குழந்தைப் போராளி – 28

79

டிபட்டதில் ஒரு கண் வீங்கி மூடிக்கொண்டது. அது என்னைக் கவலைப்பட வைத்தது எப்போதுமே அடிகள் விழும்போது என் கண்களைப் பாதுகாப்பதில் நான் மிகக் கவனமாயிருப்பேன். எனது சட்டையில் ஒரு துண்டைக் கிழித்தெடுத்து முகத்தில் வடிந்த இரத்தத்தில் நனைத்துக் கண்ணில் கட்டிக் கொண்டேன். இது என் கண்ணைத் திறக்க உதவுமென நம்பினேன். விலாப் பகுதியில் வலி எடுத்ததால் பயந்து அலறினேன். அப்பா ஒடி வந்து என்னைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். “கடவுளே” எனக் கூவிக்கொண்டே எனது உடைகளைக் களையச் சொன்னார். என்னைக் குளியலறைக்குக் கூட்டிச் சென்று சுடுநீரால் என் இரத்தத்தைக் கழுவினார். அவரது முகத்தில் கவலையைக் கண்டதும் தான் விலாப்பகுதியில் வலியெடுப்பது பற்றிக் கூற எனக்குத் தைரியம் வந்தது. எனது உடல் முழுவதும் கன்றிப் போயிருந்தது. நாளை என்னை அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அங்கு என்னைக் கேள்வி கேட்டால் எப்படிப் பதில் கூற வேண்டுமென்றும் சொல்லித் தந்தார். இந்த முறை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டேனென்று சொல்ல வேண்டுமாம். பின்பு நாங்கள் கடைக்குச் சென்று எனக்குப் புதிய சப்பாத்துக்கள் வாங்கலாமாம்.

இரவு முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன். அந்த இரவில் அடி உதைகளை நினைத்து நான் அழவில்லை. அப்பாவின் அன்பான வார்த்தைகளை நினைத்து, என்றுமே இல்லாதவாறு என் மீது பரிவு காட்டியதை நினைத்து அழுதேன். அழுதுகொண்டே தூங்கிப்போனேன்.

நான் தூக்கம் கலைந்து எழுந்தபோது உடல் முழுவதும் வலித்தது. எழ முயற்சித்தேன், ஆனால் என்னால் அசையவே முடியவில்லை. அப்பா வந்து எனது நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். வெளியே போனவர் சிறிது நேரத்தில் ஒரு வைத்தியருடன் திரும்பி வந்தார். வைத்தியர் என்னைப் பரிசோதித்து விட்டு உடைந்து போன விலா எலும்புகளைச் சரிப்படுத்த என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சொன்னார். அப்பா வைத்தியரை யோசனையுடன் பார்த்தார். பின்பு ஆஸ்பத்திரியில் என்ன சொல்ல வேண்டுமெனக் கேட்டார்.

“இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழியுண்டு, ஆனால் அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும்”
“எவ்வளவு செலவாகும்?”
“நிலைமை மோசமாய் இருப்பதால் என்னால் எவ்வளவு என்று சொல்ல முடியாது, ஆனால் என் நண்பனொருவன் அங்கு வேலை செய்கின்றான், அவனால் இந்தச் சிறுமியை மீண்டும் சரியாக்க முடியும்.”

நான் குணமடைந்த பின்பு அப்பா என்னைக் கடைக்கு அழைத்துச் சென்றார். என் வாழ்வில் முதன் முறையாக என்னால் சந்தோசத்தைத் தாங்க முடியாது போயிற்று. அப்பா கை நிறைய மிட்டாய்களை வாங்கித் தந்தார். எனது சந்தோசம் நீடிக்கவில்லை. அப்பா போனதும் சிற்றன்னை என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்தி மிட்டாய்களைச் சாப்பிட்டு முடிக்காமல் வீட்டுக்குத் திரும்பி வரவேண்டாமெனக் கட்டளையிட்டார். மாஹி சொன்னது தான் நினைவுக்கு வந்தது “இந்தப் பெண் தனது வெறுப்பைத் தனது சவக்குளி வரை எடுத்துச் செல்வாள்”ஒரு கடினமான இதயம் எனது ஓடிப்போன ஒவ்வொரு சகோதரியும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது ஏதோ ஒரு வகையில் தங்கள் துன்பங்களைச் சுமந்தே வந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. எப்போதாவது ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒவ்வொரு முறையும் ஒருத்தி வரும்போது ‘ இவள் இம்முறை என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வாள்’ என நம்பினேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் எவ்வளவு சிரமங்களை வெளியே அனுபவிக்கிறார்கள் என என்னிடம் சொல்வார்கள்.

ஆனால் அப்பாவிடமோ சிற்றன்னையிடமோ எதுவும் சொல்ல மாட்டார்கள். எந்த விதத்திலும் அவர்களது வாழ்க்கை சிரமானதெனக் காட்டிகொள்ள அவர்கள் விரும்பவேயில்லை. தாங்கள் வெளியே சந்தோசமாக இருப்பது போல நடிப்பார்கள். ஏதோ உண்மையும் அது போலத்தான் என்றிருக்கும். அப்பாவோ மடையன் போல அவர்களை நம்பினார். நான் எனது சகோதரிகளில் ஒருத்தி வந்து என்னை விடுவித்துச் செல்வாளென்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த காலங்களுக்குக் கணக்கில்லை.

அப்பாவின் நண்பரின் வீட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த நான் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்தேன். எனது மூத்த சகோதரி ஹெலன் ஒரு நீல நிறக் காரிலிருந்து இறங்கினாள். ஹெலனா அது? அவளை என்னால் அடையாளமே காண முடியவில்லை. அவளது சப்பாத்து அழகாகவும் புது மாதிரியாகவும் இருந்தது. தலை முடியை நீளமாக வளரவிட்டிருந்தாள். சந்தோசத்துடன் அவளிடம் ஓடினேன்.

தொடரும்…