உடலுக்குப் பயன்மிக்க கற்றாழை

ற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். இது ஆற்றங் கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும். பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்@. சில வகைகளில், கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம். இதில் சதையுள்ள இலைகள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து ஆழமான பச்சை வரை நிறத்தில் வேறுபடுகின்றன. சிலநேரங்களில் அவை ஒரே நிறமாகவோ பல வண்ணங்களாகவோ இருக்கலாம்.

இவை வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்புக் கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 சென்ரி மீற்றர் நீளமாகவும், சிறிய முட்களுடனும் இருக்கும். கற்றாழையின் பூக்கள், குழாய் வடிவத்திலும், அதிகமாக மஞ்சள், இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும், அடர்த்தியான கொத்துகளாகவும் இருக்கும். எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம், வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க இக்குறுஞ்செடி பல பருவங்கள் வாழக்கூடியதாகும்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங் கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் amino acids, anthrquinones, enzymes, minerals, vitamins, lignins, monosaccharide, polysaccharides, salicylic acid, saponins and sterols எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது. தளிர்பச்சை, இளம்பச்சை கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக் கற்றாழையில் முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபின் மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ் எடுப்பதற்குத் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.

கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. அலோயின் வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து வீதம் வரை கற்றாழை இலையில் காணப்படுகிறது.சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா (Gamma) மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையைக் காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக முறையாக அதன் கூழ் உலகெங்கிலும் சருமப்பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், சம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. கற்றாழை மனிதர்களின் உடலுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மருந்துவ குணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்று அறிவியல் சார்ந்த மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதரிக்கப்படுகின்றது. இலைகளில் உள்ள கூழ் (Gel) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்பு வாய்ந்த சவர்க்காரம் (Soap) வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

சில வகைகள், குறிப்பாகச் சோற்றுக் கற்றாழை மாற்று மருந்தாகவும், வீட்டு முதல் மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரளவு தெளிவுள்ள உட்புற தாவரத்தின் கூழ்மமும், கற்றாழை தாவரத்தை நசிப்பதினால் வெளியாகும் மஞ்சள் நிற அலோயின் பிசினும், தோல் சம்பந்தப்பட்ட சிக்கல்களை ஆற்றுவதற்காக உடலுக்கு வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகிறது. சமிபாட்டுக் கோளாறுகளை நீக்குவதற்காக, ஆலோ வேறா சாறு பொதுவாக மூலிகை மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

இன்றைய சூழலில், சோற்றுக் கற்றாழை, மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது மற்றும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலைகளில் காணப்படும் கூழ்மம், சிறிய எரிகாயங்கள், காயங்கள் மற்றும் படைநோய், படர்தாமரை போன்ற பல தோல் குறைகளையும் ஆற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செடியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு, பலவகையான சமிபாட்டுச் சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உட்கொள்ளப்படுகிறது. 1950களில் பல மேற்கத்திய நாடுகளில் இந்த வகை மூலிகை மருத்துவப் பயன்பாடு பிரபலமானது. கூழ்மத்தின் தாக்கம் உடனே நிகழும். இது காயங்களின் மேலே ஒரு மெல்லிய தோல் போன்ற படலத்தை ஏற்படுத்தி, நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.