அரசாங்கம் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்!

110

ரசாங்கம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது, அரசியல் தீர்வுமுயற்சிகளில் ஈடுபடுவது, அது முக்கியமானதென்றாலும், பயனற்ற ஒரு விளைவாகப் போகலாம் என்றும், அத்தகைய ஒரு தீர்வு கொலம்பியாவின் மக்களால் நிராகரிக்கப்பட்டது போல இங்கும் மக்களால் நிராகரிக்கப்படலாம் என்றும் அண்மையில் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்திருக்கிறார் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா. அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான அறிவூட்டல் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் நடாத்திவரும் இவரது அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:

‘எழுக தமிழ் நிகழ்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் யாழ்ப்பானம் போயிருந்தேன். நான், அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு அறிவூட்டல் கலந்துரையாடலை ஒழுங்கு செய்வது தொடர்பாக,யாழ் பல்கலைக் கழக  துறைகளுக்கான பீடங்களின் உறுப்பினர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அவர்கள் இந்த எழுக தமிழ் நிகழ்வை ஒழுங்கு செய்வ்தில் உதவுவதில் மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்தனர். நான் சிவில் சமூக உறுப்பினர்களை சந்திக்கவே இங்கு வந்திருந்தேன். ஆனால் அவர்களும் கூட இந்த வேலைகளுக்கு தீவிர ஆதரவாளர்களாக இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அவர்களில் ஒருவர் எனக்கு ஒரு வரைபடத்தைக் காட்டினார். அதில், பலாலி விமான நிலையத்துக்கு அருகாமையில் இராணுவத்தால் எடுக்கப்பட்ட சில காணிகளைக் காட்டினார். அதன் பிறகு, அவர் என்னை அந்த இடத்துக்கு அதைக் காட்டுவதற்காகக் கூட்டிச் சென்றார். அந்த நிலங்கள், இராணுவத்தினரால் மக்களுக்கு திரும்ப கையளிக்கப்பட்ட நிலங்கள். ஆனால், விமான நிலையத்துக்கு நீண்ட தூரத்துக்கு அப்பால், இன்னமும் மிகப்பெரிய ஒரு இராணுவ முகாமும், அதற்கான விளையாட்டுத் திடலும், சில மரக்கறி மற்றும் பழமரங்களைக் கொண்ட தோட்டமும் இருந்தது. இராணுவத்தினர் இதுவிவசாயத் திணக்களத்துக்கு சொந்தமான நிலம் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்குக் காட்டப்பட்ட வரைபடத்தில், பெருமளவான குடிமனைகள் ஒரு காலத்தில் அவ்விடத்தில் இருந்திருப்பது காட்டப்பட்டுள்ளது. (வரைபடத்தை பார்க்க)


எனக்கு என்ன விளங்கியதென்றால் அங்கு இருப்பவர்கள் தமிழர்களையோ சிங்களவர்களையோ எதிர்ப்பவர்கள் அல்ல. அவர்கள், தெற்கிலிருந்து அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை செய்ய வந்துள்ள என்னுடன் சேர்ந்து கூட்டாக அதை செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால் அதே வேளை, அவர்கள், தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு நான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அதை உடனடியாகச் செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டியது. வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள்தான், இறுதிக்கட்ட யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள், தமது உறவுகளை இழந்த,தமது நிலங்களை இழந்த,தமது வாழ்வாதாரத்தை இழந்த,தமது அயலவர்களை இழந்த மக்கள். அவர்களால் பொறுமையுடன் காத்திருக்க முடியாது. அவர்கள் தமது பிரச்சினைகள் நேற்றுத் தீர்க்கப்படவில்லை என்றால், இப்போது தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை, யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்களுக்கு இத்தகைய அவசரம் இல்லை வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள இவர்களால், 60 வருடப் பிரச்சினையை அவ்வளவு விரைவாக தீர்த்துவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியும். அரசியல் தீர்வு காலமெடுக்கும் ஒரு விடயம் பல தலைவர்கள் முயன்றும் முடிக்க முடியாத ஒரு பிரச்சினையாக இருப்பது இது. அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுக்கு வந்தடைய நீண்ட காலம் எடுக்கலாம்.

அதே வேளை தலைவர்கள் தமது தீர்வுக்காக மக்களைக் கல்வியூட்டுவதும் அவசியம். அப்போதுதான் ஒரு தீர்வு மக்களால் சர்வதேச வாக்கெடுப்பொன்றில் ஏற்றுக்கொள்ளப்படும். அண்மையில் கொலம்பியாவில், அரசாங்கத்துக்கும், ஃபார்க் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் நடந்த உடன்பாட்டு ஒப்பந்ததை, சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலை இலங்கையிலும் வரக்கூடும். ஆகவே அனைவரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் தீர்வு பற்றிய உரையாடல்கள் அவசியம். இந்த நிலையை கொண்டுவர நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் அதுவரை பாதிக்கப்பட்ட மக்களை காத்திருக்க வைக்க முடியாது.

ஆகவே இத்தகைய ஒரு நிலையில், அரசாங்கம் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். நிலங்களை விடுவிப்பது, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது, வடக்குக் கிழக்கை இராணுவமயமாக்கியுள்ள நிலையை இல்லாமலாக்குவது, காணாமல் போனவர்களைக் கண்டடைவது என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். செய்யும் வேலைகளை துரிதமாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில், நம்பிக்கையையும், நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியும்.இவ்வாறு அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.