மாபெரும் நாடக விழா!

223

யாழ்ப்பானம் நல்லூரில்,கடந்த 7ம் திகதிமுதல்21ம் திகதியான இரண்டு வாரகாலத்தில் தினசரி காட்சிகளாக நடைபெற்ற நாடக விழா, பெருமளவுக்கு மக்களை தன்பக்கம் ஈர்ப்பதில் பெருவெற்றியீட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசிய, தேசிய விருதுகள் பலவற்றை வென்றபல நாடகங்கள், தமிழ் சிங்களக் கலைஞர்கள் இணைந்து நடாத்திய நாடகங்கள், முக்கிய நாடக நெறியாளர்களால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள்,உலகப் புகழபெர்ற நாடகங்களின் மொழிபெயர்ப்பு நாடகங்கள், குறு நாடகங்கள் முதல், இரண்டரை மணி நேரம் வரை நீண்ட நாடகங்கள் என்று பலவிதமான நாடகங்கள் அங்கு அரங்கேறின.

இங்கு நடபெர்ற நாடங்களில் அதிகம் பேசப்பட்டதும், தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியே தயாரிக்கப்பட்டதுமான நாடகம், ‘காக்கேசியன் சோக் சேக்கிள்’ (Caucasian Chalk circle)  என்ற நாடகம். இந்த நாடகம் தமிழில் வெண்கட்டி வட்டம் என்றும் சிங்களத்தில் ஹணு வட்டய  என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. பெர்ட்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) என்ற உலகப் புகழ் பெற்ற ஜேர்மன் நாடகாசிரியரால் 1944 இல் எழுதப்பட்ட இந்த நாடகம் இன்றும் எமது சூழலுக்குப் பொருந்தி வருவதால், அதன் பிரதிச் சிறப்புக்கு மேலாக எமது மக்களை பெருமளவில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தது ஆச்சரியமில்லை. இந்த நாடகம் இரு மொழிகளிலும் திருமபத்திரும்ப பெருந்திரளான பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். இந்த நாடகங்களைப் பார்த்த தீபம் வாசகர் ஒருவர், வெண்கட்டி வட்டம் பற்றி எழுதி அனுப்பியிருந்த குறிப்பை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்:

வெண்கட்டி வட்டம் நாடகம்: ஒரு பார்வை
‘வெண்கட்டி வட்டம்’ நாடகம் இது நாடக உலகின் ஓர் மைக்கல். ஜேர்மனிய மொழியில் பேர்டோல் பிறெக்ட்டின் ‘காக்கேசிய சோக் சேர்க்கள்’ என்னும் பெயரில் உருவாக்கபட்ட இந் நாடகம்  தமிழில் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் வெண்கட்டி வட்டம் என்னும் பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தலைசிறந்த நாடகவியலாளரான பராக்கிரம நிரியெல்ல மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் கதிரேசு இரதிதரன் ஆகியோரின் இணைந்த நெறியாள்கையில் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் சேர்ந்து கலைவடிவமாக உருவாக்கியுள்ளனர். ஓர் மொழி பெயர்ப்பு நாடகமாக இருந்தபோதிலும் மக்களின் உரிமையை தன் கதைக் கருவாக கொண்டு விளங்குவதினால் களரி அரங்கத்தில் அமர்ந்திருக்கின்ற எந்த இனத்தவரையும் தள்னுள் ஈர்த்து விடுகின்ற தன்மை இந் நாடகத்திற்கு உண்டு. இந்த உண்மை, நீங்கள் களரி அரங்கத்தில் இருந்து நாடகத்தை பார்க்கின்ற போதே புலப்பட்டுவிடும்.

அந்த நாட்டின் இரு பிரதேசங்களுக்கு இடையில் நடக்கும் நில உரிமைப்போராட்டம். நிலத்திற்கான போராட்டத்தின் போது மக்களின் வாழ்வியல், அல்லது யுத்தம் ஒன்று ஓர் நாட்டில் அல்லது இரு இனத்தவர்களிடையே மூழுகின்ற போது மக்கள் படுகின்ற சொல்லொணாத் துயர்கள், அவர்களுடைய மன நிலைகள் மிக நுணுக்கமான முறையிலும் யதார்த்தமாகவும் இந்த நாடகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.

பாத்திரங்களின் தேர்வு இன்னும் இந் நாடகத்திற்கு ஓர் வலுவூட்டலாவே அமைகின்றது ஒவ்வொரு பாத்திரமும் அரங்கத்தில் வாழ்கின்றது மெய்யுணர்வு தான் அங்கு வெளிக்காட்டப்பட்டதே தவிர நடிப்பு அங்கு வெளிக்காட்டப்படவில்லை.  காதல் ஓர் உன்னதமான உணர்வு என்பார்கள் போர்மூண்ட நேரத்திலும் இருவருக்கு இடையிலான காதல் போராட்டம் மனதை உருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். காதல் நகைகளும் சரி, போர்களத்திற்கு அவன் போய்த்தான் ஆகவேண்டும் என்கின்ற போது இரு உள்ளங்களுக் கிடையிலான புலம்பலும் சரி, மிக அழகுச்சுவை நிறைந்ததாகவும் உள்ளக்கிடக்கைகளின் ஆழம் வெளிப்படும் வகையிலும் காட்சிகள் புலப்படுப்
படுத்தப்பட்டிருக்கும். இடையிடையே ஈற்றடியின்மையான வாக்கியங்கள் பிரயோகிக்ககப்பட்டாலும் அது காதலின் ஆசை வார்த்தைகளே தவிர அங்கு ஆபாசம் வெளிப்படவில்லை. இசை நாடக்தோடு இசையும் தன்மை நாடகத்தை பார்கின்ற பார்வையாளர்களை தன்னத்தே இழுத்துவிடுகின்றது. களரி அரங்கில் ஒளி அமைப்பு பாத்திரங்களின் உணர்வு வெளிக்ககாட்டல்களை மிக துல்லியமாக அரங்கப் பார்வையாளர்களிடம் நாடகத்தை எடுத்துச் சென்றுவிடுகின்றது.

வெண்கட்டி வட்டம், ஏன் இந்நாடகத்திற்கு வெண்கட்டி வட்டம் என்ற பெயர் என்று எல்லோர் மனதிலும் எழும் எழுகின்ற கேள்விக்கு விடையளிகின்றது இறுதியில் நாடகம் தீர்க்க முடியாத வழக்குக்கு வெண்கட்டி வட்டமே இறுதில் தீர்வுகாணுகின்றது. இரண்டரை மணித்துளிகள்  பார்வையாளர்களை தன்வசம் இழுத்து வைத்திருக்கும் வகையில் இந் நாடகம் உருவாக்கப்பட்டிருக்கும். ஆக மொத்தம் ஓர் கலைவடிவம் எவ்வாறு இருந்தால் பார்வையர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வகையிலே அமைந்திருக்கின்றது வெண்கட்டி வட்டம்  நாடகம்.