“எந்தப் படமானாலும் அதை இலாபம் தரக்கூடிய வகையில் தயாரிக்க முடியும்!”

133

‘Waiting for summer ‘ திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் செந்தில் வினு அவர்கள் தீபத்திற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது. 2012ம் ஆண்டு Canadian Film Fest இல் வெளியான Waiting for summer திரைப்படம் Film North – Huntsville International Film Festival இல் ‘2012 ‘2012 Film North Best Feature Award’ என்ற விருதைப் பெற்றது. தமிழகத்திலிருந்து வந்த செந்தில் வினு தற்போது ரொறொன்ரோவில் வசித்து வருகிறார். இந்தப் பேட்டியின்போது ஒரு டைரக்டராக, தயாரிப்பாளராக செந்தில் வினு சொன்ன பல ஆங்கில வார்த்தைகளையும், டெக்கனிக்கல் சமாச்சாரங்களையும் வடிகட்டிக் குறைத்துத்தான் பேட்டியைத் தந்திருக்கிறேன். Waiting for summer படத்தை 2016 அக்டோபர் 21 அன்று மீண்டும் யோர்க் சினிமாவில் திரையிடப்போகிறார் செந்தில் வினு என்பது போனஸ் செய்தி. – கனடா மூர்த்தி

கேள்வி: உங்கள் ‘Waiting for summer’ படம் 2012இல் முதன்முதலாக திரையிடப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து இந்த வாரம்தான் ‘தமிழ் மக்களுக்காக’ இதைத் திரையிட்டீர்கள். ஏன் இந்தத் தாமதம்?

செந்தில் வினு:  இந்த ஆங்கில மொழிப் படத்தை எடுத்த பின் எனது மற்றைய படத் தயாரிப்பு திட்டங்களைக் கவனித்ததுதான் இந்தத் தாமதத்திற்குக் காரணம்! 2012ல் படம் திரையிடப்பட்டதிலிருந்து வேறு பணிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருந்தன. அடுத்ததாக நான் ஈடுபடவிருக்கும் படங்களிற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. மற்றைய பல தயாரிப்பாளர்களின் படங்களுக்கு ஆலோசகராக பணியாற்ற வேண்டியிருந்தது. தனிநாயகம் அடிகளாரைக் குறித்த ஆவணப்படம் ஒன்றை கனேடியத் தமிழர் பேரவைக்காக இயக்கித் தர வேண்டியிருந்தது. இப்படி இன்னும் பல. இந்த வேலைப்பளுவின் மத்தியில் இந்தப் படத்தை திரையிடுவதற்கு நான் பலமுறை நினைத்தும் சந்தர்ப்பம் ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இப்போது – அடுத்து வரப்போகும் வேலைகளில் பிஸியாகுமுன்னர் – கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டாக இருக்கிறேன். இந்த இடைவெளிக் காலத்தை பயன்படுத்தித்தான் இப்போது படத்தை திரையிட்டோம். உண்மையில் என் தமிழ் மக்களோடு என் படைப்பைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற சிறிய நெருடல் என் மனதில் இந்த நான்கு வருடங்களும் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருந்தது. மேலும் சமீபத்தில் நடந்த ‘தமிழர் தெருவிழா’வில் எனது அங்காடிக்கு வந்த பலரும் இப்படம் குறித்துக் கேள்வியுற்று அதிசயித்துப் போய் படத்தை பார்க்க ஆவலும் தெரிவித்தனர். அதுவும் இப்போது இதைத் திரையிட இன்னுமொரு காரணம்.

கேள்வி: என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்திற்கு ஊடகத்துறையில் இருந்து மட்டுமே குறிப்பிட்டவர்கள் அழைக்
கப்பட்டிருந்தார்கள். அப்படி வந்தவர்கள் சினிமாவுடன் ஏதோ ஒருவகையில் நெருக்கமானவர்கள். அவர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை உங்கள் படம் பெற்றுக் கொண்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

செந்தில் வினு: (குறுக்கிடுகிறார்) ஆம். நன்றி. ஆனால் திரையிட்டதன் மூலம் ரொறன்ரோவின் தமிழ் ஊடகவியாலளர்கள் பலரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். ரொறன்ரோவில் வாழும் ஒரு தமிழனால் ஒரு ஆங்கிலப்படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க முடியும் என்பதை பலரும் கவனித்தார்கள். இந்த படத்தை தமிழ் ஆடியன்ஸ்பார்ப்பார்களா? இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் முறை, கதை சொல்லப்பட்டிருக்கும் பாணி என்பன தமிழ் சமூகத்திற்கு உவப்பானதாக இருக்குமா என்ற கேள்விகளும் இந்தத் திரையிடலுக்கு முன்னர் இருந்தது. அதைக்குறித்த புரிதலும் இந்த திரையிடல் மூலம் ஏற்பட்டது.

கேள்வி: ஆனால் சினிமாத்துறையில் ஆர்வம் கொண்ட பலரை நீங்கள் அழைக்கவில்லை என்று பலரும் குறைப்பட்டிருக்கிறார்கள். உங்களால் அழைக்கப்படாதவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

செந்தில் வினு: அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். ஒரு ஊடக சந்திப்பு எனும் அளவில்தான் இந்த திரையிடல் இருந்தது. அழைக்கப்பட்ட பலரும் எனக்கு நன்கு தெரிந்தவர்களே. இந்த திரையிடல் குறித்த முகப்புத்தகப் பகிர்வுகளை பார்த்த பலரும் தங்களை ஏன் அழைக்கவில்லையே என உரிமையுடன் கோபம் கொண்டு எனக்கு உள்பெட்டித் தகவல் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.  இந்தத் திரையிடுதல் ஊடகவியலாளர்களுக்காக என ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பின் மற்றவர்களுக்கான திரையிடுதலை 2016 அக்டோபர் 21 யோர்க் சினிமாவில் ஏற்பாடு செய்திருக்கிறேன்.அவை ஒருபுறமிருக்க, நண்பர்களில் பலரும் இப்படத்தை எம்மவரின் இரண்டாம் தலைமுறையினர் ரசித்துப் பார்ப்பார்கள் எனவும் இப்போது சொல்கிறார்கள். ஆகவே மற்ற எல்லாரையும் ஆகஸ்ட் 21 ந் திகதி அன்புடன் அழைக்கிறேன்.

கேள்வி: அவசியம் திரையிடுங்கள் இப்படியாக ஆங்கிலப் படம் எடுப்பது வியாபார ரீதியில் ஒரு இலாபகரமான முயற்சியா? இன்னும் நேரடியாகவே கேட்டால் ஆங்கிலப் படம் ஒன்றை நீங்கள் எடுத்தது ஆர்வம் காரணமாகவா அல்லது பணம் பண்ணவா?

செந்தில் வினு: சினிமா எடுப்பது மற்றை வியாபரங்களில் இருந்து கொஞ்சம் மாறுபடக் கூடியது. ஆர்வமில்லாமல் இதை யாரும் செய்ய முடியாது. அதேபோல பணம் வரவேண்டும் என்றுதான் தயாரிப்பாளர் நினைப்பார். எந்தப் படமானாலும் அதை இலாபம் தரக்கூடிய வகையில் தயாரிக்க முடியும் என நம்புபவள் நான். அப்படியே என் திட்டங்களையும் அமைக்கிறேன். இலாபம் வரும் என்று தெரிந்தால் மட்டுமே அந்தப்படங்களை தயாரிககவோ அல்லது டைரக்ட் செய்யவோ முனைவேன்.

கேள்வி: தயாரிப்பாளர் பணத்தை இழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. அதன் ரகசியம் என்ன?

செந்தில் வினு: ரகசியமா? அப்படி எதுவுமில்லை. எந்தப்படத்திற்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பதை கணிப்பது ஒரு தனிக் கலை. அதை கரெக்டாகப் பண்ண வேண்டும். மூன்று மில்லியனிலேயே முடிக்கக் கூடிய ஒரு படத்தை ஐந்து மில்லியனுக்கான பட்ஜெட் போடக்கூடாது. நீங்கள் எந்தக் கதையை படமாக எடுக்க நினைகிறீர்களோ அந்தக் கதையை எப்படி படமாக்கினால் செலவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். எடுக்கப்படும் படத்திற்கு ஏற்ற முறைகளால் விநியோகத் திட்டங்களை வகுக்க வேண்டும். இவை ஒன்றும் பெரும் ரகசியமும் அல்ல. எல்லாருக்கும் தெரிந்த விடயம்தான். கனடாவில் ஒரு படத்தை வியாபாரம் செய்து பணத்தை மீளப்பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு Video on Demand, Pay Cable , Streaming on Demand, (iTune, Amazon) என பல முறைகளால் உங்கள் படத்தை விற்று பணம் பண்ணலாம். உள்ளூர் சந்தையில் வியாபரம் பண்ணலாம். அதேபோல வெளிநாட்டுகளிலும் மார்க்கட் பண்ணலாம்.

கேள்வி: வெளிநாடுகள் என்று எதைச் சொல்கிறீர்கள்?

செந்தில் வினு: கனடா திரைப்பட உலகைப் பொறுத்தவரை பல வெளிநாட்டு வியாபாரச் சந்தைகள் உள்ளன. ஆங்கிலம் பேசும் நாடுகளின் சந்தை, லத்தின் மொழிச் சந்தை, சீன மொழிக்கான சந்தை, ஜப்பானின் சந்தை, தென் ஆசியாவின் சந்தை, தென்கிழக்கு ஆசியாவின் சந்தை என பல சந்தைகளுக்கும் உங்கள் படம் வியாபாரமாகலாம்.

கேள்வி: படவிழாக்களுக்கு அனுப்பி இலாபம் பெற முடியுமா?

செந்தில் வினு: பொதுவாக படவிழாக்களில் உங்கள் படத்தை திரையிடுவது நல்லதொரு அங்கீகாரத்தை படத்திற்கு நிச்சயம் தரும். படத்தை பெரிய அளவில் பிரபலப்படுத்தவும் அது உதவுகிறது. இவை மட்டும்தான் படவிழாக்களினால் வரும் இலாபம் என்பதும் இல்லை. ஒவ்வொரு படவிழாவிற்குப் பின்னாலும் ஒரு வியாபாரச்சந்தையும் உள்ளது. உதாரணத்திற்கு பிரான்ஸின் கான் பெஸ்ரிவலை எடுத்தீர்களானால் அங்கு திரையிடப்படடும் படங்களை வாங்குவதிற்கு ஒரு பெரும் ஆர்வலர் கூட்டமே இருக்கிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பட விநியோகஸ்தர்கள் அந்த விழாவிற்கு வருவார்கள். படவிழாவில் திரையிடப்படும் உங்கள் படம் வியாபாரத்திற்கு ஏற்றதாக அமையும் பட்சத்தில் நீங்கள் கலந்து கொள்ளும் படவிழாவே உங்கள் படத்தை வெற்றிகரமாக விற்க உதவி செய்வதும் உண்டு.

கேள்வி: புரிகிறது. உங்கள் Waiting for summer படத்தை எப்படி வியாபரம் செய்தீர்கள்?

செந்தில் வினு: இந்தப் படம் எந்த வகைளான பார்வையாளர்ளை ஈர்க்கும் என்பதை எமது மார்கெட்டிங் குழு முதலில் ஆராய்ந்தது. Waiting for summer படம் அர்த்தமுள்ள படங்களைப்பார்ப்பவர்களைத்தான் பெருமளவில் கவரும் என்றே முடிவு கிட்டியது. அப்படிப்பட்டவர்களுக்கான படங்களைக் கொள்முதல் செய்யும் பல விநியோகஸ்தர்களை அணுகினோம். இந்தப் படத்தை கனேடியப் படங்களை வட அமெரிக்காவில் விநியோகிக்கும் Atlas Grove என்ற வியாபார வாங்கிக் கொண்டது. Super Channel, Rogers Video on Demand போன்றவவை அவர்களிடம் இருந்தே படத்தைத் திரையிடும் உரிமையைப் பெற்றுக் கொண்டன. வட அமெரிக்க தியேட்டர் ரிலீஸக்கான உரிமையை மட்டும் நான் வைத்துக் கொண்டேன். இது போல இன்னும் சில விநியோக நிறுவனங்களோடும் எமது மார்கெட்டிங் குழு இணைந்து கொண்டது.

கேள்வி: வேறு படங்கள் எடுக்கும் திட்டம் உண்டா?

செந்தில் வினு: உண்டு. அடுத்த மூன்று படங்களுக்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.’Camal’, ‘ Happy Birthday Anna’, ‘Zombie Guru’ என மூன்று வகையான படங்களின் வேலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மூன்று படங்களும் மூன்று வகையான படங்கள். அந்தந்த வகைக்குரிய மார்க்கெட்களை மனதில் வைத்து அவற்றிற்கான திரைக்கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி: தமிழ் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லையா?

செந்தில் வினு: இல்லாமலா…?! இரண்டு பட முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி: கொஞ்சம் பொறுங்கள்… மூன்று ஆங்கிலப் படங்கள்… இரண்டு தமிழ்ப் படங்கள்… இந்த ஐந்து படங்களிலும் எந்தப் படத்தில் தற்போது உங்கள் கவனம் இருக்கிறது? எதை முதலில் தரப் போகிறீர்கள்?

செந்தில் வினு: (சிரிக்கிறார்) இந்த ஐந்து படங்களுக்காகவம் நான் ஏற்கனவே உழைத்துவிட்டேன். பலவருடங்கள் இந்த ஐந்து படங்களுக்காகவும் செலவு செய்தாயிற்று. எனது ஸ்கிரிப்ட் ரைட்டரும் நானும் கடுமையாக உழைத்து, முற்றுமுழுதாக திரைக்கதை முதல்கொண்டு வியாபர வழி முறைகள் வரை அனைத்தும் திட்டமிடப்பட்டும் விட்டது. அடுந்த நிலைக்கு ஐந்துமே தயார். அதே சமயம் no success without the right team!நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் என்பன இப்போது நடக்கின்றன. ஐந்தில் எது முந்திக் கொள்ளும் என்பதை கூடிய விரைவில் அறியத் தருவேன்.

கேள்வி: கனடாவில் நம்மவர்களில் பலரும் திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் இணைத்துக் கொள்வீர்களா?

செந்தில் வினு: நிச்சயமாக… ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கிரியேட்டிவ் ஆர்வம் வேறு.. தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது வேறு. படத்தயாரிப்பு என்பது மிகவும் செலவு மிக்க விடயம். ஆர்வம் கொள்வது வேறு, வேலை செய்து முடிப்பது வேறு… திரைப்பட உருவாக்கப் பயணத்தில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்தான் படத்தயாரிப்புக் குழுக்களில் இணைய முடியும். ஒரு வகையில் படத்தயாரிப்பு என்பது இராணுவ போர் முறை போல இருக்கும். குறுகிய நேரத்தில் கடுமையான வேலை செய்ய வேண்டியிருக்கும். பெரும் அழுத்தம் நிறைந்த பணி இது. அழுத்தங்களை ஏற்க முடிந்தவர்கள்தான் தயாரிப்புக்களோடு ஒத்து ஓட முடியும். சமீபத்தில் நடந்த ‘தமிழ்த் தெரு விழா’வின்போது எனது படத்தயாரிப்பு கூடாரத்திற்கு பலரும் வந்து பதிவு செய்து போனார்கள். அவர்களில் சிலர் என் தயாரிப்புப் பயணத்தில் இணையக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு படத்தயாரிப்பு சம்பந்தமான ஆலோசனைகள் தர என்றும் ஆர்வமாயிருக்கிறேன்.