். அவள் நேராக பொலிசில் சென்று முறையிட்டுள்ளாள். உடனடியாக பொலிசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். பெண்ணும் அழைத்து வரப்பட்டார்.இதில் சம்பந்தப்பட்ட பெண்ணொருவர் தாய் தந்தையை இழந்தவர், மற்றையவரும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். யூஸ் உற்பத்தி நிறுவனமொன்றில் வேலை செய்பவர்கள். சமூகம் தொடர்பில் போதுமான விழிப்புணர்வு அவர்களிடம் இருக்கவில்லையென்பது புரிகிறது. வறுமையான, கல்வி அறிவு குறைந்த, பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகள்தான் அதிகமாக ஏமாற்றுக்காரர்களின் வலையில் வீழ்கிறார்கள். இவர்களை இலக்கு வைத்துதான் பெண்கள் அமைப்புக்கள் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இன்னொரு விடயம்- தாய், தந்தையரை இழந்த பெண்பிள்ளைகள் நம்மத்தியில் ஏராளம் பேர் உள்ளனர். அவர்களின் தொகை வடமாகாணசபை புள்ளிவிபரத்தில் நிச்சயம் இருக்காதென துணிந்து சொல்லலாம். அவர்களை கரம்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக கரையேற்றிவிடும் பெரும் பொறுப்பு தமிழ்தேசிய அரசியல்கட்சிகள், வடமாகாணசபைக்கு உள்ளது.

(தொடரும்)