தங்கம் வென்ற தமிழர்..!

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பராலிம் பிக்கில் (மாற்றுத் திறனாளிகள்) உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பரிசும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்தப் பராலிம்பிக்கின் ஆரம்பம் குறித்து சற்றுப் பார்ப்போம். 1948 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய லுட்விக் கட்மன் (Sir Ludwig Guttmann) அவர்களால் இந்தப் பராலிம்பிக் ஆரம்பிக்கப்பட்டது. இவர் ஒரு நரம்பியல் நிபுணர் ஆவர். இவர் தன்னுடைய நோயாளிகளின் (அதிகமானோர் காயமடைந்த இராணுவ வீரரர்கள்)  நலன் கருதி ஆரம்பத்தில் பிரித்தானிய அரசின் உதவியுடன் Stoke Mandeville Games  என்ற பெயரில் முதல் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்தார். இந்தப் பராலிம்பிக்கிற்கு முன்னதாகவே 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கைக் கால் கொண்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோர்ச் ஐசர் (German American gymnast George Eyser) ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

அதுமட்டுமல்லாது 1948 மற்றும் 1952 ஒலிம்பிக் போட்டிகளில் வலது கையை இழந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கரோலி டக்கஸ் (Karoly Takacs) குறிபார்த்துத் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் டேனி நாட்டைச் சேர்ந்த போலியோவால் பாதிக்கப்பட்ட லிஸ் ஹேர்டல் (Lis Hartel) குதிரைச்சாவாரி போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இப்பொழுது தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவருடன் களமிறங்கிய சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். இவர் வெண்கலம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாயை தமிழக அரசு பரிசாக அறிவித்துள்ளது. இந்திய விளையாட்டுத்துறை 75 இலட்ச ரூபாயைப் பரிசாக வழங்கியுள்ளது. பராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து எவரும் தங்கம் வென்றதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மாரியப்பனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்கள், உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் இருவருக்கும் வாழ்த்துகள். உங்களது வலிமை, உத்வேகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. தொடர்ந்து மிளிருங்கள், என தனது பாராட்டுகளை தெரிவித்தார். இவரோடு சேர்ந்து இன்னும் பல பிரபலங்கள் (அபினவ் பிந்த்ரா, விஜய் கோயல், சாக்சி மாலிக், விரைன் ரஸ்கினா, அமிதாப் பச்சன், அனுஸ்கா சர்மா, அரவிந்த் கேஜ்ரிவால், வீரேந்திர சேவாக்) தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த மணல் சிற்பத்தில் மூவர்ணக் கொடியின் மேலே பதக்கம் இருக்க அந்த பதக்கத்தின் மீது நாயகர்களுக்குப் பாராட்டுக்கள் என்று எழுதப்பட்டுள்ளது. மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின் கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது 21 வயதாகும் மாரியப்பன், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர். மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். மாரியப்பனின் தந்தையான தங்கவேலு, செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழ் காலை இழந்தார். காய்கனி விற்று வாழ்க்கை நடத்தும் அவரது அன்னை அவரது மருத்துவச் செலவிற்காக ரூ.3 இலட்சம் கடன் பெற்று அதனைத் திருப்புவதற்கு அல்லற்பட்டு வந்தார்.

தனது காலை இழந்த நிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் இராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14 ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத் திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தான் பயிற்சியளிக்க ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார். இப்படி ஒரு வறுமையான சூழ்நிலையில் இருந்து வந்த போதிலும் மாரியப்பன் தனக்குக் கிடைத்த நன்கொடைத் தொகையில் இருந்து தான் படித்த அரசுப் பள்ளிக்கு 30 இலட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவர் ஒரு திறமையான விளையாட்டு வீரர் மட்டுமல்லாது, ஒரு சிறந்த மனிதனாயும் இருப்பது தமிழர் அனைவருக்கும் பெருமையே.