மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 5

130

எவேர்ட்டன் வீக்ஸ் (Sir. Everton Weeks)

க்ளைட் வோல்கொட் அறிமுகமான 1948 ம் வருட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான மற்றொருவர் எவேர்ட்டன் வீக்ஸ். இவரும் வோல்கொட் போலவே பார்படோஸ் தீவிலேயே பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக உழைப்புத்தேடி இவரது தந்தையார் ட்ரினிடாட் தீவுகளுக்குக் குடிபெயர்ந்தார். புனித லெனார்ட் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே வீக்ஸ் பாடப்புத்தகங்களைவிட மைதானத்தை அதிகம் நேசிப்பவராக இருந்தார். 14 வயதிலேயே பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டு துடுப்பாட்டமும், காற்பந்தும் விளையாடிக்கொண்டு திரிந்தார். 18 வயதில் இராணுவசேவையில் தன்னை இணைத்துக்கொண்ட வீக்ஸ் 1947ம் வருடம் இராணுவ சேவையைப் பூர்த்தி செய்தார். அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்கிற காரணத்தால் பல்வேறு  புகழ்பூத்த கழகங்களுக்காக விளையாடுகிற வாய்ப்புகள் கிட்டின.

1945ரூம் ஆண்டிலிருந்தே முதற்தரப் போட்டிகளில் விளையாடி வந்தாலும் 1946/47 பருவ காலத்திலேயே மிகச்சிறப்பான பெறுதிகளை வீக்ஸ்சால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் பலனாக 1948 ம் வருடம் இங்கிலாந்தை எதிர்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியில் வீக்சுக்கு ஓரிடம் கிட்டியது.

1948 தொடரில் கென்சிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற முதற்போட்டியில் அறிமுகமான பன்னிருவரில் ஒருவரான வீக்ஸ், முதற்சில போட்டிகளில் தடுமாற்றமான ஆட்டப்பாணியை வெளிக்காட்டினார். அணியிலிருந்து நீக்காப்படுவதிலிருந்து ஜோர்ஜ் ஹெட்லிக்கு ஏற்பட்ட உபாதையின் காரணத்தால் தப்பித்துக்கொண்ட வீக்ஸ், 141 ஓட்டங்களைப் பெற்றுத் தன் இடத்தை அணியில் தக்கவைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவிற் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணிக்காக விளையாடிய வீக்ஸ், அந்தத் தொடரின் முதல் நான்கு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்ததன் மூலம், ஐந்து ஆட்டவாய்ப்புகளிற் தொடர்ந்து 100க்கு மேலான ஓட்டங்களைக் குவித்தவர் என்கிற சாதனையைத் தனதாக்கிக்கொண்டார். அதற்கடுத்துச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 90 ஓட்டங்களில் க்ஷீரஸீ-ஷீரவ முறையில் ஆட்டமிழந்திருக்காவிட்டால் ஆறாவது தொடர் சதத்தையும் குவித்திருப்பார்.

அதன் பின்னர் 1950 இல் இங்கிலாந்துக்கெதிராக இங்கிலாந்தில் வைத்து தமது முதற்சதத்தை எட்டினார். 1953 இல் இந்தியாவுக்கு எதிராக போர்ட்-ஒஃப்-ஸ்பெயினில் வைத்து தன்னுடைய அதிகபட்சப் பெறுதியான 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் வீக்ஸ். அதற்கடுத்த வருடம் அதே மைதானத்தில் இங்கிலாந்துக்கெதிராக 206 ஓட்டங்களைக் குவித்தார். 1956 இல் நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தில் வைத்து மூன்று தொடர்ச்சியான ஆட்ட வாய்ப்புகளில் சதங்களைக் கடந்தார். 1958 இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக பிறிட்ஜ்ரவுண் மைதானத்தில் வைத்து 197 ஓட்டங்களைப்பெற்றார். அந்தத் தொடரோடு தனது சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 48 போட்டிகளில் 15 சதங்கள், 19 அரைச் சதங்கள் அடங்கலாக 58.61 என்கிற சராசரியுடன் மொத்தமாக 4455 ஓட்டங்களைக் குவித்திருந்தார் வீக்ஸ். இவரது சராசரியானது துடுப்பாட்ட வரலாற்றில் நீண்டகாலம் விளையாடிய வீரர்களின் வரிசையில் 7வது இடத்தைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1964 வரையிலும் தொடர்ந்து முதற்தரப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவரது முழங்காலில் ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான உபாதை காரணமாகச் சர்வதேசப் போட்டிகளிலிருந்து வீக்ஸ் விலகியது துடுப்பாட்ட உலகுக்குப் பேரிழப்பே.

சர்வதேசப் போட்டிகளிலிருந்தான ஓய்வுக்குப் பின்னர் சில கண்காட்சிப் போட்டிகளில் வீக்ஸ் விளையாடிவந்தார். மேலும் 1979 ம் வருட உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டித்தொடரிற் பங்கேற்ற கனேடியத்துடுப்பாட்ட அணிக்குப் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். பார்படோஸ் துடுப்பாட்டச் சங்கத்திலும் சிறிதுகாலம் கடமையாற்றினார். இவரை முன்னுதாரணமாகக் கொண்டவர்கள் பலர் பின்னர் பார்படோஸ் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட அணிகளின் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும் பிற்காலத்தில் பிரகாசித்தார்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் கொன்ராட் ஹன்ரே என்கிற பார்படோஸ் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். மேலும், வீக்ஸ்சின் மகனான டேவிட் மரேயும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 1978-1982 காலப்பகுதியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1994ம் ஆண்டு சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளில் போட்டி நடுவராகவும் கடமையாற்றினார்.

தான் விளையாடிய காலகட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகவும், விளையாடிய காலகட்டத்தின் பின் நிற வெறியர்களுக்கெதிரான செயற்பாட்டாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும், நல்லெண்ணத் தூதுவராகவும் செயற்பட்ட, செயற்பட்டுக்கொண்டிருக்கும் எவெர்ட்டன் வீக்ஸ், 1995 ம் ஆண்டில் “சேர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

 (இதழ் 48 இல் தொடரும்)