‘எழுக தமிழில் மக்கள் திரள வேண்டுமென மனதார விரும்பினேன்’ வெளிப்படையாக பேசும் மாவை

302

தீபம்: தன்னை கொல்வதற்கு சதி நடப்பதாக வடக்கு முதலமைச்சரே பகிரங்கமாக கூறியிருக்கிறார். இது உண்மையெனில், பாரதூரமான விடயமல்லவா?
மாவை: முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து என்பது பாரதூரமான விடயம்.அவர் எங்களுடைய முதலமைச்சர். எங்கள் கட்சியைச் சேரந்தவர். அவரது உயிருக்கு ஆபத்து என அவரே பகிரங்கமாக முறையிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. முதல்வரின் பாதுகாப்பு தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனைச் சந்தித்து நேரடியாகத் தெரியப்படுத்தியிருப்பதுடன் கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறேன். அத்தோடு நீதியான விசாரணை நடத்தி சூத்திரதாரிகள் யார் எனக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தீபம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் திருப்திகரமானதாக உள்ளதா?
மாவை: அதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம் என்று நூற்றுக்கு நூறு வீதம் சொல்லமாட்டோம். அதற்கான ஆதாரங்களை சொல்லுவேன். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் அதில் சில விடயங்கள் ஓரளவு முன்னேற்றம் இருக்கிறதென்றும் மிகப்பெரும்பாலான விடயங்கள் நடைபெறவில்லை என்றும் கட்சித் தலைவர் சம்மந்தன் பாராளுமன்றத்திலேயே கூறியிருக்கின்றார். அடுத்தததாக ஐ.நா பொதுச் செயலாளர் பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பல விடயங்களை அரசு செய்யவில்லை என்பதை எடுத்துக் கூறியிருக்கிறோம். பௌத்த மயமாக்கல் தொடர்பிலும், தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசு இன்னும் அதிகம் அக்கறை காட்ட வேண்டுமென்பதையும் கூறியிருக்கிறோம்.

தீபம்: நல்லாட்சியில் அதிருப்தியுடன் இருப்பதாக சொல்கிறீர்கள். வழக்கம் போல இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றுமென நினைக்கிறீர்களா?
மாவை: யாழ்ப்பாணத்தில் வைத்து ஐ.நா செயலாளர் பான்கீமூனுக்கு சில விடயங்களை தெளிவாக சொல்லியுள்ளோம்.அதாவது இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றுமாக இருந்தால் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இலங்கை அரசு ஆட்சி செய்ய முடியாதளவிற்கு நாங்கள் செயற்படவேண்டியிருக்கு மென்று கூறியுள்ளோம். அது ஆயுதப் போராட்டமல்ல. ஆனால் மக்களை அணி திரட்டி போராடுவோம். அதற்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும்@ கேட்டிருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்படவிருக்கின்ற நிலையில் இந்த அரசில் நம்பிக்கை இழந்து விட்டோமென்ற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழரசுக் கட்சியோ இன்னமும் எடுக்கவில்லை.

தீபம்: அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அந்த அரசியலமைப்பு தொடர்பில் விளக்கமுடியுமா. அந்த அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றனவா?
மாவை: அரசியலமைப்பு திருத்தத்திற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறன. அந்த ஆறு குழுக்களில் நான் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றார்கள். அந்தக் குழுக்களின் அறிக்கைகள் வந்த பின்னர்தான் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் இன்றி இடைக்கால அறிக்கையை வெளியிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். அந்த வழிகாட்டல் குழு எத்தகைய அறிக்கையை தயாரிக்கப் போகின்றார்கள் என்பதை எங்களுக்குச் சொல்லும் போது தான் நாங்கள் அதனை ஏற்பதா இல்லையா, திருத்தங்களைச் சமர்ப்பப்பதா என்பதை தீர்மானிக்க முடியும். நாங்கள் சமஸ்டி தன்மை வாய்ந்த அரசியலமைப்பு முறை இருக்க வேண்டுமென்று முன்மொழிந்திருக்கின்றோம். அடுத்ததாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். எப்படி இணைப்பது என்பது தொடர்பாக ஆராய்கிறோம். இணைப்பு தொடர்பாக நான்கைந்து முன்மொழிவுகள் உள்ளன. அதில் முஸ்லிம்களுடைய உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். இப்பொது அதனை சொல்வதன் மூலம் நிறைவு பெறாத அந்த திருத்தத்தில்  இணக்கங்களை ஏற்படுத்துவதிலும் முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதிலும் பங்கம் விளைந்துவிடும என்ற காரணத்தால்தான் நாங்கள் அதனைப் பற்றி இப்போது பேசுவதை தவிரத்து வருகின்றோம்.

தீபம்: வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் மக்களின் சம்மதம் இல்லாமல் அல்லது அவர்கள் திருப்திப்படும் அதிகார அலகு வழங்கப்படாது சாத்தியப்படுமா? இணைந்த வடக்கு கிழக்கு என்றால் அதில் முஸ்லீம் மக்களின் நிலையென்ன? முஸ்லீம் மக்களின் அதிகார அலகு தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
மாவை: வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக எல்லா முஸ்லிம் கட்சிகளும் எதிர்த்திருக்கிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்குள்ளும் போட்டா போட்டிகள் இருந்து அவர்களது அரசியலுக்கும் ஏற்ப கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.  சந்திரிகா பண்டாரநாயக்கா முன்வைத்த அரசியல் தீர்வில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பான ஒரு பகுதி பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் இணக்கமும் அதற்கு கிடைத்தது. இதுபற்றிய சர்ச்சைகள் சில இப்பொழுது கிளப்பப்பட்டுமுள்ளன. வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும், இணைப்பை நடைமுறைப்படுத்தியதில்தான் தவறு என்று கூறினார்களே தவிர இணைக்கக்கூடாதென்று கூறவில்லை. மகிந்த ராஐபக்ச காலத்தில் நடத்தப்பட்ட பேச்சில் மாற்று திட்டம் பற்றி பேச்சு நடத்தினோம். மகிந்தவின் காலத்தில் இந்த விவகாரத்தை முன்னகர்த்த முடியவில்லை.

இப்போது எங்களிடமிருக்கின்ற பிரேரணைகளும் எதிர்பார்ப்புக்களும் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும். முஸ்லீம் கட்சிகளுடனும் இது பற்றி பேசி வருகிறோம். முஸ்லீம் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, பொருத்தமான அதிகார அலகொன்று உருவாகும். ஏற்கனவே சந்திரிகா பண்டார நாயக்காவால் முன்வைக்கப்பட்ட சமஷ்டித் தன்மை வாய்ந்த- ஒற்றையாட்சியை ஒழித்து பிராந்தியங்களின் ஒன்றியம்-அரசியல் தீர்விலே குறிப்பிட்டவாறு அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய முஸ்லிம் அலகை உருவாக்குவது போன்றவற்றையெல்லாம் ஆராய்கிறோம்.

தீபம்: எழுக தமிழ் பேரணி தொடர்பில் தென்னிலங்கையில் வெளியிடப்படும் எதிர்வினைகளை கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எவ்வாறு பார்க்கின்றது?
மாவை: எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் மீது  நம்பிக்கை இழந்து விட்டோம் சர்வதேசத்தில் நம்பிக்கை இழந்து விட்டோம் என்ற கருத்தை வெளியிட மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதென்பதற்காகதான் நாங்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் ஜெயசேகரம் வீட்டில் பேரவையின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியபோது தெளிவாக பலவற்றை சொல்லியிருக்கின்றோம். இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்தால் இந்த அரசியலமைப்பு எவ்வாறு அமையப் போகின்றதென்ற முடிவிற்கு நாங்கள் வரலாம். அப்பொழுது உங்களுடன் நாங்கள் கலந்து பேசுவோம். ஒத்துப் போகவில்லை என்றால் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்து பேசலாம் என்றும் கூறியிருந்தோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.புத்தர்சிலை வைப்பது தொடக்கம் அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளில் அவர்களின் நிலைப்பாட்டுடன் நாம் வேறுபடவில்லை. இந்த விடயங்களை எதிர்க் கட்சித் தலைவர்ஊடாக பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். அது சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் இந்த பிரச்சனைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினால் நாங்கள் எதிர்க்க மாட்டோம். அதனை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் குறிப்பிடுகின்றோம். மக்கள் பேரவையின் அந்தக் குழு அதனைச் செய்வது நல்லது. தாங்கள் அந்த பேரணியைச் செய்வதானது கூட்டமைப்பிற்கும் பக்க பலமாக இருக்குமென்றும் கூறியிருக்கின்றார்கள்.

எங்களுக்குள்ள கவலை அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும். பின்னர் கருத்துக் கணிப்பிற்கு போக வேண்டும். எந்த வகையிலும் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காதிருந்தால்தான் கருத்துக் கணிப்பில் வெல்ல முடியும். இதனால்த்தான் நாம் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். எழுக தமிழ் சமயத்தில் எனக்குள்ளிருந்த ஆதங்கத்தை பலருடன் பேசியிருக்கிறேன். முக்கியமான மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, எங்களுக்கும் உடன்பாடான விடயங்களை முன்வைத்து இப்படியொரு போராட்டத்தை நடத்துகிறார்கள், இதில் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டால் இந்த விடயங்களை மக்கள் ஏற்கவில்லையென்ற தவறான அபிப்பிராயம் உருவாகி, பெரும் சறுக்கல் ஏற்பட்டுவிடுமென்ற பயமிருந்தது. மக்களிற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையிருந்த நான் மக்கள் போராட்டங்களை எதிர்க்கவோ, குழப்பவோ மாட்டேன். அப்படி இப்பொழுது சிலர் குற்றம்சாட்டுவதை நினைக்கதான் கவலையாக உள்ளது.

தீபம்: முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இனவாதியாகச் சித்தரித்து தென்னிலங்கையில் போராட்டங்கள் நடக்கிறதே?
மாவை: அவ்வாறான போராட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் கூறிய கருத்துக்கள் இனவாதக் கருத்துக்கள் அல்ல. அதனை நடத்திய முறை அல்லது அந்தக் கூட்டத்தில் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டதால்தான் அப்படி யானதொரு நிலை வந்திருக்கின்றது. அவ்வாறானதொரு நிலை வந்திருந்தாலும் அவர்கள் எழுப்பிய விடயங்கள் பிழையான விடயங்கள் அல்ல.

எஸ்.என்.நிக்ஷன்