மலையகத் தோட்டத் தொழிலார்களின் சம்பளப் பிரச்சினை

83

கடந்த வெள்ளிக்கிழமை(14) தோட்டத் தொழிலார்களின் சம்பளப்  பிரச்சினை குறித்து இறுதித்தீர்வை எடுக்கும் வகையில் தொழில்  அமைச்சில் இடம் பெற்ற பேச்சு வார்த்தையிலும் இறுதித்தீர்வு எட்டப்படவில்லை, எதிர்பார்த்தபடி கூட்டுஒப்பந்தம் கைச்சாதிடப்படவுமில்லை.

இப்பேச்சுவார்த்தையின் போதும், “730 ரூபா நாட்சம்பளத்திற்கு  இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் வேலை நாட்கள் தொடர்பில்  இணக்கம்  காணப்படவில்லை.” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சு வார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொண்ட போதிலும்,தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை. எனவே கூட்டுஒப்பந்தந்தில்கைச்சாத்திட முடியாது போனதாகவும், எதிர்வரும் 18 ஆம்@ திகதி கூட்டுஒப்பந்தகைச்சாத்திடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தையில் இ.தொ.காங்கிரஸ் உறுப்பினர்கள், வருடத்தில் 300 நாட்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என வலியுறத்திய போதிலும் முதலாளிமார் சம்மேளனம் வருடத்தில் 250 நாட்கள் மாத்திரமே  வேலை வழங்கும் முடிவில் உறுதியாக இருந்ததாகவே தெரிகிறது. பேச்சு வார்த்தையின் முடிவில் கருத்து வெளியட்டுள்ள தொழில் அமைச்சர் ஜோன் செவிரெட்ன, பேச்சுவார்த்தைகள் சுமூகமான நிலையில் நடைபெற்றன. தேசிய தோட்டத் தொழிலாளர்சங்கத்தின் செயலாளர்  சுரேஷ் வடிவேல் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் சகலதரப்புக்களையும் ஒன்றிணைத்து கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளோம். எனத்தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் தொழிலாளர் கோரிக்கையான 18 மாத நிலுவைப்பணம் வழங்கப்படுவது குறித்துதீர்மானங்கள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை  என்றே தெரியவருகிறது. இ.தொ.காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைக்காலக் கொடுப்பனவு தொடர்பான உடன்பாடுகளால் சம்பள நிலுவையை பெறமுடியாது  போயுள்ளது  எனக் குற்றம் சாட்டியிருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் தற்போதும் ஒரு சில இடங்களில் நடைபெற்றுவருகின்றன. எனினும் பல தோட்டங்களில்  தொழிலாளர் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள்.தொழில் அமைச்சர் ஜோன் செவிரெட்ன, பெருமளவானோர் 730 ரூபா சம்பளத்தை ஏற்றுக் கொண்டு வேலைக்குத் திரும்பியுள்ளனர். எனத் தெரிவித்திருக்கிறார். இதேவேளை,  மாத்தளையிலுள்ள எல்கடுவ பிளான்டேஷன், அரச பெருந்தோட்ட தோட்டத்தலைவர்களுக்கான ஒன்று கூடலை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு கடந்தவாரம்  15ம் திகதியன்று ஏற்பாடு செய்திருந்தது. இங்கு சகல தொழிற்சங்க தலைவர்களும்,இடது சாரிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து 1000 ரூபா சம்பளத்திற்காக போராடவும், 1000 ரூபா சம்பளம் கிடைக்க வில்லையாயின் தொழிற்சங்கங்களுக்கான தமது சந்தாவை நிறுத்துவதாகவும், இனிமேல் நடைபெறும் தேர்தல்களை புறக்கணிப்பதாகவும் அந்த ஒன்றுகூடலில் முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்த அமைப்பின் தலைமையில், யாழ் நகரில் கடந்தவாரம் மலையக தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.