‘சீக்கா’ வைரஸ் நோயும் அதன் ஆபத்தான விளைவுகளும்!

சீக்கா வைரஸ் நோய், MDJ Aedes எனும் நுளம்பு நம்மைக் கடிக்கும் போது அதற்குள் இருக்கும் இந்த வைரஸ் நம் இரத்தத்தோடு கலப்பதால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் உடலில் சேரும் பொழுது  முதலில் காய்ச்சல் ஏற்படும்.  அதோடு கூட தோல் வெடிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல் சோர்வு அல்லது தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் (mild fever, skin rash, conjunctivitis, muscle and joint pain, malaise or headache ). இந்த அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்களுக்கு நீடிக்கும்.

முதன் முதலில் இந்த சீக்கா வைரஸ் 1947இல் உகண்டாவில், அதுவும் குரங்களில் காணப்பட்டது. பின்பு மனிதர்களிடையே 1952களில் உகண்டாவிலும் ரன்சானியாவிலும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வைரஸின் தாக்குதல் ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, மற்றும் பசுபிக் இடங்களுக்கும் பரவியது. அப்படியே 1960 முதல் 1980 வரையில் ஆபிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் தொற்றத் தொடங்கியது. 2007இல் முதலாவது பரவலான பெரிய வைரஸ் தாக்கம் யப் என்ற தீவில் (Island of Yap – Federated status of Micronesia) ஏற்பட்டது. இதேபோன்ற இன்னுமொரு சீக்கா வைரஸ் தாக்கம், ஜுலை மாதம் 2015இல் பிரேசிலில் ஏற்பட்டது.

விரிவான ஆய்வின் பின் கிடைத்த ஆதாரங்களின் படி இந்த சீக்கா வைரஸினால் வெறும் காய்ச்சல் மட்டுமல்லாது பல
சிக்கலான பின்விளைவுகள் (microcephaly and Guillain – Barre syndrome) கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான ஆய்வின் முடிவுகள் இந்த வைரஸினால் நரம்பியல் கோளாறுகளும் ஏற்படும் என சொல்லப்படுகிறது.சீக்கா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடிஸ் பேரின நுளம்பானது மற்றவர்களைக் கடிக்கும் போது இந்த வைரஸ் காவப்படுகிறது. இந்த வகை நுளம்பானது அதிகாலையிலும் மற்றும் மதிய நேரங்களிலுமே அதிகமாகத் தாக்கும். டெங்கு, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் (dengue, chikungunya and yellow fever) போன்ற இந்த தொற்று வியாதிகளையும் இந்த வகை நுளம்பே பரப்புகிறது. பாலுறவின் போதும், குருதி மாற்றீட்டின் போதும் இந்த வைரஸ் தொற்றிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸினால் ஏற்படும் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போலவே இருப்பதினால், காய்ச்சலின் அறிகுறிகளை வைத்து இது சீக்கா வைரஸ் தானா என்று கண்டறிய முடியாது. காய்ச்சல் உள்ளவரின் இரத்தத்தையோ, சிறுநீரையோ, எச்சிலையோ அல்லது விந்துக்களை ஆய்வுகூடத்தில் பரிசோதித்து பார்பதன் மூலமே இந்த வைரஸ் உள்ளதா என்று அறிய முடியும்.

இப்பொழுது, உலக அளவில் சீக்கா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய பிராந்தியங்களில் இருநூறு கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்வதாக இது குறித்த புதிய ஆய்வின் முடிவு எச்சரிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அதிகபட்ச ஆபத்தை எதிர்நோக்குவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சீக்காவின் பெருந் தொற்றைத் தடுப்பதும், கண்டறிவதும், எதிர்கொள்வதும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சீக்கா ஏற்கனவே உலக சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஒலிம்பிக் போட்டிகளையே அது நிறுத்திவிடும் அச்சுறுத்தல் நிலவியது. ஆனாலும் இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகளால் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை. அதை கண்டறிந்தால்தான், அந்நோய்ப் பரவலை எதிர்கொள்ளத் தயாராக முடியும். பல குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைபாடுடன் பிறந்ததற்கு சீக்கா தொற்றே காரணமாக காட்டப்படுகிறது. இதுவரை இதன் பிரதான தாக்கம் பிரேஸிலில் மட்டுமே இருந்தது. ஆனால் சமீபத்தில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இது பரவியுள்ளது.

கடந்த மாதம் சிங்கப்பூரில் பலருக்குச் சீக்கா தொற்று ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அதன் பரவலைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. சீக்கா பரவல் தொடர்பான இந்த புதிய ஆய்வின் கணிப்புகள் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. சீக்கா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கை, சீக்கா வைரஸைப் பரப்பக்கூடிய கொசுக்கள் இந்த நாடுகளில் ஏற்கனவே இருப்பது, சீக்காத் தொற்றை எதிர்கொள்ளத் தேவைப்படும் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் என்பனவே அவையாகும். சீக்கா வைரஸால் உருவாகக்கூடிய சுகாதார ஆபத்தின் முழு அளவு இன்னமும் வெளியாகவில்லை. பிரேஸிலில் நடந்ததைப்போல் சீக்கா பெருந் தொற்றாகப் பரவும் ஆபத்து நீடிக்கிறது என்பது மட்டும் இப்போதைக்கு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மக்களிடையே இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதாமல் இருக்கிறது. முக்கியமாக வைரஸ் உள்ள நுளம்பின் கடியில் இருந்து தப்புவதே பிரதானமாகும். இதற்காக உடலைக் கூடியளவு மறைக்கும் வண்ணம் உடைகள் அணிவது, வீட்டில் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பது, நுளம்பு வலைக்குள் நித்திரை கொள்வது, நுளம்புகளை விரட்டக் கூடிய கொசு விரட்டிகளைப் பாவிப்பது போன்றவையாகும். முக்கியமாக நுளம்பு முடடையிட்டு விருத்தியடையாதபடி வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எப்பொழுதும் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.

கனடாவைப் பொறுத்தவரை இவ்விதமான நுளம்புகளால் வைரஸ் பரவுவது கடினமான விடயமாகும். இதற்கு காரணம் கனடாவின் காலநிலை தான். ஆனாலும் சீக்கா வைரஸ் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். முக்கியமாகக் கர்ப்பிணிப் பெண்களும் தாயாக விரும்பும் பெண்களும் இந்த நாடுகளுக்குச் செல்லாது இருப்பது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் போது, இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றுமானால், தொற்று ஏற்பட்ட பெண்கள் மட்டும் அல்ல அவர்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சீக்கா வைரசிற்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கனடியர்களுக்கு அதிக ஆபத்து இல்லாவிட்டாலும் நம் உறவுகளும் நண்பர்களும் வாழும் நாடுகளில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.